Last Updated : 03 Feb, 2016 10:58 AM

 

Published : 03 Feb 2016 10:58 AM
Last Updated : 03 Feb 2016 10:58 AM

பசுமைப் பள்ளி 20: வானம் காப்போம்!

மாலை என்னும் சிறுபொழுது, ஆறிலிருந்து பத்து மணிவரையான நேரம். அந்த மாலை நேரத்தில் ஒரு குன்றின் உச்சியில் அமர்ந்திருந்தார்கள் பசுமைப் பள்ளியின் குழந்தைகள். கடைசிப் பூதமாக வானம் பற்றிய பாடம். அப்போது அவர்களுடைய தலைக்கு மேலே பறந்த மடையான் கூட்டத்தைக் கண்டு குதூகலமாகிப் பாடினார்கள்.

‘மடையான் மடையான் பூப்போடு…

மடைக்கு ரெண்டுப் பூப்போடு…’.

மடையான் கூட்டம் கடந்தவுடன் தங்கள் நகங்களில் ஏதும் வெள்ளைத் திட்டுக்கள் இருக்கின்றனவா எனப் பார்த்தார்கள். ‘அய்… மடையான் எனக்குப் பூப்போட்டுடுச்சு’ எனக் குதித்தான் விழியன்.

அப்போது…

“குழந்தைகளே, மடையான் பூப்போடுவது என்பது, அது எச்சமிடுவதைக் குறிக்கும். வானில் பறக்கும் பறவைகள் எச்சமிட்டால் அது வயலுக்கு உரம். வானத்தால் எவ்வளவு நன்மை பார்த்தீர்களா? ” என்றவாறு குழந்தைகளுக்கு அருகில் வந்தது மேகம் எனும் முகில்.

முகிலுக்கு வணக்கம் சொன்ன விழியன், “வெண்மையாக இருக்கும் நீ அங்கு மட்டும் எப்படிச் செவ்வானமாகக் காட்சியளிக்கிறாய்?” என்று தொலைவில் சுட்டிக்காட்டினான். அங்கு நகரத்துக்கு மேல் வானம் செந்நிறத்தில் காட்சியளித்தது.

“அது செவ்வானம் இல்லை. மாசுப் படலம். உலகின் சில பெரிய நகரங்களில் இரவில்கூட வானம் இப்படிச் செந்நிறத்தில் காட்சியளிக்கிறது. அந்த அளவுக்கு வானை மாசுபடுத்தி விட்டார்கள்”.

இரவிலும் செந்நிற வானம் என்கிற தகவல் குழந்தைகளுக்கு வியப்பை அளித்தது. அப்போது சரியாக நகரம் விளக்கொளியில் ஒளிரத் தொடங்கியது.

“மின்சாரம் இல்லாத இரவை இனி உங்களால் கற்பனைச் செய்துகூடப் பார்க்க முடியாது. ஆனால், மின்சாரத்தை உருவாக்க நிலத்தடியில் உள்ள கார்பனைக் கொண்ட கரிமப்பொருட்களான பெட்ரோலியம், நிலக்கரி முதலியவற்றைத் தோண்டி எடுப்பதால் பசுங்குடில் வளிகள் (வாயுக்கள்) வெளியாகி, வளிமண்டலத்தில் என்ன நடந்திருக்கிறது தெரியுமா? ” என்று கேட்டது முகில்.

“தெரியுமே, ஓசோன் படலம் மெலிந்துவிட்டது”.

“ஆம், புவி வெப்பமடைவதற்கு அளவுக்கதிகமான இந்தக் கரிம வெளியேற்றமே காரணம். இது வானுக்கு மட்டும் தீங்கில்லை. வானம் தன் வளிமண்டலத்தால் புவியை ஒரு போர்வையைப் போல் மூடிப் பாதுகாத்து வருகிறது. எனவே, வானம் கெட்டால் புவிதான் முதலில் கெடும்”.

“ஆனால், மின்சாரமும் தொழிற்சாலைகளும் அவசியம்தானே? ” என்றான் விழியன்.

“அவசியம்தான். ஆனால், பெட்ரோலும் நிலக்கரியும் தீர்ந்துவிட்ட பிறகு என்ன செய்வீர்கள்? மாற்றுவழி கண்டுப்பிடித்துத்தானே ஆகவேண்டும்? அந்த வழியை இப்போதே கண்டுபிடியுங்கள். புவியைப் பாதிக்காத வகையில் அதைக் கண்டுபிடியுங்கள். உயிரினங்களிலேயே அதிக அறிவாற்றல் மனிதருக்குத்தான் எனப் பெருமைப்படும் நீங்கள், அந்த அறிவுத்திறனை இதில் காட்டலாமே”.

“நாங்கள் பெரியவர்களானதும் கட்டாயம் இதைச் செய்வோம்” என்றனர் குழந்தைகள்.

“உடனடியாகப் பெரியவர்களுக்கும் நினைவூட்டுங்கள். மனிதர்கள் வாழ இந்த ஒரு புவிக்கோளம் மட்டும்தான் இருக்கிறது” என்றது முகில்.

மிகச் சரி. நாம் அனைவருமே என்றும் இதை நினைவில் வைத்துக்கொள்வோமா?

அன்புக் குழந்தைகளே! இத்துடன் பசுமைப் பள்ளியின் குழந்தைகள் உங்களிடமிருந்து விடை பெறுகிறார்கள். உங்களுக்கும் தேர்வுக்காலம் நெருங்கி விட்டதல்லவா? எனவே ‘பசுமைப் பள்ளி’க்கும் விடுமுறை விடப்படுகிறது. நன்றி! வணக்கம்.



பசுமைப் பள்ளி கட்டுரைத் தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறது. அதே நேரம் இயற்கை, சுற்றுச்சூழல், காட்டுயிர்கள் தொடர்பாக நமக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கும். அந்த சந்தேகங்களை கட்டுரையாளர் நக்கீரனிடம் கேட்கலாம். உங்கள் கேள்விகளை அருகில் உள்ள முகவரிக்கோ மின்னஞ்சலுக்கோ பசுமைப்பள்ளி நக்கீரன் பதில்கள் என்று குறிப்பிட்டு அனுப்புங்கள்

பசுமைப் பள்ளி: நக்கீரன் பதிலளிக்கிறார்



(நிறைந்தது)

கட்டுரையாளர்: குழந்தை எழுத்தாளர் மற்றும் சூழலியலாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x