

புதர் ஓரமாக ஒருத்தி எதையோ தேடிக்கொண்டிருந்தாள். அவளுடைய உடல் கறுப்பாகவும் இறக்கை பாக்கு நிறத்திலும் இருந்தன.
“யாரிவள், இங்கு இவள் என்ன செய்துகொண்டிருக்கிறாள்?” என்று மன்னர் கேட்டார்.
“இவளும் குயிலினத்தைச் சேர்ந்தவள்தான் மன்னா, இங்கு இரை தேடிக்கொண்டிருக்கிறாள்?” என்றாள் பணிப்பெண்.
“இவளாவது சொந்தமாக வீடு கட்டுவாளா, இல்லை…” என்று மன்னர் இழுத்தார்.
“இவளுடைய இனத்தில் இவள் மட்டும்தான் சொந்தமாக வீடு கட்டுவாள் மன்னா”.
“ஆகா, சேற்றில் முளைத்த செந்தாமரை. இவளுக்கு நான் செண்பகம் என்று பெயரிடுகிறேன், இது என் ஆணை” என்றார் மன்னர்.
- இருவாட்சியின் குரல்: நாங்க கூடுகட்டினாலோ
கட்டாவிட்டாலோ உங்களுக்கு என்ன பிரச்சினை?
நாங்கள்லாம் இயற்கையோட போக்குல
போய்க்கிட்டுருக்கோம். உங்களை மாதிரி
இயற்கையை மீறியா நடந்துகிட்டுருக்கோம்?
“மன்னா ஏற்கெனவே அவளுக்கு இதுதான் பெயர்” என்றாள் பணிப்பெண்.
“எந்த அரசாணையிலாவது இது இருக்கிறதா?” என்று கேட்டார் மன்னர்.
“இல்லை அரசே” என்றான் தளபதி.
“அப்படியென்றால் ஏற்கெனவே செண்பகம் என்று அழைப்பதுபோல் இனியும் இவள் செண்பகம் என்று அழைக்கப்பட வேண்டுமென்று புதிதாக ஒரு அரசாணையை இயற்றுங்கள்” என்று மன்னர் உத்தரவிட்டார்.
“அப்படியே ஆகட்டும் மன்னா, ஆனால், அவளுக்குச் செம்போத்து என்று இன்னுமொரு பெயரும் இருக்கிறது”.
“செம்போத்து என்றும் அழைக்க வேண்டுமென்று நான் ஆணையிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு மன்னர் இன்னொரு கேள்வி கேட்டார்,
“குயில் இனம் என்று சொன்னதும் எனக்கு இன்னொரு ஞாபகம் வருகிறது. நமது அரசவைப் புலவர் என்னைப் புகழ்ந்து, மாங்குயிலே… பூங்குயிலே… என்று ஒரு செய்யுள் இயற்றியிருந்தார் அல்லவா, அந்தப் பறவைகள் எங்கிருக்கின்றன?”
“மன்னா, மாங்குயில் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பெயரில்தான் குயில் இருக்கிறதே தவிர, அது குயிலே அல்ல. பூங்குயில் என்று ஒன்றும் கிடையாது. அதைச் சந்தத்துக்காகப் புலவர் போட்டிருக்கிறார், மானே தேனே, கண்மணி பொன்மணி மாதிரி. அது மட்டுமல்ல மன்னா, இன்னொரு செய்யுளில் மானே மயிலே மரகதக் குயிலே என்று பாடியிருப்பார், மரகதக் குயிலென்று எதுவுமேயில்லை” என்றார் தளபதி.
“அடப் புளுகா, நம் நாட்டுப் பிரஜைகளைப் பற்றித் தெரியாமலா பாடியிருக்கிறாய்! சந்தத்துக்காகத் தந்தனத்தம் பாடியிருக்கிறாய், நான் வேறு யானைத் தந்தத்தைத் தந்தேனே உனக்குப் பரிசாக” என்றார் மன்னர்.
“மன்னா உங்களுக்கும் சந்தம் நன்றாக வருகிறது” என்றார் தளபதி.
“நன்றி தளபதி. அது இருக்கட்டும். நம் புலவரை எதிரி நாட்டுப் புலவர் கோணங்கியாரின் காவியங்களைப் படிக்கச் சொல்லி உத்தரவிடுங்கள்” என்று ஆணையிட்டார் மன்னர்.
-இருவாட்சி சிறகடித்துப் பாராட்டுகிறது.
“இது வெறும் உத்தரவா, தண்டனை உத்தரவா அரசே” என்று தளபதி கேட்டதும்.
“நாசுக்காக இருங்கள் தளபதியாரே. எதிரி நாட்டுக் கோபத்துக்கு ஆளானால் அப்புறம் போர் வரும். நான் பழையபடி…” என்று மன்னர் இழுத்ததும் தளபதி தொடர்ந்தார் “புறமுதுகு காட்டி ஓடிவிடுவேன் என்று சொல்கிறீர்கள்”
“மறுபடியும் நாசுக்கு, தளபதி நாசுக்கு. எதுக்குப் புறமுதுகு என்ற இழிசொல்லைப் பயன்படுத்துகிறீர்கள். போர்வெறுப்பு என்ற சொல்லைப் பயன்படுத்துங்கள்”
“ஆகா புறமுதுகுக்குப் பதிலாகப் போர்வெறுப்பு கண்ட மன்னன் வாழ்க!” என்று கோஷம் போட்ட சிப்பாயைக் கையமர்த்திவிட்டு ரதம் நகர்ந்தது.
(உலா வரும்)
மாங்குயில்
செம்போத்து