பாலபாரதிக்கு பால சாகித்ய விருது!

யெஸ். பாலபாரதி
யெஸ். பாலபாரதி
Updated on
1 min read

பால சாகித்ய புரஸ்கார் என்கிற விருதைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? சாகித்ய அகாடமி என்பது இலக்கியத்துக்கான அரசு அமைப்பு. அந்த அமைப்பு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது, யுவ புரஸ்கார், பால சாகித்ய புரஸ்கார் ஆகிய விருதுகளை இந்தியாவின் முதன்மை மொழிப் படைப்புகளுக்கு வழங்கிவருகிறது.

பால சாகித்ய புரஸ்கார் என்பது சிறார் எழுத்தாளர்களுக்கான விருது. தமிழில் 2020ஆம் ஆண்டுக்கான இந்த விருதைப் பெற இருப்பவர் பத்திரிகையாளர் யெஸ். பாலபாரதி.‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’(வானம் வெளியீடு, தொடர்புக்கு: 91765 49991) என்கிற நூலுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

‘சரியான தொடுதல்‘, ‘தவறான தொடுதல்’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அனைவரையும் மதிக்கக்கூடிய சமூக நடைமுறை என்றிருக்கிறது. அதன்படி சிறியவரோ, பெரியவரோ ஒருவரைச் சரியான வகையில் மற்றொருவர் தொடலாம், தன் அன்பை வெளிக்காட்டலாம். அதேநேரம் யாராக இருந்தாலும் தவறான வகையில் நம் உடலைத் தொட அனுமதிக்கக் கூடாது. அப்படி உங்களை யாராவது தவறான வகையில் தொடுகிறார்கள் என்றால், உங்களிடம் பேசுகிறார்கள் என்றால் பேசாமல் இருக்கக் கூடாது. முதலில் அதைத் தடுக்க வேண்டும், எதிர்க்க வேண்டும். பிறகு அம்மா, அப்பா, நமக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவிக்க வேண்டும். இந்த விஷயங்களை எல்லாம் ஒரு கதைப் போக்கில் குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் கூறும் நூல்தான் ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்‘.

பூஜா என்கிற மாணவிக்கு, அவர்களது வீட்டுத் தரைத்தளத்தில் வசிக்கும் பெரியவர் பாலியல் தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கிறார். இதனால் உளவியல்ரீதியில் பூஜா பாதிக்கப்படுகிறாள். ஆனால், வழக்கம்போல் பெரியவரின் மிரட்டலால், அதை வெளியில் சொல்வதற்கு பயப்படுகிறாள். இதனால் பூஜா குழப்பமான மனநிலைக்கும் ஆளாகிறாள். இதிலிருந்து அவள் எப்படி விடுபடுகிறாள் என்பதே கதை.

இதுபோன்ற பிரச்சினைகள் வளர்ந்துவரும் குழந்தையின் மனத்தைப் பெரிதும் பாதிக்கக்கூடியவை. எனவே, பெற்றோர் மட்டுமில்லாமல் குழந்தைகளும் இந்தப் பிரச்சினைகளின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ள வேண்டுமென செயற்பாட்டாளர்கள் நீண்டகாலமாக வலியுறுத்திவருகிறார்கள். அதைக் கதை வழியாகச் சொல்லியிருப்பதன் மூலம் ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’, இந்தப் பிரச்சினையை உரிய வகையில் குழந்தைகளிடம் கொண்டுபோய் சேர்த்துள்ளது. பெற்றோர், ஆசிரியர், பதின் வயது சிறுவர்-சிறுமிகள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.

குழந்தைகள் பாலியல் சித்திரவதை குறித்துத் தமிழில் நேரடியாக பேசியுள்ள இந்த நூல், ஒரு முன்னோடி முயற்சி என்பதில் சந்தேகமில்லை. அந்த முன்னோடி முயற்சியைச் சரியாக அங்கீகரிக்கும் வகையில் பால சாகித்ய விருதுக்குத் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த நூல் ஏற்கெனவே மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’ போல் தமிழில் இன்னும் பல நூல்கள் வர வேண்டும். யெஸ். பாலபாரதி மாமாவுக்கு நீங்கள் எல்லாம் வாழ்த்துச் சொல்வதுடன், இந்த நூலைப் படித்து உங்கள் வயதுக் குழந்தைகளிடம் இதைப் பற்றிப் பேசி, நம் சமூகத்தில் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க முயல வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in