டிங்குவிடம் கேளுங்கள்: இரவில் வானவில் தெரியுமா?

டிங்குவிடம் கேளுங்கள்: இரவில் வானவில் தெரியுமா?
Updated on
1 min read

பேன் எப்படி உருவாகிறது, டிங்கு?

- தக்‌ஷித் கிருஷ்ணா, 4-ம் வகுப்பு, பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளி, கோவை.

உலகில் பல கோடி உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றில் பேன்களும் ஒன்று. பேன்கள் ஒட்டுண்ணிகள். மனிதர்களை அண்டி வாழக்கூடியவை. மனிதர்களின் ரத்தமே அவற்றின் உணவு. மனிதர்களை விட்டுவிட்டு அவற்றால் சில மணி நேரம்கூட வாழ முடியாது. இறக்கைகள் இல்லாததால் பறந்து செல்லவும் இயலாது. மனிதர்களின் தலைகள் நெருக்கமாக இருக்கும்போது, ஒரு தலையிலிருந்து இன்னொரு தலைக்குச் சென்றுவிடுகின்றன. பேன் இருப்பவர் பயன்படுத்தும் சீப்பு, துண்டு போன்றவற்றை மற்றவர்கள் பயன்படுத்தும்போது, அவர்களின் தலைகளுக்குச் சென்றுவிடுகிறது. இப்படித் தொற்றிக்கொண்டுதான் பேன்கள் பரவுகின்றன. தலையைச் சுத்தமாகப் பராமரிப்பவர்களுக்குப் பேன்கள் வராது என்பதற்கும் அழுக்குத் தலைகளில் பேன்கள் உருவாகும் என்பதற்கும் ஆதாரமில்லை, தக்‌ஷித் கிருஷ்ணா.

இரவில் வானவில் வருமா டிங்கு?

- தா. லோகேஸ்வரி, 11-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, பிராட்டியூர், திருச்சி.

பகலைப் போலவே இரவிலும் வானவில் தோன்றும். ஆனால், அது சூரிய ஒளியால் வரும் வானவில் அல்ல. சந்திரனின் ஒளியால் ஏற்படும் வானவில். வெப்ப மண்டலப் பிரதேசங்களில் சந்திரனிலிருந்து வரும் ஒளி, காற்று மண்டலத்தில் உள்ள நீர்த்துளிகளில் ஊடுருவும்போது, வானவில் தோன்றுகிறது. ஆனால், சூரியனால் உருவாகும் பகல் வானவில்லைப் போல கண்கவர் வண்ணங்களில் பளிச்சென்று இரவு வானவில் தெரியாது. ஏனென்றால் சந்திரனின் ஒளி சூரிய ஒளியைப் போல் பிரகாசமாக இருப்பதில்லை. அதனால் சாம்பல், வெள்ளை நிறங்களில் வானவில் வெளிறிக் காணப்படும், லோகேஸ்வரி.

பெண் என்பதால் தலைமுடியை நீளமாக வளர்க்க வேண்டும் என்கிறார் அம்மா. எனக்கு விருப்பமில்லாவிட்டாலும் வளர்த்துத்தான் ஆக வேண்டுமா, டிங்கு?

- எம். சங்கவிஸ்ரீ, 9-ம் வகுப்பு, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை.

பொதுவாக இந்தியாவில் பெண்கள் நீளமாகத் தலைமுடியை வளர்த்து வருகிறார்கள். நீண்ட கூந்தல் பெண்களுக்கு அழகு என்று பெண்களாலும் ஆண்களாலும் நம்பப்பட்டு வருகிறது. அதன் வெளிப்பாடாக உங்கள் அம்மாவும் நீண்ட கூந்தலை வளர்க்க வேண்டும் என்று சொல்லியிருப்பார். பெண்கள் நீளமாக முடி வளர்க்க வேண்டும், ஆண்கள் குட்டையாக முடியை வெட்டிக்கொள்ள வேண்டும் என்கிற சட்டம் எல்லாம் இல்லை. முடி வெட்டாமல் இருந்தால் ஆண்களுக்கும் நீளமாக முடி வளரும். அதே போல முடி வளர்த்தாலும் எல்லாப் பெண்களுக்கும் மிக நீளமாக முடி வளர்வதில்லை. அவரவர் ஆரோக்கியம், சத்தான உணவு, மரபுப் பண்பு காரணமாக முடியின் வளர்ச்சி அமைகிறது. அதுவும் குறிப்பிட்ட காலம் வரைதான் முடி நீளமாக வளரும். நீண்ட கூந்தலைப் பராமரிப்பதைவிட, குட்டையான கூந்தலைப் பராமரிப்பது எளிது. நேரமும் மிச்சமாகும். உங்கள் அம்மாவிடம் பேசிப் பாருங்கள். இல்லையென்றால், நீங்கள் முடிவெடிக்கும் காலம் வரை காத்திருந்து, முடி வெட்டிக்கொள்ளுங்கள் சங்கவி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in