Published : 18 Aug 2021 06:39 AM
Last Updated : 18 Aug 2021 06:39 AM

இந்திய சுதந்திரம் 75

தொகுப்பு:எஸ்.சுஜாதா

இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் சுரையா தியாப்ஜி.

1. ஒரு மனிதனுக்குச் சுதந்திரம் எவ்வளவு முக்கியமோ அதே போல ஒரு நாட்டுக்கும் சுதந்திரம் முக்கியம். உலகின் மிகப் பெரிய ஜனநாயகக் குடியரசான இந்தியாவில்தான் நாம் எல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால், உங்கள் தாத்தா, பாட்டிகள், அவர்களுடைய பெற்றோர் எல்லாம் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் அடிமையாக வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

2. வளம் மிக்க இந்தியாவை நாடி போர்த்துக்கீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஐரோப்பியர்கள் வந்து கொண்டிருந்தார்கள். பிரிட்டனைச் சேர்ந்த கிழக்கிந்திய நிறுவனத்தால் அனுப்பப்பட்ட ராபர்ட் க்ளைவ் படை, 1757ஆம் ஆண்டு பிளாசிப் போரில் வங்காள நவாப்பைத் தோற்கடித்தது. இதன் மூலம் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி காலூன்றியது. கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் பிற பகுதிகளையும் தங்களின் ஆட்சிக்குள் கொண்டு வந்தது.

3. 1780ஆம் ஆண்டு கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார் சிவகங்கை ராணி வேலுநாச்சியார். இவரே இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனை. இவருக்குத் திப்புசுல்தானின் தந்தை ஹைதர் அலி, படைகளைக் கொடுத்து உதவினார்.

4. இந்தியாவின் பிற பகுதி மன்னர்களைப் போல அல்லாமல், ஆங்கில அரசாங்கத்துக்கு அச்சத்தை ஏற்படுத்தினார் மைசூரை ஆண்ட திப்புசுல்தான். இவரின் சொந்த ஏவுகணை தொழில்நுட்பத்தைக் கண்டு ஆங்கிலேயரே ஆச்சரியப்பட்டனர். போரில் கொல்லப்பட்டாலும் திப்புசுல்தான் ஏற்றி வைத்த ‘சுதந்திரத் தீ’ இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பரவியது.

5. 1806ஆம் ஆண்டு இந்தியப் படைகள் ஐரோப்பிய உடைகளை அணிய வேண்டும், மத அடையாளங்களை வைத்துக்கொள்ளக் கூடாது என்று ஆங்கிலேயரிடமிருந்து உத்தரவு வந்தது. இதை எதிர்த்து வேலூர்க் கோட்டையில் சிப்பாய் கலகம் வெடித்தது. இதுவே பின்னால் வந்த சிப்பாய் புரட்சிக்கு முன்னோடி.

6. தீரன் சின்னமலை, வீரபாண்டிய கட்டபொம்மன், கர்நாடகத்தின் கிட்டூர் சென்னம்மா போன்றவர்கள் ஆங்கிலேயப் படைகளைத் துணிச்சலாக எதிர்த்தனர்.

7. 1857... துப்பாக்கிக் குண்டுகளில் பசு, பன்றியின் கொழுப்பு தடவப்பட்டதாக வதந்தி கிளம்பியது. இதை எதிர்த்து சிப்பாய்கள் கலகம் செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன. ஆங்கிலேயர்கள் இரும்புக்கரம் கொண்டு போராட்டக்காரர்களை அடக்கினர்.

8. 1858ஆம் ஆண்டு குவாலியரில் நடைபெற்ற போரில் ஜான்சியின் ராணி லஷ்மிபாய் கொல்லப்பட்டார்.

9. இதுவரை கிழக்கிந்திய நிறுவனம் மூலம் ஆட்சி செய்துகொண்டிருந்த ஆங்கிலேய அரசாங்கம், நேரடியான ஆட்சிக்குக் கீழ் இந்தியாவைக் கொண்டுவந்தது. 1877ஆம் ஆண்டு விக்டோரியா ராணி இந்தியாவின் மகாராணியானார்.

10. பால கங்காதர திலகரின் ‘சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை’ என்கிற கோஷம் நாடு முழுவதும் பரவியது.

11. விவேகானந்தர், லாலா லஜபதி ராய், பிபின் சந்திரபால், வ.உ.சிதம்பரனார், பாரதியார், அரவிந்தர், சுப்பிரமணிய சிவா, பக்கிம் சந்திர சட்டர்ஜி, ரவீந்திரநாத் தாகூர், தாதாபாஜ் நவ்ரோஜி போன்றவர்களின் பேச்சும் எழுத்தும் செயலும் மக்களிடம் சுதந்திர உணர்வை ஊட்டின.

12. 1905ஆம் ஆண்டு வங்காளம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்துக்கும் வழிவகுத்தது.

13. தென்னாப்பிரிக்காவில் நிறவெறி எதிர்ப்பு இயக்கத்தின் தலைவராக இருந்த காந்தி, இந்தியாவுக்கு வந்தார். கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோரைச் சந்தித்தார். இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து, ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் இறங்கினார். ‘சத்தியாகிரகம்’ என்கிற வன்முறைகளற்ற போராட்ட வடிவத்தை உருவாக்கினார்.

14. ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்படுபவர்களை விசாரணை இன்றி, இரண்டு ஆண்டுகள் வரை சிறையிலடைக்கும் ‘ரெளலட் சட்டம்’ கொண்டு வரப்பட்டது.

15. அடக்குமுறை அதிகரிக்க அதிகரிக்க எதிர்ப்புப் போராட்டங்களும் வலுப்பெற்றன. 1919ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் திடலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். ஆங்கிலேய ராணுவ ஜெனரல் ரெஜினால்ட் டையர் முன்னறிவிப்பு இன்றி, மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நிகழ்த்த உத்தரவிட்டார். நூற்றுக்கணக்கான மக்கள் மடிந்தார்கள். இந்தப் படுகொலை நாட்டையே உலுக்கியது. போராட்டங்கள் தீவிரமடைந்தன.

16. 1929ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் நாடு முழுவதும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக ‘ஒத்துழையாமை’ இயக்கத்தை ஆரம்பித்தது. ஆங்கிலேயக் கல்வி நிறுவனங்களையும் நீதிமன்றகளையும் புறக்கணித்தல், அரசு வேலைகளை ராஜினாமா செய்தல், வரி செலுத்த மறுத்தல், ஆங்கிலேயர்களின் கௌரவப் பட்டங்களைத் துறத்தல் போன்றவை செயல்படுத்தப்பட்டன.

17. 1930ஆம் ஆண்டு உப்புக்கு வரி விதித்தது ஆங்கிலேய அரசு. காந்தி உப்புச் சத்தியாகிரகத்தை ஆரம்பித்தார். குஜராத்திலுள்ள சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டிக்கு 23 நாள்கள் நடைப்பயணம் மேற்கொண்டு, தடையை மீறி உப்பு எடுத்தார். இந்த யாத்திரையில் ஏராளமான மக்கள் இணைந்தனர். தமிழ்நாட்டில் வேதாரண்யத்திலும் ராஜாஜி தலைமையில் உப்புச் சத்தியாகிரகம் நடைபெற்றது.

18. பொதுவுடமைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட பகத்சிங், புரட்சி இயக்கங்களுடன் சேர்ந்து ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்தார். லாலா லஜபதி ராயின் இறப்புக்குக் காரணமாக இருந்த காவல் அதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்துக்காக, ஆங்கிலேய அரசு பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோரைத் தூக்கிலிட்டது. இது நாடு முழுவதும் போராட்டங்கள் வலுவடைய காரணமானது.

போர்த்துகீசியர் களிடமிருந்து விடுதலை பெற்ற கோவா, 1961ஆம் ஆண்டு இந்தியாவுடன் இணைந்தது.

19. 1937ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் தேர்தல் நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சி ஐந்து பிரதேசங்களில் பெரும்பான்மை பெற்றது. இரண்டு இடங்களில் தலைமையைப் பிடித்தது.

கடைசியாக இந்தியாவுடன் இணைந்தது ஹைதராபாத்.

20. இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்தது. இந்தியத் தலைவர்களிடமோ மக்களிடமோ கருத்து கேட்காமல், இந்தியா போரில் பங்கேற்கும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது. இது பெரும்பான்மையினருக்கு அதிருப்தியைத் தந்தது. சிலர் ஆதரித்தார்கள், பலர் எதிர்த்தார்கள். இந்தியர்கள் சுதந்திரத்துக்காகத் தங்களுக்குள் சண்டையிட்டு மடிய வேண்டும் என்பது ஆங்கிலேயர்களின் விருப்பமாக இருந்தது. நூறாண்டுகளுக்கு மேல் போராடியும் கிடைக்காத சுதந்திரத்தை, எப்படியாவது அடைந்தே தீர வேண்டும் என்கிற எண்ணம் உருவானது.

21. வெளிநாடுகளில் போர்க் கைதிகளாக இருந்த இந்தியர்களை ஒன்று திரட்டி, ‘இந்திய தேசிய ராணுவம்’ என்கிற அமைப்பை உருவாக்கினார் சுபாஷ் சந்திர போஸ். இதன் மூலம் ஆங்கிலேயர்களை இந்தியாவிலிருந்து விரட்ட முடியும் என்று நம்பினார்.

22. இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் படைக்கு ‘கேப்டன் லட்சுமி’ தலைமை ஏற்றார்.

23. 1942ஆம் ஆண்டு ‘செய் அல்லது செத்து மடி’ என்கிற முழக்கம் இந்தியா முழுவதும் பரவியது. அதுவே ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கமாக உருவெடுத்தது.

24. பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். நாடு முழுவதும் போராட்டம் உச்சத்தை அடைந்தது.

முதல் சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் இல்லாததால் பாடப்படவில்லை.

1911ஆம் ஆண்டே ‘ஜன கண மன’ பாடல் எழுதப்பட்டாலும் 1950ஆம் ஆண்டுதான் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.

25. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பிரிட்டனில் வின்ஸ்டன் சர்ச்சில் ஆட்சியை இழந்தார். 1945ஆம் ஆண்டு தொழிலாளர் கட்சியின் தலைவராக இருந்த கிளமென்ட் அட்லீ பிரதமரானார். இந்தியாவில் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டு, சுதந்திரம் குறித்துப் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டன.

26. ஒருமுறை மட்டுமே பிரதமராகப் பதவி வகித்த கிளமெண்ட் அட்லீ இந்தியா, பாகிஸ்தான், மியான்மர், இலங்கை ஆகிய காலனி நாடுகளை பிரிட்டன் அரசிடமிருந்து விடுவித்தார்.

27. 1947ஆம் ஆண்டு ஜூன் 3 அன்று மதச்சார்பற்ற இந்தியா, முஸ்லிம் பாகிஸ்தான் என்று இரண்டாகப் பிரித்தார் ஆங்கிலேய இந்திய கவர்னர் ஜெனரல் மவுன்ட் பேட்டன்.

28. 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று நள்ளிரவில் இந்தியா சுதந்திரம் பெற்றது. முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவி ஏற்றார்.

29. ஏராளமான தலைவர்களாலும் இயக்கங்களாலும் வழிநடத்தப்பட்ட சுதந்திரப் போராட்டத்தில், பல லட்சக்கணக்கான மக்களும் பங்கேற்று, உயிர்களை இழந்து, நீண்ட காலம் போராடிப் பெற்ற சுதந்திரத்தைக் காப்போம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x