Published : 22 Sep 2021 03:04 AM
Last Updated : 22 Sep 2021 03:04 AM

டிங்குவிடம் கேளுங்கள் - முடி நரைப்பது ஏன்?

பருந்துப் பார்வை என்றால் என்ன, டிங்கு?

- ஜி. இனியா, 5-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

நாம் நிலத்தில் வாழ்கிறோம். ஓரிடத்தில் நின்றால் நம்மால் குறிப்பிட்ட தொலைவு வரைதான் பார்க்க முடியும். பறவைகள் வானில் பறக்கக்கூடியவை. அதிலும் பருந்துகள் மிக உயரமாகப் பறக்கக்கூடியவை. மிக உயரத்தில் பறக்கும்போது, நிலத்தில் நீண்ட தொலைவைப் பார்க்க முடியும். மனிதர்களைவிட எட்டு மடங்கு பார்வைத்திறன் அதிகம் கொண்டது பருந்து. உயரத்திலிருந்து நிலத்தைப் பார்த்தாலும் ஓடும் எலி, துள்ளிக் குதிக்கும் சிறு முயல் போன்றவற்றைத் துல்லியமாகப் பருந்தால் பார்க்க முடியும். இரையைக் கண்டவுடன் வேகமாக வந்து, இலக்கை அடைந்து, இரையைக் கவ்விக்கொண்டு சென்றுவிடும். பருந்துப் பார்வை என்பது மேலிருந்து கீழ் நோக்கித் துல்லியமாகப் பார்ப்பதைக் குறிப்பிடுகிறார்கள், இனியா.

வயதானால் நரைப்பது ஏன், டிங்கு?

- என். ராஜேந்திரன், 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, திருவையாறு.

முடிக்கு நிறத்தைக் கொடுப்பது மெலனின். இதில் ஐவகை அடிப்படை நிறமிகள் இருக்கின்றன. தலைமுடி கறுப்பாக இருப்பதற்குக் காரணம் யூமெலனின் என்கிற நிறமிதான். பொமெலனின் என்கிற நிறமி முடிக்குப் பழுப்பு நிறத்தை அளிக்கிறது. இந்தியர்களின் மரபணுவில் யூமெலனின் அதிகமாக இருப்பதால் முடி கறுப்பாக இருக்கிறது. முதுமை அடையும்போது தலைமுடியின் வேர்ப்பகுதியில் உருவாகும் நிறமிச் சுரப்பு கொஞ்சம் கொஞ்சமாக நின்றுபோகும். இதனால் தலைமுடி கறுப்பு வண்ணத்தை இழந்து, வெள்ளையாக மாற ஆரம்பிக்கும். நிறமிச் சுரப்பு முழுமையாக நின்றுவிட்டால், முடியும் முழுமையாக வெள்ளை நிறத்துக்கு மாறிவிடும், ராஜேந்திரன்.

நம் சமூகத்தில் ஏன் விமர்சனம் இருக்கிறது, டிங்கு?

- இ. ஃபவாஸ் அகமது, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பள்ளி, திருச்சி.

நம் சமூகத்தில் மட்டுமல்ல, மனிதர்கள் வசிக்கக்கூடிய அனைத்து இடங்களிலும் விமர்சனங்களும் இருக்கின்றன ஃபவாஸ் அகமது. ஒரு மனிதரைப் போல் இன்னொரு மனிதர் சிந்திப்பதில்லை. அதனால், ஒருவர் செய்யும் செயல், பேச்சு, சிந்தனை போன்றவை எல்லாம், இன்னொருவரால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாமல் போகும்போது, அங்கே விமர்சனம் உருவாகிறது. இந்த விமர்சனங்களைத் தடுக்க இயலாது. விமர்சனங்களால் நல்லதும் நடக்கலாம்; கெட்டதும் நடக்கலாம். அதாவது நல்ல, ஆரோக்கியமான விமர்சனங்கள் நம்மை இன்னும் உயரத்துக்குக் கொண்டு செல்லலாம். காழ்ப்புணர்ச்சியால் சொல்லப்படும் விமர்சனங்கள் நம்மை முடக்கிவிடலாம். நாம்தான் விமர்சனங்களில் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாகப் பிறர் செய்யும் விமர்சனங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, நம்மைக் கஷ்டப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை. நம் மீது அக்கறையுடன் சொல்லப்படும் விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு, நம்மை இன்னும் மெருகேற்றிக்கொள்வதில் தவறு இல்லை. சரியில்லாத விமர்சனங்களைக் கண்டுகொள்ளவும் வேண்டியதில்லை.

எளிய கேள்வி, கடினமான கேள்வி ஆகிய இரண்டில் உனக்குப் பிடித்தது எது, டிங்கு?

- கே. செளமியா, 7-ம் வகுப்பு, செயின்ட் ஜோசப் பள்ளி, தஞ்சாவூர்.

எளிய கேள்விக்கு எளிதாகப் பதில் சொல்லிவிட முடியும், நேரமும் மிச்சமாகும் என்றாலும் என்னுடைய விருப்பம் கடினமான கேள்விதான். கடினமான கேள்விக்குப் பதில் சொல்லும்போது நானும் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது. படிப்பவர்களுக்கும் அந்த விஷயம் சுவாரசி யத்தைக் கொடுக்கும், செளமியா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x