

குழந்தைகளே... இதுவரை கற்றுக்கொடுத்த மேஜிக்குகளைச் செய்து பார்த்தீர்களா? மேஜிக் எப்படி இருக்கிறது? சுவாரஸ்யமாக இருக்கிறதா? இந்த வாரம் ஸ்பூனை வைத்து ஒரு மேஜிக் வித்தையைச் செய்வோம்.
என்னென்ன தேவை?
ஸ்பூன், பஞ்சு
மேஜிக் எப்படிச் செய்வது?
1. ஒரு ஸ்பூனை எடுத்து உங்கள் நண்பர்களிடம் காட்டி, இது மேஜிக் ஸ்பூன் என்று கூறுங்கள்.
2. இப்போது அந்த ஸ்பூனைப் படத்தில் காட்டியுள்ளதுபோல தூக்கிப் பிடித்து, உங்கள் நண்பர்களிடம் அந்த ஸ்பூனைத் திட்ட சொல்லுங்கள்.
3. அவர்கள் திட்டியதும் அந்த ஸ்பூன் அழ ஆரம்பிக்கும்.
மேஜிக் ரகசியம்:
மேஜிக் செய்யத் தொடங்கும் முன், சிறிதளவு பஞ்சைத் தண்ணீரில் நனைத்து, மறைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் நண்பர்களிடம் ஸ்பூனை திட்டச் சொல்லும்போது, நீரில் நனைத்த பஞ்சை ஸ்பூனுடன் சேர்த்துப் பிடித்துக்கொள்ள வேண்டும்.
பின் பஞ்சை ஸ்பூனுடன் சேர்த்து அழுத்தினால், பஞ்சிலிருக்கும் நீர் ஸ்பூன் வழியாக வரும்.
இது ஸ்பூன் அழுவதுபோலத் தோன்றும்.
இதுதான் ஸ்பூனை அழவைக்கும் மேஜிக். இது ஒரு ஜாலி மேஜிக்தான். செய்து பார்த்தால் சுவாரஸ்யமாக இருக்கும்.