புதிய கண்டுபிடிப்புகள்: பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் உயிர்த்தெழும் உயிரிகள்!

ஸ்டாஸ் மாலவின்
ஸ்டாஸ் மாலவின்
Updated on
2 min read

கனி மீண்டும் காய் ஆகாது; கருவாடு மீண்டும் மீன் ஆகாது. ஆனால், சுமார் 24,000 ஆண்டுகளுக்கு முன்னால் ஆழ்ந்த உறக்கத்துக்குச் சென்ற சில நுண்ணுயிரிகள் மறுபடி விழித்துக்கொள்ளும் என்று தொல்லுயிர் ஆய்வாளர் ஸ்டாஸ் மாலவின் கண்டறிந்துள்ளார். ரஷ்யாவின் புஷ்சினோ நகரில் உள்ள மண் அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் இவர் பணிபுரிகிறார். சைபீரிய நிலத்தடி உறைபனி (Permafrost) பகுதியில் உறக்க நிலையில் இருந்த ரோட்டிஃபர் வகை பல செல் நுண்ணுயிரி, பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, புவி வெப்பமடைதலில் பனி உருகவும் மீண்டும் விழித்துக்கொண்டுள்ளது என்று கண்டுபிடித்துள்ளார்.

மீள் செயலாற்றும் இந்த உயிரிகள் எப்படி இறந்து போகாமல் பல ஆயிரம் ஆண்டுகள் உறக்க நிலையில் உள்ளன என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிந்தால், எதிர்காலத்தில் விண்மீன்களுக்குப் பயணம் செல்ல உதவியாக இருக்கும் என்கிறார் மாலவின்.

உலகெங்கும் நீர்நிலைகளில் வெகு சாதாரணமாகக் காணப்படும் பல செல் உயிரிதான் ரோட்டிஃபர். கோடையில் நீர்நிலைகள் வற்றினால் இந்த வகை நுண்ணுயிரி ஆழ் உறக்க நிலைக்குச் சென்றுவிடும். கிரிப்டோபயோசிஸ் எனப்படும் இந்த நிலையில் இவற்றின் உயிரிச் செயல்கள் கிட்டத்தட்ட முடங்கிவிடும். மறுபடி அந்த நீர்நிலையில் நீர்வரத்து அதிகரிக்கும்போது இவை உயிர்த் தெழும்.

சைபீரிய நிலத்தடி உறைபனி பகுதியில் காணப்பட்ட டெல்டாய்டு வகை ரோட்டிஃபர்களின் கூரிய முனைப் பகுதி கல், பாறை போன்றவற்றைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள உதவும். சல்லடை போன்ற வாய்ப் பகுதி வழியே நீர் கடந்து செல்லும்போது, பாசி போன்ற நுண்ணுயிரிகளை வடிகட்டி உண்ணும். இந்த உயிரியில் ஆண்களே கிடையாது! எல்லாமே பெண்கள்தாம். தாமாகவே இனப்பெருக்கம் (Parthenogenesis) செய்து, குட்டிகளை உருவாக்குகின்றன.

18,00,000 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய நிலவியல் காலத்தில்தான் (ப்ளீஸ்டோசீன்) சைபீரியப் பனிப் பாலைவனம் உருவானது. இதுதான் பனியுகம். பூமியில் பெரும்பகுதி பனி படர்ந்து இருந்தது. இந்தப் பனியுறைக் காலம் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்தது. அதன் பிறகு சற்றே இளம் வெப்பநிலையில் பூமி இருந்தது. இதனைப் பனியுக இடைக்காலம் என்பார்கள். சைபீரியப் பனிப் பாலைவனத்தில் திரவ நீர் அகன்று அங்கே திடவடிவில் பனி உருவானபோது ரோட்டிஃபர்கள் ஆழ்ந்த உறக்கத்துக்குச் சென்றன.

பல ஆயிரம் ஆண்டுகள் உறைந்த நிலையில் இருக்கும் இந்தப் பகுதியில் 3.5 மீட்டர் ஆழத்துக்குத் துளையிட்டு, பனி கலந்த மண்ணை எடுத்துப் பரிசோதனை செய்தார்கள். உறைகுளிர் வெப்ப நிலையில் இருந்த இந்த மண்ணை இயல்பு அறை வெப்பநிலைக்குக் கொண்டுவந்தார்கள். சுமார் ஐந்து வாரத்துக்கு ஒவ்வொரு நாளும் உறைநிலை குளிர் விலகி உருகும் மண்ணைப் பரிசோதனை செய்தனர். இறுதில் பல ரோட்டிஃபர்கள் ஆழ் உறக்க நிலையிலிருந்து விழித்துச் செயல்படுவதைக் கண்டனர்.

சைபீரியப் பனிப்பாலைவனத்தின் சில பகுதிகளில் 4,00,000 ஆண்டுகள் தொன்மையான மண் மாதிரிகளை, கார்பன் காலக் கணிப்புத் தொழில்நுட்பம் வழியே இனம் கண்டுள்ளனர். சில இடங்களில் சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு மடிந்த உயிரியின் தொல் எச்சம் கிடைத்துள்ளது. மறுபடி உயிர்த்தெழுந்த ரோட்டிஃபர்கள் இருந்த மண் மாதிரியை கார்பன் காலக் கணிப்பு முறை மூலம் அளந்தபோது, அவை சுமார் 24,000 ஆண்டுகளுக்கு முன்பு உறக்க நிலைக்குச் சென்றவை என்று கண்டறிந்துள்ளனர்.

இதுவரை டெல்டாய்டு ரோட்டிஃபர்கள், கிரிப்டோபயோசிஸ் நிலைக்குச் சென்று கூடுதலாகச் சில பத்தாண்டுகள் கடந்த பின்னர் மட்டுமே மறுபடி மீண்டெழும் ஆற்றலைப் பெற்று இருக்கும் என்று அறிவியல் உலகம் கருதியிருந்தது. சில பத்தாயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரும் இவை மறுபடி செயல்படமுடிவதைக் கண்டு அறிவியல் உலகம் வியந்திருக்கிறது. சிதையாமல் செல் அளவில் இவை இவ்வளவு காலம் உயிர்ப்போடு இருப்பது எப்படி என்று ஆய்வுகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

சூரியனுக்கு மிக அருகில் உள்ள ப்ராக்ஸிமா சென்டாரி விண்மீனிலிருந்து ஒளி நம்மை வந்து அடைய சுமார் 4.246 ஆண்டுகள் ஆகும். ஒரு நொடியில் 17.3 கிமீ வேகத்தில் செல்லும் வாயேஜர் விண்கலம் இந்த விண்மீனை அடைய 73,000 ஆண்டுகள் ஆகும். ஒளியின் வேகத்தில் சென்றால்கூட ஐந்து ஆண்டுகள் ஆகும். எனவே பல நூறு ஆயிரம் ஆண்டுகள் பயணம் செய்தால்தான் விண்மீன்களுக்குச் செல்லும் விண்வெளிப் பயணம் சாத்தியம். அவ்வளவு நாட்கள் வாழ்வது சாத்தியம் இல்லை. எனவே, பல உயிரிகள் ஆழ் உறக்க நிலைக்குச் சென்று விழித்துக்கொள்வதுபோல, விண்வெளி வீரர்களை உறக்கத்தில் ஆழ்த்தி மறுபடி விழிக்க வைக்க வேண்டும். இந்த ஆய்வின் மூலம் எதிர்காலத்தில் இதற்கு விடை கிடைக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

கட்டுரையாளர், விஞ்ஞானி தொடர்புக்கு: tvv123@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in