Last Updated : 12 May, 2021 03:14 AM

 

Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

மாய உலகம்! - கதை எழுதுவது எப்படி? :

கதை எழுதுவது சுலபம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றுதான். ஒரு புத்தகத்தை எடுத்து உங்கள் மடி மீது வைத்துக்கொண்டு படிக்கத் தொடங்குங்கள், போதும் என்கிறார் வர்ஜீனியா உல்ஃப்.

என் உயிர் இதில் அடங்கி யிருக்கிறது என்பதுபோல், என் இதயம் இதற்குள் இருந்துதான் துடிக்கிறது என்பதுபோல், இது இல்லாமல் என்னால் சுவாசிக்க முடியாது என்பதுபோல், கைபோல், கண்போல், விரல்போல் இதுவும் என் உடலின் ஒரு பகுதி என்பதுபோல் புத்தகத்தை உங்களோடு சேர்த்து அழுத்தமாக அணைத்துக்கொள்ளுங்கள்.

விடிந்தால் தேர்வு என்பதுபோல், அந்தத் தேர்வு வாழ்நாளில் ஒரு நாள் மட்டும், ஒரு முறை மட்டும், ஒருவருக்கு மட்டும் வரும் என்பதுபோல் படியுங்கள். அடுத்த சில மணி நேரத்தில் உலகம் முடிவுக்கு வந்துவிடும் என்பதுபோல், ஒருமணி நேரத்தில் உலகிலுள்ள எல்லாப் புத்தகங்களும் மாயமாக மறைந்துவிடும் என்பதுபோல், அரை மணி நேரத்தில் வேற்றுகிரகவாசிகள் பறக்கும் தட்டில் வைத்து உங்களைக் கடத்திக்கொண்டு சென்றுவிடுவார்கள் என்பதுபோல் படியுங்கள்.

சீசாவிலிருந்து ஒரு பூதம் புறப்பட்டு வந்து, ‘கட்டளையிடுங்கள்’ என்று உங்கள் முன்னால் மண்டியிடுகிறதா? விழுங்குவதற்கு ஒரு டிராகன் தன் வாயைத் திறந்தபடி உங்கள் முதுகுக்குப் பின்னால் காத்திருக்கிறதா? அதன் மூச்சுக்காற்று உங்களைச் சுடுகிறதா? ‘வா, நான் மீட்கிறேன்’ என்று ஒரு தேவதை உங்கள் முன்பு சிறகு விரித்து நின்று அழைக்கிறாரா? ஒரு கணம், ஒரே ஒரு கணம்கூட உங்கள் தவம் கலையாமல் இருக்கட்டும்.

நான் வானம் என்றால் புத்தகம் என் நீலம். இது என் உடல். என் உயிர். இதுவே என்னை அழகாக்குகிறது. இதுவே என்னைத் தீர்மானிக்கிறது. இதுவே என் உள்ளத்தை நிறைக்கிறது. இதுதான் என் வண்ணம். இதுதான் என் பெயர். இதுதான் நான் என்று உலகுக்கு அறிவியுங்கள்.

உங்களுக்கும் உங்கள் புத்தகத்துக்கும் நடுவில் யாரும், எதுவும் வந்துவிடக் கூடாது. ஒரு சொல்லிலிருந்து அடுத்த சொல். ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம். ஒரு புத்தகத்திலிருந்து இன்னொரு புத்தகம். ஒரு வாழ்விலிருந்து இன்னொரு வாழ்க்கை. ஓர் உலகிலிருந்து இன்னோர் உலகம். கடல்போல், காலம்போல், வனம்போல் உங்கள் வாசிப்பு வளர்ந்துகொண்டே செல்லட்டும்.

உங்கள் புத்தகத்தின் வாசம் உங்கள் வாசமாக மாறும்வரை வாசியுங்கள். உங்கள் கனவெல்லாம் புத்தகங்கள் பூத்துக் குலுங்கும்வரை வாசியுங்கள். உங்கள் மூளையும் இதயமும் ஒன்றை ஒன்று தழுவிக்கொண்டு ஒன்று கலக்கும்வரை வாசியுங்கள். ஒவ்வொரு சொல்லுக்கும் தனியே உயிர் உண்டு. வாசம் உண்டு. நிறம் உண்டு. அந்த உயிரை, வாசத்தை, நிறத்தை உணரும்வரை வாசியுங்கள். ஒரு சொல்லைப் படித்ததும் அதன் பொருள் நினைவுக்கு வருவது மாதிரி அந்தப் பொருளே உயிர்பெற்று எழுந்து உங்கள் முன்பு தோன்றும்வரை வாசியுங்கள்.

நீங்கள் ஓர் ஆண் என்றால் ஒரு பெண்ணாக இருப்பது என்றால் என்ன, ஒரு பெண்போல் சிந்திப்பது என்றால் என்ன, ஒரு பெண்போல் வாழ்வது என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ளும்வரை வாசியுங்கள். நீங்கள் ஒரு பெண் என்றால் ஆண் உலகம், ஆண் சிந்தனை, ஆண் வாழ்க்கை புரியும்வரை வாசியுங்கள்.

உங்களால் கவலையின்றி ஓரிடத்தில் அமர்ந்து ஒரு புத்தகத்தை வாசித்து முடிக்க முடியும் என்றால், நீங்கள் வாழும் அதே உலகில் ஆயிரம் கவலைகளோடும் ஆயிரம் அல்லல்களோடும் கிடந்து அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் பெரும் மக்கள் கூட்டத்தின் கதைகளை வாசியுங்கள். உங்களைப் போல் ஏன் அவர்களால் இருக்க முடியவில்லை? உங்களுக்குக் கிடைத்ததைப் போல் அவர்கள் கரங்களுக்கு ஏன் புத்தகம் கிடைக்கவில்லை? உங்களைப் போல் ஏன் அவர்களால் வாசிக்க முடியவில்லை? அவர்கள் கவலைகளும் அல்லல்களும் உங்களைத் தொற்றிக்கொள்ளும்வரை, அவர்களுக்காக உங்கள் உடலும் உள்ளமும் பதறும்வரை வாசியுங்கள்.

உங்களை மகிழச் செய்யும், உங்களைப் புன்னகைக்க வைக்கும், உங்களுக்கு மனநிறைவைத் தரும் கதைகளை மட்டுமல்ல. உங்களை அலைக்கழிக்கும், தொந்தரவு செய்யும், அழ வைக்கும் கதைகளையும் வாசியுங்கள். உங்களை உடைத்தும் நொறுக்கியும் போடும் கதைகளையும் உங்களை ஆக்கிரமித்துக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்துத் தின்னும் கதைகளையும் வாசியுங்கள்.

உலகில் பலவிதமான மனிதர்கள் இருப்பதால்தான் பலவிதமான கதைகள் இருக்கின்றன என்பது புரியும்வரை, வெறுப்போ கோபமோ இன்றி மனிதர்களையும் கதைகளையும் காணும் கண்களைப் பெறும்வரை வாசியுங்கள்.

ஒரு குழந்தையாக, ஒரு வண்ணத்துப்பூச்சியாக,, ஒரு டிராகனாக, ஒரு தேவதையாக, ஒரு பூதமாக, ஒரு சூறாவளியாக நீங்களே மாறும்வரை படியுங்கள். சொற்களைக் கொண்டு இந்த மாயத்தை எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பது புரியும்வரை படியுங்கள்.

அதன்பின் எழுதத் தொடங்குகள். உங்கள் கதையில் உயிர் இருக்கும். உண்மையும் இருக்கும்.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x