

காலை உணவு உண்ணுவோம்
கவலையின்றி வாழுவோம்
காலை உணவை உண்டால்தான்
கல்வியில் சிறந்து திகழ்ந்திடலாம்.
பள்ளிக்குக் கிளம்பும் வேளையிலே
பசியும் எடுக்க வழியில்லையே
பசியும் எடுக்கும் வேளையிலே
பாடம் நடந்துகொண்டிருக்குமே.
பசியில் கவனம் சிதறிடுமே
படிப்பினில் நாட்டம் குறைந்திடுமே
புசித்துவிடுவோம் காலை உணவை
புரிந்துகொள்வோம் பாடங்களை.
மதிப்பெண் அதிகம் பெறுவதற்கும்
மயக்கம் போடாமல் இருப்பதற்கும்
புதிதாய்க் கற்றுக்கொள்வதற்கும்
புசிப்போம் காலை உணவையே.
ஆற்றல் மேலும் பெருகிடவும்
ஆரோக்கியம் சிறந்து விளங்கிடவும்
வேலை நன்றாய்ச் செய்திடவும்
காலை உணவைப் புசித்திடுவோம்.