

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தனது 8-வது பிறந்த நாளைக் கொண்டாட ஆவலாக இருந்தாள் மது. அப்படி என்ன விசேஷம்? மதுவின் பிறந்த நாள் பிப்ரவரி 29, 2008. உலகில் இதுவரை பிப்ரவரி 29 அன்று பிறந்த லட்சக்கணக்கானோர் தங்களது சரியான பிறந்த நாளை நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வரும் லீப் நாளில்தான் கொண்டாடிவருகின்றனர். லீப் ஆண்டு அவர்களுக்கு விசேஷமானது.
2012-ல் மதுவின் நான்காவது பிறந்த நாள் கொண்டாடப்படும் சமயத்தில் லீப் நாள், லீப் ஆண்டு பற்றியெல்லாம் அவளுக்குத் தெரியாது. ஆனால் இப்போது மதுவின் அம்மா பத்மா லீப் நாள், லீப் ஆண்டு பற்றியெல்லாம் அவளுக்கு விளக்கமாகப் பல விஷயங்களைக் கூறியுள்ளார். அது பற்றி மது தனது குறிப்பேட்டில் எழுதியும் வைத்திருக்கிறாள். அதைத்தான் கீழே படிக்கிறீர்கள்:
இதுதான் லீப்
ஒரு வருடத்தில் பூமி சூரியனை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரம் 365 நாட்கள், 5 மணி நேரம், 48 நிமிடங்கள் மற்றும் 46 விநாடிகள். உதிரியாக இருக்கும் மணி நேரம், நிமிடங்கள், விநாடிகளை நான்கால் பெருக்கினால் வருகிற ஒரு நாள்தான் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை வரும் லீப் நாள்.
இன்று பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது கிரிகோரியன் நாட்காட்டி. இந்த நாட்காட்டியில் பிப்ரவரி மாதத்துக்கு நான்காண்டுகளுக்கு ஒரு முறை கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் நான்கால் வகுபடும் ஆண்டுகளிலேயே இந்த லீப் ஆண்டு வருகிறது. அதுவே நூற்றாண்டு ஆண்டுகள் என்றால், 400 ஆல் வகுபடும் ஆண்டுகளுக்கு மட்டுமே கூடுதலாக இந்த ஒரு நாள் சேர்க்கப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு 1600, 2000 ஆண்டுகள் லீப் ஆண்டுகள். ஆனால் 1700, 1800, 1900 ஆண்டுகள் லீப் ஆண்டுகள் கிடையாது.
ஏன் இப்படி?
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளை (பிப்ரவரி 29) சேர்க்கையில், 100 ஆண்டுகளில் 18 மணி 43 வினாடிகள் அதிகமாக சேர்க்கப்படுகிறது. இதை சமன் செய்யவே நூறு வருடங்களுக்கு ஒரு முறை லீப் ஆண்டு கணக்கில் கொள்ளப்படுவதில்லை.
எல்லாம் சரி, லீப் நாளில் பிறந்தவர்கள் லீப் ஆண்டுகள் தவிர மற்ற ஆண்டுகளில் எந்த நாளில் பிறந்த நாளை கொண்டாடுவார்கள்? பெரும்பாலும் மார்ச் 1-ம் தேதிதான். இந்த விசேஷ நாளில் பிறந்தவர்கள், இந்த முறை அவர்கள் பிறந்த நாளிலேயே கொண்டாடலாம் என்பதால், அவர்களுக்கு சிறப்புப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
(பின்குறிப்பு: லீப் நாளில் பிறந்தவர்கள் தங்கள் பிறந்த நாளை ஆண்டுதோறும் கொண்டாட ஒரு வழி இருக்கிறது. ஆம், தமிழ் மாதங்களின் கணக்குப்படி உங்கள் பிறந்தநாளைக் கொண்டாடலாமே!)