

சாம்பார் வெங்காயம், பெரிய வெங்காயம் பற்றியெல்லாம் நமக்குத் தெரியும், மெகா சைஸ் வெங்காயத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
உலகிலேயே மிகப் பெரிய வெங்காயம் இங்கிலாந்தில் 2012-ம் ஆண்டில் விளைந்தது. இந்த வெங்காயத்தை விளைவித்த விவசாயி பீட்டர் கிலேஸ்ப்ரூக்.
இவர் விளைவித்த வெங்காயத்தின் எடை எவ்வளவு தெரியுமா? 8 கிலோ 190 கிராம். 2011-ம் ஆண்டிலும் 8 கிலோ 150 கிராம் அளவில் ஒரு வெங்காயத்தை விளைவித்து பீட்டர் சாதனை புரிந்தார். இந்தச் சாதனையை அவரே 2012-ல் முறியடித்தார். இத்தனக்கும் இவர் பரம்பரை விவசாயி கிடையாது. அரசு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.
கடந்த 28 ஆண்டுகளாக விவசாயம் பார்த்து வருகிறார். பிரம்மாண்டமான காய்கறிகளை உருவாக்குவதுதான் பீட்டரின் ஒரே ஆசை, லட்சியம் எல்லாம். பெரிய காய்களை விளைவித்து இதுவரை ஆறு கின்னஸ் சாதனைகளைப் புரிந்துள்ளார். உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கு, அதிக எடையுள்ள பீட்ரூட், மிக நீளமான டர்னிப் கிழங்கு எனப் பல்வேறு சாதனைகளை அவர் புரிந்திருக்கிறார்.
தகவல் திரட்டியவர்: என். விஜய், 8-ம் வகுப்பு,
இ.ஆர். மேல்நிலைப் பள்ளி, திருச்சி.