டால்பினும் கடற்பன்றியும் ஒன்றா?

டால்பினும் கடற்பன்றியும் ஒன்றா?

Published on

விளையாட்டுத்தனமும் புத்தி சாதுர்யமும் கொண்ட டால்பின்களும் (ஓங்கில்) கடற்பன்றிகளும் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களுக்கும் மிகவும் பிடித்தவை. ஆனால், டால்பின்களும் கடற்பன்றிகளும் ஒன்றல்ல. பார்ப்பதற்கு ஒன்றாகத் தெரிந்தாலும் இரண்டும் வெவ்வேறு. டால்பின் மற்றும் கடற்பன்றியின் மூக்கைக் கூர்ந்து பார்த்தால் இதைத் தெரிந்துகொள்ள முடியும். டால்பின், கடற்பன்றியின் ஒற்றுமைகள், வேற்றுமைகளைப் பார்ப்போமா?

ஒற்றுமைகள்

# டால்பினும் கடற்பன்றியும் பாலூட்டிகள். இரண்டு உயிரினங்களும் கடலில் வாழ்ந்தாலும் அவை இரண்டுமே மீன் இனத்தைச் சேர்ந்தவை அல்ல.

# எல்லாப் பாலூட்டிகளையும் போல இவற்றுக்கும் சுவாசிக்க நுரையீரல்கள் உண்டு. டால்பின் மற்றும் கடற்பன்றி குட்டி போட்டுப் பாலூட்டும் உயிரினங்கள்.

# விஞ்ஞான ரீதியாக சீடேசியக் குடும்பத்தைச் சேர்ந்தவைதான் டால்பினும் கடற்பன்றியும். இதே குடும்பத்தைச் சேர்ந்தவைதான் அனைத்து வகையான திமிங்கலங்களும்கூட. டால்பின்களும் கடற்பன்றிகளும் திமிங்கலங்களின் உறவினர்கள்தான்.

# சீடேசியக் குடும்பத்தின் துணைக் குடும்பம்தான் ஓடென்டோசேடி. இந்த ஓடென்டோசேடி துணைக் குடும்பத்தைச் சேர்ந்த உயிரினங்கள்தான் டால்பின்கள், கடற்பன்றிகள். இந்தத் துணைக் குடும்பத்தைச் சேர்ந்த உயிரினங்களால் எதிரொலிகளைப் பயன்படுத்தி எதிரிலுள்ள பொருட்களை அடையாளம் காண முடியும்.

வேற்றுமைகள்

# கடற்பன்றிகள் டால்பின்களைவிடச் சிறியவை. டால்பின்கள் பத்து அடிக்கும் மேல் வளர்பவை. கடற்பன்றிகளோ ஏழு அடிக்கு மேல் வளர்வதேயில்லை.

# டால்பின்கள் மெலிந்த உடலமைப்பைக் கொண்டவை. கடற்பன்றிகளோ சற்று குண்டாக இருக்கும்.

# டால்பின்களுக்குப் பறவைகளின் அலகைப் போல கூர்மையான மூக்கு நுனிகள் உண்டு. கடற்பன்றியோ உருண்டை வடிவ நாசிகளைக் கொண்டவை.

# கடற்பன்றிகளுக்கு முக்கோண வடிவத்தில் முதுகுப்புறத் துடுப்புகள் உள்ளன. டால்பின்களுக்கோ அலையைப் போன்ற வளைந்த துடுப்புகள்.

# கடற்பன்றிகளின் பற்கள் தட்டையாகவும் முக்கோணமாகவும் இருக்கும். டால்பினின் பற்களோ கூம்பு வடிவத்தில் இருக்கும்.

# டால்பின்கள் கூட்டமாக வாழ்பவை. மனிதர்களைப் பார்த்தால் பயப்படாது. மனிதர்களுடன் பழகும் தன்மையுடயவை. படகுகளுடன் சேர்ந்தே கரைக்கு வருபவை. கடற்பன்றிகளோ சிறு குழுக்களாக வாழ்பவை. இரண்டு அல்லது நான்காகத்தான் அதிகபட்சமாக இருக்கும். கூச்ச சுபாவம் கொண்டவையும் கூட. கடலுக்கு மேல் சுவாசிப்பதற்குத் தவிர அதிகம் பார்க்க முடியாது. கடல் கண்காட்சிகளில் விளையாட்டுகளில் ஈடுபடுபவை டால்பின்கள் மட்டுமே.

# கடற்பன்றிகள் 15 முதல் 20 ஆண்டுகள் வரைதான் வாழும். டால்பின்களோ 50 ஆண்டுகளுக்கும் மேல் வாழக்கூடியவை. கடற்பன்றிகள் தாம் வாழும் காலத்தில் அதிக இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு நிறைய குட்டிகளைப் பெறுவதால் அவற்றின் ஆயுட்காலம் குறைவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

# டால்பின்கள், மனிதர்கள் கேட்கும் வகையில் சப்தங்களை உருவாக்கக் கூடியவை. அதனால்தான் டால்பின்கள் விளையாட்டுத்தனம் நிரம்பியவையாக மனிதர்களால் கருதப்படுகின்றன. கடற்பன்றிகளோ, மனிதர்கள் கேட்காத வகையில் சப்தங்களை உருவாக்குகின்றன.

# டால்பின்கள் விசில்கள், கீச்கீச்சுகள் என வகைவகையான ஒலிகளை உருவாக்கி தங்கள் கூட்டத்தில் உள்ள மற்ற டால்பின்களைத் தொடர்பு கொள்கின்றன. கடலில் எதிரே வரும் பிற கூட்டத்து டால்பின்களுக்கும் செய்திகளைப் பரிமாறுகின்றன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in