

நடக்கும் திமிங்கலங்கள்
எகிப்து நாட்டில் முதல் முறையாகப் புதைபடிமங்களுக்கான அருங்காட்சியகத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். கெய்ரோவிலிருந்து 150 கி.மீ. தூரத்தில் உள்ள வாடி அல் ஹிடன் என்ற பாலைவனப் பள்ளத்தாக்கில்தான் இந்த அருங்காட்சியகம் உள்ளது. ஒரு காலத்தில் நிலத்தில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் நடக்கும் திமிங்கலங்களின் எலும்புகள், புதைபடிமங்களாக இங்கே வைக்கப்பட்டிருக்கின்றன.
20 மீட்டர் நீளத்தில் 3.7 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நடக்கும் திமிங்கலம் ஒன்றின் புதைபடிமம் அருங்காட்சியகத்தின் மத்தியில் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திமிங்கலத்துக்கு முன்னங்கால்கள் போன்ற உறுப்புகள் காணப்படுகின்றன. ஒரு காலத்தில் நிலத்தில் வாழ்ந்த திமிங்கலங்கள், பிறகு நீர்வாழ் விலங்குகளாக மாறியிருக்கின்றன என்பதை ஆதாரங்களுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
சுட்டெரிக்கும் பாலைவனத்தில் எப்படித் திமிங்கலங்களின் எலும்புகள் கிடைத்தன? நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் டெதிஸ் என்ற கடல் இருந்திருக்கிறது. காலப்போக்கில் கடல் மறைந்துவிட்டது.
திமிங்கலங்கள் மட்டுமல்ல, நிலத்திலிருந்து நீருக்குச் சென்ற பல விலங்குகளின் புதைபடிமங்கள் இங்கே வைக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான திமிங்கலங்களின் எலும்புகள், நல்ல நிலையில் பாறைகளாக மாறியிருக்கின்றன. சில எலும்புகள் கண்ணாடி அறைகளுக்குள் வைக்கப்பட்டிருக்கின்றன. சில எலும்புகள் அப்படியே கண்டுபிடித்த இடங்களிலேயே விடப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்துக்குச் சென்றுவந்தால், வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்துக்குச் சென்று வந்தது போன்ற அனுபவம் கிடைக்குமாம்!
கடலுக்குள் தலைவர்கள்!
க்ரிமியாவில் கேப் டர்கான்கட் கடற்பகுதி இருக்கிறது. இங்கே 10 முதல் 12 மீட்டர் ஆழத்தில் சிற்பங்களுக்கான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது. 50-க்கும் மேற்பட்ட மார்பளவு சிற்பங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இங்கிருக்கும் முன்னாள் சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த தலைவர்கள் லெனின், ஸ்டாலினிலிருந்து மார்க்சியத் தந்தை கார்ல் மார்க்ஸ்வரை ஏராளமானவர்களின் மார்பளவு சிற்பங்கள் ஆச்சரியத்தை அளிக்கின்றன.
தலைவர்களின் சிற்பங்கள் தவிர, உலகின் மிக முக்கியமான அடையாளங்களான ஈபிள் டவர், லண்டன் டவர் ஃபிரிட்ஜ் போன்றவையும் இங்கே இடம்பெற்றுள்ளன. 1992-ம் ஆண்டு ஸ்கூபா டைவர் விளாடிமிர் ப்ரொமென்ஸ்கி என்பவரால் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது.
கேப் டர்கான்கட் கடல் பகுதி ஸ்கூபா டைவிங்குக்கு மிகவும் புகழ்பெற்ற இடம். இங்கே தண்ணீர் படிகம் போலக் காட்சியளிக்கும். கடலுக்குள் இருக்கும் சிற்பங்களை எளிதாகக் கண்டு ரசிக்க முடியும். உலகிலேயே கடலுக்குள் இருக்கும் ஒரே அருங்காட்சியகம் இதுதான். இன்று உலகம் முழுவதும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த அருங்காட்சியகத்தைப் பார்ப்பதற்காக வருகிறார்கள்.