Published : 11 Aug 2021 03:16 AM
Last Updated : 11 Aug 2021 03:16 AM

புதிய கண்டுபிடிப்புகள்: பல செல் உயிரி தோன்றியது எப்படி?

இன்று உலகில் வாழும் மனிதன், சிம்பன்ஸி, போனோபோ விலங்குகள் சுமார் 80 முதல் 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, இன்று அழிந்துபோன ஒரு ஹோமினினி வகை சிம்பன்ஸியிலிருந்து பரிணமித்தவை. ஒரு காலத்தில் உலகை ஆட்சி செய்துகொண்டிருந்த டைனோசர் இன்று இல்லை. உலகில் தோன்றிய எல்லா உயிரிகளும் ஒரு செல் உயிரியிடமிருந்து பரிணாமப் படிநிலை வளர்ச்சியில் வந்தவை என்பதே பரிணாமக் கொள்கை.

இதுவரை ஒரு செல் உயிரி எப்படிப் பல செல்கள் கொண்ட உயிரியாகப் பரிணாமம் அடைந்தது என்பது குறித்து ஊகமான கருத்துகளே இருந்துவந்தன. தற்போது ஜெர்மனியின் லிம்னாலஜிகல் இன்ஸ்டிடியூட் பேராசிரியர் லூட்ஸ் பெக்ஸ் தலைமையில் நடந்த ஆய்வு, இந்த ஊகத்துக்குப் பரிசோதனை சான்றுகள் அளித்து, பரிணாமக் கொள்கைக்கு வலுச் சேர்த்துள்ளது.

பல செல் உயிரி தோற்றத்தின் பரிணாமப் படிநிலை வளர்ச்சியில், முதல் படியில் செல் பிரிதலில் உருவாகும் சேய் செல்கள் தனித்தனியே பிரிந்து போகாமல் கூட்டாக வாழும் நிலை ஏற்படும். அடுத்து, கூடுதல் இனப்பெருக்கம் அடைந்து அந்த உயிரி தழைக்கும் வகையில் கூட்டம் கூட்டமாக வாழத் தொடங்குவது இரண்டாம் படிநிலை வளர்ச்சி. மூன்றாம் படிநிலை வளர்ச்சியில்தான் செல்களுக்கு இடையே வேலை பிரிவினை ஏற்பட்டு எந்த ஒரு செல்லும் தனியே வாழ முடியாமல் பல செல் உயிரியாக உருவெடுக்கும். இவ்வாறு ஒரு செல் உயிரி, பல செல் உயிரிகளாகப் பரிணாமம் அடையும்போது இடையே மூன்று படிநிலைகள் உள்ளன என்று கோட்பாடு கூறுகிறது.

தனித்தனி செல்களாக இருப்பதைவிடக் கூட்டு செல்களாகச் சேர்ந்து இருக்கும்போது அவற்றின் பிழைத்து வாழும் வாய்ப்புக் கூடும். அவை மேலும் சிறப்பாக இனப்பெருக்கம் செய்து, அந்த உயிரின் வம்சம் தழைக்கச் செய்ய வேண்டும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால்தான் உதிரிஉதிரியாக இல்லாமல் கூட்டு செல்களாக வாழும் முதல் படிநிலை பரிணாம வளர்ச்சி ஏற்படும் எனப் பரிணாமக் கோட்பாடு கூறுகிறது.

ஆய்வாளர்கள் ஒரு செல் பச்சைப்பாசி செல்களை வளர்த்து, பரிசோதனை செய்தனர். சில பரிசோதனை வட்டுகளில் ராட்டிஃபெரா எனப்படும் இரைக்கொல்லியைப் பச்சைப்பாசியோடு சேர்த்து வளர்த்தனர்.

தாய் செல் பிரிந்து இரண்டு சேய் செல்கள் உருவாகும் செல்பிரிதல் எனும் முறை மூலமே பச்சைப்பாசி இனப்பெருக்கம் செய்யும். இரட்டைக் குழைந்தைகள் பிறக்கும்போது சில நேரம் இரண்டும் ஒட்டிப் பிறப்பது போல பாசிகளிலும் சில நேரம் திடீர் மரபணு மாற்றத்தின் காரணமாகப் பிறக்கும் சேய் செல்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிப் பிறக்கும் தற்செயல் சம்பவம் நிகழும்.

தனித்தனி பச்சைப்பாசி செல்களுக்கு ராட்டிஃபெராவிடமிருந்து எந்தவிதப் பாதுகாப்பும் இருக்கவில்லை. பச்சைப்பாசி செல்களை ராட்டிஃபெரா விழுங்கி ஏப்பம் விட்டது. ஆனால், கூட்டாக இருக்கும் செல்கள் வேட்டையிலிருந்து தப்பித்தன.

உதிரியாகப் பிரிந்துவிடாமல் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு பிறக்கும் சேய் செல்கள் இனப்பெருக்கம் அடையும்போது இரண்டு செல்கள் நான்காகவும், நான்கு செல்கள் எட்டாகவும் மாறும் அல்லவா! ஒன்றுடன் ஒன்று பிணைந்த அந்தப் பச்சைப்பாசி செல் கூட்டம் அளவில் பெரிதாக இருக்கும். செல் கூட்டத்தில் உள்ள ஒவ்வொரு செல்லும் தனித்தனியே இயங்கினாலும் அவை கொத்துக்கொத்தாகத் திரண்டு இருக்கும்போது அவற்றின் அளவு பெரிதாக இருப்பதால் ராட்டிஃபெராவால் விழுங்க முடியாது.

பொதுவாக உதிரியாகப் பிரியும் செல்கள் இனப்பெருக்கும் செய்யும்போது, உதிரியாகப் பிரியும் பச்சைப்பாசி செல்களைத்தான் உருவாக்கும். கூட்டாகத் திரண்டு இருக்கும்படியான சேய் செல்களை உருவாக்கும் பச்சைப்பாசி செல்கள் கூட்டாக இருக்கும் சேய் செல்களைத்தான் உருவாக்கும்.

தனியாக இருக்கும் செல்கள் ராட்டிஃபெராவின் வேட்டையில் பிடிபடும் சாத்தியம் அதிகம் என்பதால் அடுத்தடுத்த தலைமுறையில் அவற்றின் எண்ணிக்கை குறைந்தது. அதேநேரம் கூட்டாக இருக்கும் செல்கள் வேட்டையிலிருந்து தப்பும் என்பதால் அவற்றின் வம்சம் தழைத்தது. எனவே, காலப்போக்கில் அந்தப் பரிசோதனை வட்டில் கூட்டாக வாழும் தன்மை கொண்ட பச்சைப்பாசிதான் அபரிமிதமாகக் கிடைத்தது.

ராட்டிஃபெரா இல்லாமல் வெறும் பச்சைப்பாசியை மட்டும் வளர்த்து, சோதனை மேற்கொண்டனர். இந்த வட்டில் இரைக்கொல்லி இல்லாததால் கூட்டாக வாழ்வதில் கூடுதல் பயன் ஏதும் இருக்கவில்லை. தனியாக வாழ்வதில் எந்தவிதச் சங்கடமும் இருக்கவில்லை. இந்த வட்டில் பல தலைமுறை கடந்த பின்னரும் பெரும்பாலான பச்சைப்பாசிகள் தனியாக வாழும் உயிரிகளாகத்தான் தொடர்ந்தன.

இந்தப் பரிசோதனையில் பச்சைப்பாசியின் பரிணாம வளர்ச்சி சார்ந்து இயற்கைத் தேர்வு செய்யும் கருவியாக இரைக்கொல்லி அமைந்தது. சுமார் ஒன்பது மணிநேரம் வாழ்நாள் கொண்ட பச்சைப்பாசியில் ஐநூறு தலைமுறை ஆறு மாதத்தில் உருவானது. ஆறு மாதம் கடந்த பின்னர் இரைக்கொல்லியின் தொந்தரவோடு வளரும் பச்சைப்பாசி கூட்டாக வாழும் உயிரியாகப் பரிணமித்தது. பரிணாம வளர்ச்சி என்பது வெறும் ஊகக் கோட்பாடு அல்ல. நாம் எப்படிப் பரிணாம வளர்ச்சி அடைந்தோம் என்கிற கேள்வியின் ஒரு புதிரை அவிழ்த்துள்ளது இந்த ஆய்வு.

கட்டுரையாளர், விஞ்ஞானி

தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x