Last Updated : 10 Feb, 2016 12:17 PM

 

Published : 10 Feb 2016 12:17 PM
Last Updated : 10 Feb 2016 12:17 PM

வாண்டு பாண்டு: நாமெல்லாம் யாரு தெரியுமா?

பாண்டு: ஹேய் வாண்டு, என்னப்பா கிரவுண்டு பக்கம் வந்துருக்க?

வாண்டு: சும்மாதான் வந்தேன். சரி, நான் வரப்ப பார்த்தேன். அதோ, ரோட்டோரம் போயிட்டு இருக்குற அந்தத் தாத்தா ஏன் உன்னைத் திட்டினாரு?

பாண்டு: ஓ... அதுவா? பந்து அவரு மேலே பட்டுடுச்சு. அதான் திட்டிட்டுப் போறாரு.

வாண்டு: ரொம்ப சத்தம் போட்டுத் திட்டினாரே?

பாண்டு: குரங்கு, வானரங்கள்னு திட்டினாரு.

வாண்டு: ஹஹஹ... சரியாத்தான் திட்டியிருக்காரு.

பாண்டு: ரொம்ப கிண்டல்தான்.

வாண்டு: இதுல என்ன கிண்டல்? உண்மையைத்தானே சொன்னேன். நாமெல்லாம் குரங்கிலிருந்து வந்தவங்கதானே.

பாண்டு: அது சரி, ஏதோ தத்துவம் பேச ஆரம்பிச்சுட்டன்னு மட்டும் நல்லா தெரியுது.

வாண்டு: தத்துவமெல்லாம் கிடையாதுப்பா. அதுதான் உண்மை. குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவங்கதான் மனிதர்கள். சார்லஸ் டார்வின் சொன்னதைத்தான் நான் சொன்னேன்.

பாண்டு: இப்போ எதுக்குச் சம்பந்தமே இல்லாம டார்வினைப் பத்திப் பேசுற?

வாண்டு: அது ஒண்ணுமில்லை பாண்டு. 12-ம் தேதி அவரோட 207-வது பொறந்த நாளு. அவரைப் பத்திப் புத்தகம் ஒண்ணு படிச்சேன். அதைச் சொல்ற மாதிரி நீயும் கரெக்டா திட்டு வாங்கிட்டு இருந்த. அதான் சொன்னேன்.

பாண்டு: ம்… உன் அளவுக்கு நான் டார்வினைப் பத்தியெல்லாம் படிக்கலை. அவரு என்ன சொன்னாருன்னு கொஞ்சம் சுருக்கமா சொல்லேன்.

வாண்டு: சரி... சரி... சொல்றேன். மனுஷன் எப்படித் தோன்றினான்னு ரொம்ப வருஷமா விஞ்ஞானிகளுக்கு ஒரு கேள்வி இருந்துச்சு. ஆனா, அதுக்கு 19-ம் நூற்றாண்டு வரைக்கும் யாரும் சரியான பதிலைக் கண்டுபிடிக்கல. இங்கிலாந்துல 19-ம் நூற்றாண்டுல பிறந்த சார்லஸ் டார்வின்தான் இதுக்குச் சரியான பதிலைக் கண்டுபிடிச்சாரு.

பாண்டு: அப்படி என்ன கண்டுபிடிச்சாருன்னு சட்டுப்புட்டுன்னு சொல்லுபா?

வாண்டு: முந்திரிக்கொட்டை. கொஞ்சம் பொறுமையா கேளு. மனிதர்களும் குரங்கும் ஒரே இனத்தோட வாரிசுகள். வாலில்லாக் குரங்குக்கும் நமக்கும் நிறைய ஒற்றுமை இருக்குன்னு அவரு சொன்னாரு. இதை அவரு போற போக்குல கண்டுபிடிக்கலைப்பா.

அதுக்காக ரொம்ப கஷ்டப்பட்டிருக்காரு. அவரு இளைஞனா இருந்தப்போ, இதுக்காக பீகிள்கின்ற கப்பல்ல ஐந்து வருஷம் உலகத்தைச் சுத்தினாரு. அப்போ கிடைச்ச அனுபவ அறிவு, அறிவியல் அறிவு, அவருடைய கண்டுபிடிப்புகளை வைச்சுதான் மனிதர்களின் பரிணாம வளர்ச்சி பற்றி உலகத்துக்குச் சொன்னாரு. அதுலதான் மனிதர்களுக்கும் குரங்களுக்கும் ஒரே மூதாதைன்னு சொன்னாரு. புரியுதா?

பாண்டு: புரியுது...புரியுது... அதான் அந்தத் தாத்தா என்னைக் குரங்குன்னு திட்டுனதுக்கு சரின்னு சொன்னியா?

வாண்டு: அம்மாடி, ஒரு வழியா கண்டுபிடிச்சுட்ட. சரி, புதுசா ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்லுவியே. ஏதாவது இருக்கா?

பாண்டு: இருக்கு வாண்டு. எப்பவும் குண்டு வெடிக்குற ஆப்கானிஸ்தானுல இருக்குற ஐந்து வயசு குட்டிப் பையன் முர்தாஸா அகமது பற்றிதான் ஒரே பேச்சா இருக்கு.

வாண்டு: அப்படியா? ஏதாவது சாதனை படைச்சுட்டானா?

பாண்டு: இல்லப்பா. இந்த வயசுலேயே கால்பந்து விளையாட்டுன்னா முர்தாஸா அகமதுக்கு ரொம்ப உசுரு. புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸின்னா அவனுக்கு ரொம்பப் பிடிக்குமாம். கால்பந்து விளையாடுறப்ப மெஸ்ஸி போட்டுக்கிட்டு விளையாடுற பனியன் போலவே ஒரு பனியன் வாங்கணும்னு அவனுக்கு ஆசை. ஆனா, அவன் ரொம்ப ஏழைங்கிறதால பனியன் வாங்க வசதியில்ல.

அதனால பிளாஸ்டிக் கவரை பனியன் மாதிரி போட்டுக்கிட்டு விளையாடுறான். இதைப் பத்தி யாரோ மெஸ்ஸிகிட்ட சொல்லியிருக்காங்க. உடனே அந்தக் குட்டிப் பையனை நேரிலேயே பார்க்குறதா சொல்லியிருக்காரு மெஸ்ஸி. இது பத்தின செய்திதான் இப்போ ஒரே பேச்சு.

வாண்டு: இவ்வளவு கஷ்டத்துலயும் அவனுக்கு ஒரு ஆச்சரியமான பரிசுன்னு சொல்லு.

பாண்டு: ஆமாமா. சரி வாண்டு, டைம் ஆயிருச்சு. அப்போ நாம வீட்டுக்குப் போகலாமா?

வாண்டு: சரி போலாமே…

சார்லஸ் டார்வின்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x