Published : 30 Jun 2021 03:13 AM
Last Updated : 30 Jun 2021 03:13 AM

புதிய கண்டுபிடிப்புகள்: நன்மை செய்யும் எதிரி!

‘உங்களை அழ வைப்பவர் நண்பர்; உங்களைச் சிரிக்க வைப்பவர் எதிரி’ என்கிறது ஒரு பாரசீகப் பழமொழி. கடலோரத்தில் பாறைகளில் ஒட்டிக்கொண்டு வாழ்கின்றன கொட்டலசு ஓட்டுடலிகள். இவற்றின் மேலோட்டில் துளையிட்டு அரித்து எடுக்கும் சயனோபாக்டீரியா அதன் எதிரி என்றுதான் இதுவரை கருதியிருந்தனர். ஓட்டுக்குள் இருக்கும் மெல்லுடலியின் உறுதியைக் குலைத்து, வளர்ச்சியைத் தடுத்து, இனப்பெருக்கத்துக்கும் தடையாக இருக்கிறது இந்த பாக்டீரியா.

மேலோட்டில் அரிப்பை ஏற்படுத்தினாலும் எதிரியாகத் தென்படும் சயனோபாக்டீரியா, சிப்பிக்கு நண்பன் என்கிறார் தென்னாப்பிரிக்காவின் கடல் உயிரி ஆய்வாளர் கேட்டி நிகாஸ்ட்ரோ. பாக்டீரியா அரித்த ஓட்டின் நிறம் வெளிறிவிடுகிறது. ஆனால், பாக்டீரியா அண்டாத ஓடு கருமையாக இருக்கிறது. கோடைக் காலத்தில் வெளிர் ஓடு, உள்ளே உள்ள மெல்லுடலி வெந்து போகாமல் காக்கிறது என்கிறார் நிகாஸ்ட்ரோ. தன்னை அறியாமலேயே மெல்லுடலிக்கு உதவுகிறது இந்த பாக்டீரியா.

இரண்டு ஒரே அளவுள்ள உலோகத் துண்டுகளை எடுத்துக்கொள்ளுங்கள். பாட்டில் மூடியாக இருக்கலாம். ஒன்றின் மீது கறுப்பு, மற்றொன்றின் மீது வெள்ளை வண்ணம் பூசுங்கள். இரண்டையும் வெயிலில் வையுங்கள். பத்து நிமிடங்கள் கடந்த பிறகு இரண்டையும் தொட்டுப் பாருங்கள். வெள்ளை மூடியைவிடப் பல மடங்கு வெப்பத்தில் கறுப்பு மூடி இருப்பதை அறியலாம். வெயிலில் வெளிர்நிறப் பொருள்களைவிட, கறுப்பு நிறப் பொருள்கள் அதிக வெப்பத்தை கிரகித்துக்கொள்ளும். எனவே, பாக்டீரியா அரித்து வெளிர்நிறம் அடைந்த சிப்பி வெயிலில் அழிந்துவிடாமல் காக்கிறது என்று ஊகித்தனர்.

ஊகம் மட்டுமே அறிவியல் சான்று ஆகாது. எனவே, நடைமுறையில் பரிசோதனை செய்து பார்க்க விழைந்தார் நிகாஸ்ட்ரோ. பாக்டீரியா தொற்றி வெளிர்நிறம் அடைந்த ஓடுகளையும், பாக்டீரியா தொற்றாத கறுப்பு நிற ஓடுகளையும் தேர்ந்தெடுத்தனர். அதன் உள்ளிருந்த சதையை நீக்கி, வெப்பமானியைப் பொருத்தினர். ஐரோப்பாவின் தென் பகுதியில் உள்ள போர்ச்சுகல் முதல் வட பகுதியில் உள்ள ஸ்காட்லாந்து வரை ஒன்பது இடங்களைத் தேர்ந்தெடுத்தனர். அந்த இடங்களில் உள்ள கடலோரத்தில் வெப்பமானி பொருத்தப்பட்ட இந்த ஓடுகளை மற்ற ஓடுகளுக்கு இடையே வைத்துச் சோதனை செய்தனர்.

கடல் ஓதம் காரணமாக நீரேற்றம் ஏற்பட்டுச் சில நேரம் ஓடுகள் கடல் நீரின் உள்ளே இருக்கும். நீர் வற்றிய சூழலில் காற்று, சூரிய ஒளியில் வெயிலில் காயும். கடல் நீரின் அடியில் இருக்கும்போது ஓட்டின் உள்ளே வெப்பம் சுமார் 8 டிகிரி வரை குறைந்தது. ஆனால், நீரை விட்டு வெளியே வந்ததும் கறுப்பு நிற ஓடு வேகமாக வெப்பம் அடைந்தது மட்டுமல்லாமல், வெளிர்நிற ஓடுகளைவிடச் சுமார் 1.67 முதல் 4.77 °C வரை கூடுதல் வெப்ப நிலையில் இருந்தது. ஆய்வு நடைபெற்றபோது பிரான்ஸ் நாட்டில் (2018 ஆம் ஆண்டு) வெப்ப அலை வீசியபோது மடிந்த மெல்லுடலிகளில் சுமார் 95 சதவிகிதம் கறுப்பு மேலோடு கொண்டவையாக இருந்தன.

‘தீமையிலும் நன்மை உண்டு’ என்பதுபோல் பாக்டீரியா ஏற்படுத்தும் அரிப்பு காரணமாக மேலோடு உறுதி இழக்கிறது. ஆனாலும், வெளிர்நிறத்தால் உள்ளே உள்ள மெல்லுடலி வெப்பத்திலிருந்து காப்பாற்றப்படுகிறது.

கட்டுரையாளர், விஞ்ஞானி

தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x