ஏன்? எப்போது? எப்படி?

ஏன்? எப்போது? எப்படி?
Updated on
2 min read

வாலாட்டினால் வால் ஆடும்!

நாய் எப்போதெல்லாம் வாலை ஆட்டும்? வீட்டில் வளர்க்கப்படும் நாயாக இருந்தால் வீட்டில் உள்ளவர்களைப் பார்த்தால் வாலை ஆட்டிக்கொண்டே வரும். தெரு நாயாக இருந்தால் அதற்கு உணவிடுபவர்களைப் பார்த்தால் வாலை ஆட்டிக்கொண்டே வளைய வளைய வரும். நாயைப் போலவே பூனையும்கூட வாலை ஆட்டும். அது எப்போது தெரியுமா? தன் கோபத்தைத் தெரிவிப்பதற்காக அது வாலை ஆட்டும். அந்த நேரத்தில் பூனை தாக்கவும் செய்யுமாம்.

பூனையிடம் இனி நீங்கள் வாலாட்டுவீர்களா?

- தகவல் திரட்டியவர்:
கே. ராஜசேகர், 8-ம் வகுப்பு,
அரசு மேல்நிலைப் பள்ளி, முசிறி.

காய்களுக்கு பெயர் வந்தது எப்படி?

காய்களுக்கோ அல்லது பழங்களுக்கோ அந்தப் பெயர் எப்படி வந்தது என்று எப்போதாவது மூளையைக் கசக்கியிருப்பீர்கள். ஆனால், அதற்கு விடை உடனே கிடைத்திருக்காது. ஆனால், சில காய்களுக்கு அதன் தோற்றத்தையும், சுவையையும் வைத்தே பெயரைச் சூட்டியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சில காய்களைப் பார்ப்போமா?

பாகற்காய்: ஆங்கிலத்தில் பாகற்காயை ‘பிட்டர் கார்ட்’ என்று அழைப்பார்கள். ‘பிட்டர்’ என்றால் கசப்பு சுவை என்று அர்த்தம். பாகற்காய் கசப்பாக இருப்பதால் ‘பிட்டர் கார்ட்’ ஆகிவிட்டது.

புடலங்காய்: ஆங்கிலத்தில் புடலங்காய்க்கு ‘ஸ்நேக்கார்ட்’என்று பெயர். புடலங் காய், பாம்பு போல் நீண்டு வளைந்திருப்பதால் இதற்கு இந்தப் பெயர் வந்தது.

சுரைக்காய்: இதற்கு ஆங்கிலத்தில் ‘பாட்டில் கார்ட்’ என்று பெயர். பாட்டில் போலச் சுரைக்காய் இருப்பதால் ‘பாட்டில் கார்ட்’ என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

பீர்க்கன்காய்: பீர்க்கன்காயின் மேற்புறத்தில் மேடான பகுதிகளைப் பார்த்திருப்பீர்கள். இது விலா எலும்புகளைப் (Ribs) போல இருப்பதால், இந்தக் காய்க்கு ஆங்கிலத்தில் ‘ரிப்டு கார்ட்’ (Ribbed Gourd) என்று பெயர் வந்தது.

- தகவல் திரட்டியவர்:
வி. ஜீவிகா, 7-ம் வகுப்பு,
வித்ய விகாஸ் மெட்ரிக்.
பெண்கள் மேல்நிலைப் பள்ளி, காரமடை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in