

இரும்புத் தூளைக் காகிதத்தின் மீது கொட்டி, அடியில் காந்தத்தை வைத்து விளையாடிய அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? இல்லையென்றால் காந்தப் படம் வரைந்து விளையாடிப் பாருங்களேன்.
தேவையான பொருள்கள்:
செல்லோ டேப்
சிறிய வட்ட வடிவ இரும்புத் துண்டு
சிறிய காந்தம் ஒன்று
கலர் பென்சில் அல்லது கிரையான்கள்
காகிதம்
கத்தரிக்கோல்
தடிமனான அட்டை
செய்முறை:
1. தடிமான அட்டையில் இருந்து 2 செ.மீட்டர் அகலம் கொண்ட சட்டகத்தை வெட்டி எடுத்துக் கொள்ளவும். (நீங்கள் வரையும் படத்திற்குத் தகுந்தாற்போல் சதுரமாகவோ செவ்வகமாகவோ இந்தச் சட்டகத்தை வெட்டிக் கொள்ள வேண்டும்.) இந்தச் சட்டகத்தின் வடிவத்திற்கு ஏற்றாற்போல் காகிதத்தையும் வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
2. காகிதத்தில் இயற்கை எழிலான காட்சிகளான, மரங்கள், வீடுகள், அகலமான சாலை போன்றவற்றைச் சித்திரமாக தீட்டுங்கள். இந்தச் சித்திரத்தை வண்ணமிட்டு, வெட்டி வைத்துள்ள சட்டகத்தின் மீது ஒட்டுங்கள்.
3. சிறிய கார், லாரி, இரு சக்கர வாகனத்தில் செல்லும் நபர் ஆகியவற்றை வரைந்து, அவற்றைத் தனியே வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். இந்த உருவங்களின் அடியில் சிறிய வட்ட வடிவ இரும்புத் துண்டை செல்லோ டேப் உதவியுடன் ஒட்டுங்கள்.
4. நீங்கள் வரைந்திருக்கும் சித்திரத்திலுள்ள சாலை மீது கார், லாரி, இரு சக்கர வாகனம் ஆகியவற்றை ஒரே நேரத்தில் ஒன்றாகத் தனித்தனியே வையுங்கள். நீங்கள் காரை வைத்திருக்கும் இடத்திற்கு நேரே கீழே படத்தின் அடியில் காந்தம் ஒன்றை வைத்துச் சாலை வழியே நகர்த்துங்கள். காரின் அடியில் ஒட்டியிருக்கும் இரும்புத் துண்டு காந்தத்தால் ஈர்க்கப்படுவதால் கார் சாலையில் ஓடும். சாலையில் காரோ லாரியோ இரு சக்கர வாகனமோ காந்தத்தின் உதவியால் ஓடுவதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்.
விளையாடி பார்க்கிறீர்களா?