

கதை கேட்கும் வயதில் ஒரு புத்தகமே எழுதிவிட்டார் ஸ்ரீஷா. குரோம்பேட்டையைச் சேர்ந்த இவர், தற்போது நெதர்லாந்தில் வசிக்கிறார். எல்லோரையும்போல் கதைகள் கேட்பது என்றால் இவருக்கு மிகவும் பிடிக்கும். இரவில் கதைகளைக் கேட்டுவிட்டே தூங்குவார். அபாரமான கற்பனை வளம் கொண்ட ஸ்ரீஷாவுக்கு ஒரு கட்டத்தில் கதை எழுத ஆர்வம் வந்துவிட்டது. சாகசக் கதை ஒன்றை எழுத, பலரிடமிருந்து பாராட்டுகள் வந்தன. தற்போது அது புத்தகமாகவும் வந்து வரவேற்பைப் பெற்றுவருகிறது. 7 வயது ஸ்ரீஷா நெதர்லாந்தின் இளம் எழுத்தாளர் என்கிற சிறப்பையும் பெற்றிருக்கிறார்.
மேக்சிமா தன் தம்பி நோவாவுடன் நெதர்லாந்தில் உள்ள அழகான காட்டுக்கு விடுமுறையைக் கழிக்கச் செல்கிறாள். அங்கே எதிர்பாராமல் ஓர் ஆபத்தைச் சந்திக்கிறார்கள். அந்த ஆபத்தை எப்படி முறியடித்து, ஹாலந்தைக் காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் கதை.
“எங்களைப் போன்ற சிறுவர்களுக்கும் கனவுகள் இருக்கின்றன. அந்தக் கனவுகளை ஊக்குவிக்கவும் புத்தகங்களாக மாற்றவும் விரும்புகிறேன். என் புத்தகத்தைப் படிப்பவர்கள் தங்கள் கனவுகளையும் புத்தகங்களாகக் கொண்டு வருவார்கள் என்று நினைக்கிறேன்” என்கிற ஸ்ரீஷா, இரண்டாம் கிரேடு படிக்கிறார். ஸ்ரீஷாவுக்கு நடனம், பியானோ, வண்ணம் தீட்டுவது, நண்பர்களுடன் அரட்டை அடிப்பதும் பிடிக்குமாம்.
The Maxima & Noah Escapades: Rescuing Holland
புத்தகம் அமேசானில் கிடைக்கிறது