Last Updated : 30 Dec, 2015 11:48 AM

 

Published : 30 Dec 2015 11:48 AM
Last Updated : 30 Dec 2015 11:48 AM

பசுமைப் பள்ளி 15: ஐம்பூதம் வாழ்க!

நாள் என்பது ஆறு சிறு பொழுதுகளைக் கொண்டது. அதில் ஒரு பொழுதுதான் யாமம். இரவு பத்து மணி முதல் பின்னிரவு இரண்டு மணி வரையிலான நேரம் இது. இரவு பன்னிரெண்டு மணியாகப் போகிறது. ஓரிடத்தில் முகாமிட்டுத் தங்கியிருந்தனர், நம் பசுமைப் பள்ளிக் குழந்தைகள். அவர்கள் இன்னமும் உறங்கவில்லை. வானில் நகரும் நிலவைப் பார்த்தபடி யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்களுடைய அடுத்த பாடத்தின் தலைப்பு ஐம்பூதம். பெயரைக் கேட்டதிலிருந்து அவர்களுக்கு அச்சம். ‘இவ்வளவு நாளா நல்லாத்தானே போச்சு! இப்போ என்ன திடீரெனப் பூதம், பேய், பிசாசு என்றெல்லாம் சொல்கிறார்கள்’ என்று கொஞ்சம் குழம்பினார்கள். சரியாக அந்த நேரம் பார்த்தா, ஒரு கிறீச்சொலிக் கேட்க வேண்டும்! குழந்தைகள் வெலவெலத்துப் போய்விட்டனர். உண்மையாகவே பூதம் வந்துவிட்டதோ? ஒலி வந்த திசையைத் திரும்பிப் பார்க்க… ஒரு வௌவால்!

“வௌவாலே, ஏன் இப்படிக் கத்தினாய்? நாங்கள் பூதம் வந்துவிட்டதோ என்று மிரண்டு விட்டோம் “ என்றாள் இன்னிலா.

“எதற்கு பூதம் பற்றிய நினைப்பு?” எனக் கேட்டது வௌவால்.

“எங்களுக்கு நாளைக்கு ‘ஐம்பூதம்’பற்றிய பாடம். ஒரு பூதம் என்றாலே அஞ்சுவோம். ஐந்து பூதங்கள் என்றால் நடுங்காதா?” என்று கேட்டாள் இன்னிலா.

“பூதம் என்றால் ஏன் அஞ்ச வேண்டும்? வௌவால் என்றாலே வெளிநாட்டினர் ரத்தக் காட்டேரி என்று அஞ்சுவார்கள். நீங்கள் சொல்வதும் அதுபோலத்தான் இருக்கிறது. இரண்டுமே தப்பு. ஐம்பூதம் என்றால் முழுவதும் இயற்கையினாலான பூதம். இதைப் பஞ்ச பூதம் என்றும் சொல்வார்கள். உண்மையில் இந்த பூதங்களை வாழ்க, வாழ்க என வாழ்த்த வேண்டும்”.

“அப்படியா? அவை என்னென்ன பூதங்கள்?”

“நிலம், தீ, நீர், காற்று, வானம் ஆகியவைதான் அந்த ஐம்பூதம்”

“அப்பாடி! இவ்வளவுதானா?” நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் குழந்தைகள்.

“உண்மையில் நீங்கள் தமிழ்க் குழந்தைகளாக இருப்பதற்குப் பெருமைப்பட வேண்டும்” என்றது வௌவால்.

“எதற்காக இப்படிச் சொல்கிறாய்?” குழந்தைகள் ஆர்வமாகக் கேட்டார்கள்.

“கடவுள்தான் உலகைப் படைத்தார் என்று மதங்கள் கூறும். ஆனால், இவ்வுலகம் என்பது இந்த ஐம்பூதங்களால் உருவானது என்று அக்காலத்திலேயே அறிவியல் பேசியிருக்கிறது தொல்காப்பியம். இது பெருமை இல்லையா?”

“உண்மையிலேயே பெருமைதான்!”

“பொதுவாகக் கதையில் வரும் பூதங்கள் எல்லாம் மனிதர்களை அச்சுறுத்தும். ஆனால், இன்றைக்கு உண்மை நிலைமை அப்படி இல்லை. மனிதர்கள்தான் இன்று பெரும்பூதங்களாக மாறி, இந்த ஐம்பூதங்களையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறார்கள்”.

“எப்படி?”

“இதைப் பற்றித்தான் நீங்கள் படிக்கப் போகிறீர்கள். இப்போது நான் இரை தேடப் போக வேண்டும். தினமும் என் உடல் எடையளவுப் பூச்சிகளைப் பிடித்துத் தின்று மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் கடமை எனக்கிருக்கிறது, வரட்டுமா?”

வௌவால்கூடப் பிறருக்கு உதவி செய்கிறது, மனிதர்கள்? அவர்கள் ஐம்பூதங்களுக்கும் அப்படி என்ன தீங்கு செய்கிறார்கள்? குழந்தைகளோடு நாமும் காத்திருப்போம்.

(அடுத்த வாரம்: மூச்சுக் காற்று)
கட்டுரையாளர்: குழந்தை எழுத்தாளர் மற்றும் சூழலியலாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x