

‘நான்தான்
உலகத்தை வரைந்தேன்
வானத்தில் மிதந்தேன்
வானத்தை நான்
கையில் பிடித்துக் கூட்டிச்சென்றேன்.
வானம் என்னைக்
காற்றால் கட்டிப்போட்டது
கட்டிப்போடும் நேரத்தில்
சூரியன் என்னை வரைந்தது!’
இந்த அழகிய கற்பனை வளம் மிக்கக் கவிதையை எழுதியவர் யார்? மகிழ் ஆதன். உங்களைப் போன்ற சிறுவர்களில் ஒருவர்தான். நான்கைந்து வரிகளில் அழகான வார்த்தைகளைக் கோத்து கவிதைகளை உருவாக்கிவிடுகிறார். சில கவிதைகள் ரசிக்க வைக்கின்றன. சில கவிதைகள் ஆச்சரியப்படுத்துகின்றன.
‘கண்ணில் பட்ட ஒளி
காணாமல் பறந்து போச்சு
பறந்து போன ஒளி
சூரியனாகத் திரும்பி வரும்’
எப்படி இவ்வளவு அழகாக எழுதி யிருக்கிறாய் என்று கேட்டால், “திடீர்னு சொல்ல ஆரம்பிச்சிடுவேன். கவிதைக்கான சொற்களை நான் படிக்கும் புத்தகங்களிலும் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இருந்து எடுத்துக்குவேன். சில சொற்கள் தன்னாலேயே வந்துரும்” என்கிறார் இந்தக் கவிஞர்.
கூடுவாஞ்சேரியில் வசிக்கும் மகிழ் ஆதன், அரசுப் பள்ளியில் (தமிழ் வழிக் கல்வி)நான்காம் வகுப்பு படித்துவருகிறார். நான்கு வயதிலிருந்தே கவிதைகளைச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்!
“நான் பார்க்கும் படிக்கும் விஷயங்களை யோசிச்சிட்டே இருப்பேன். கவிதை சொல்ல ஆரம்பிச்ச உடனே என் அம்மாவும் அப்பாவும் எழுதி வைப்பாங்க. மாசக் கணக்குல கவிதை சொல்லாமலே இருப்பேன். ஒரே நாள்ல நிறைய கவிதைகளைச் சொல்லவும் செய்வேன். அது ஏன்னு எனக்கே தெரியாது. கவிதை சொல்லுன்னு அம்மாவும் அப்பாவும் கேட்க மாட்டாங்க. நானா சொன்னால்தான் உண்டு” என்று சொல்லும் மகிழ் ஆதன், இதுவரை முந்நூறுக்கும் மேற்பட்ட கவிதைகளைச் சொல்லியிருக்கிறார்!
இந்த வயதுக்குரிய குழந்தைகளைப் போலவே இவருக்கும் கதைப் புத்தகங்கள், கிரிக்கெட், ஸ்பைடர் மேன், ஜாக்கிசான், டோராவின் பயணங்கள், வருத்தப்படாத கரடி சங்கம் போன்றவை எல்லாம் பிடிக்கும். இவை தவிர, பறவைகளை உற்றுநோக்குவதையும் இயற்கையை ரசிப்பதையும் ஆர்வமாகச் செய்கிறார். 25 பறவை இனங்களை அடையாளம் காணத் தெரிகிறது. கவிதைகளைப் போலவே கதைகளையும் சொல்கிறார். ஓவியங்களையும் தீட்டுகிறார்.
மகிழ் ஆதனின் கவிதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 75 கவிதைகள், ‘நான்தான் உலகத்தை வரைந்தேன்’ என்கிற தலைப்பில் புத்தகமாக வந்திருக்கிறது. கவிதைகளைப் புத்தகமாகக் கொண்டுவந்துள்ள மிக இளம் வயது தமிழ்க் கவிஞர் மகிழ் ஆதன்தான்!
அருவிபோல் கவிதைகளைக் கொட்டும் மகிழ் ஆதன், இன்னும் பல புத்தகங்களை எழுத வாழ்த்துகள்!