பறவை ராஜா பராக் 5 - ஆஹா, அருமையான மீனவன்!

பறவை ராஜா பராக் 5 - ஆஹா, அருமையான மீனவன்!
Updated on
2 min read

குளத்தின் மேல் ஒருவன் அந்தரத்தில் விடாப்பிடியாகச் சிறகடித்தபடி ஒரே இடத்தில் இருந்தான்.

“யாரவன்? பள்ளிக்குச் செல்ல மாட்டேன் என்று அந்தரத்தில் ஏறிக்கொண்டு கைகால்களை உதைத்துக்கொண்டு அழுகிறானா?”

“இல்லை மன்னா, இவன் பெயர் மீன்கொத்தி. மீன்கொத்தி இனத்திலேயே இந்தக் கறுப்பு வெள்ளை மீன்கொத்திதான் மிகவும் கெட்டிக்காரன். அதோ பாருங்கள் அம்பு பாய்ந்ததுபோல் நீருக்குள் பாய்ந்து மீனைக் கவ்விக்கொண்டு போய்விட்டான்!” என்று சிப்பாய் சொன்னான்.

“ஆகா, எவ்வளவு திறமையான மீனவன். இவன் மட்டும் நம் அருகில் இருந்தால்…” என்று சொல்ல ஆரம்பித்த மன்னனுக்குத் தான் மீன்குழம்பு சாப்பிட்டு நாளாகிவிட்டது என்ற நினைப்பும் வந்தது. “இவனை நம் ஆஸ்தான மீனவனாக நியமித்து, இவன் பிடிக்கும் மீன்களில் பாதியைத் தினமும் நமக்குக் கப்பம் கட்டச் சொல்லுங்கள் தளபதி” என்று ஆணையிட்டார்.

“அப்படியே ஆகட்டும் மன்னா”

-இருவாட்சியின் குரல்: “உங்களோட ஆணைக்கெல்லாம் மீன்கொத்தி பணியாது. அது பசிக்கு மீனைப் பிடிச்சுத் திங்குது. அதோட குஞ்சுகளுக்கும் கொடுக்குது. உங்களுக்கு வேணும்னா நீங்களும் மீனப் பிடிச்சுக்குங்க!

உலா மெதுவாக வந்து கொண்டிருந்தாலும், சிப்பாயும் பணிப்பெண்ணும் செய்த அமளியால் கலவரமான ஒருத்தன் “தித்தித்தீதி…தித்தித்தீதி…தித்தித்தீதி” என்று அலறியடித்துக்கொண்டு இங்கேயும் அங்கேயும் ஓடிக்கொண்டிருந்தான்.

“யாரவன்?, அவனுக்கு என்ன பிரச்சினை”

“அவன் பெயர் ஆள்காட்டி மன்னா. எதிரிகளின் அரவம் கேட்டால் இப்படித்தான் அரக்கபரக்க கத்திக்கொண்டு தன் குழந்தைகுட்டிகளுக்கும் மற்ற பறவைகளுக்கும் எச்சரிக்கை விடுப்பான்” என்றாள் பணிப்பெண்.

“ஆகா! நம் கடலோரக் காவல்படை தூங்கிவழிகிறது என்ற கவலையில் இருந்தேன். இனி கவலை இல்லை, இவனைக் கடலோரக் காவல்படையில் சேர்த்துவிடுங்கள். எதிரி நாட்டார் போர் தொடுத்துவந்தால் இவன் எச்சரிக்கைக் குரலைக் கேட்டு நாம்…நாம்...” என்று ஏதோ வார்த்தையைத் தேடிக்கொண்டிருந்த மன்னனுக்கு சிப்பாய் எடுத்துக்கொடுத்தான், “புறமுதுகு காட்டிவிட்டு ஓடிவிடலாமா மன்னா.”

“ம். நாசுக்கு!!! அமைதி வழியில் சென்றுவிடலாம் என்று சொல்ல வந்தேன்”

“ஆகா, புறமுதுகுக்கு அமைதிவழி என்று மேலும் நாசுக்கான சொல்லைக் கண்டுபிடித்த மன்னன் வாழ்க” என்று சிப்பாய் கோஷமிட்டான்.

ஆள்காட்டி

கறுப்பு வெள்ளை மீன்கொத்தி

(உலா வரும்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in