Published : 31 Mar 2021 03:15 am

Updated : 31 Mar 2021 08:04 am

 

Published : 31 Mar 2021 03:15 AM
Last Updated : 31 Mar 2021 08:04 AM

மாய உலகம்: ஒரு மாணவரின் பயணம்

a-journey-of-a-student

எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று கண்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்குமாறு அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு மத்தியில் யுவான் சுவாங் வேறுபட்டவராக இருந்தார். எனக்குப் புத்தர் வேண்டும் என்றார் அவர். புத்தர் என்றால் பொம்மையா என்று கேட்டபோது இல்லை புத்தரே என்றார்.

பாவம் குழந்தை ஆசைப்பட்டு கேட்கிறது என்று ஒரு சின்னப் புத்தகம் வாங்கிக் கொடுத்தார்கள். புத்தர் யார், அவர் எங்கே வாழ்ந்தார், என்ன உபதேசித்தார் என்பதை எல்லாம் விளக்கும் புத்தகம் அது. குழந்தைக்கு அதெல்லாம் புரியுமா என்ன? நீங்கள் வேண்டுமானால் பாருங்கள், படம் பார்த்துவிட்டு அல்லது ஒன்றிரண்டு வரிகள் படித்துப் பார்த்துவிட்டு இது வேண்டாம், விளையாட வேறு ஏதாவது கொடு என்ற கேட்காவிட்டால் என் பெயரை மாற்றிக்கொள்கிறேன்! அவர்கள் எதிர்பார்த்தபடியே சில மணி நேரத்தில் புத்தகத்தோடு திரும்பி வந்தார் யுவான் சுவாங். முடித்துவிட்டேன், நிறைய பக்கங்களில், பெரிய புத்தர் வேண்டும்!


யுவான் சுவாங் குழந்தை அல்ல, குட்டி யானை என்பது உறைத்தது. வாங்கி வந்து கொடுக்கும் எல்லாப் புத்தகங்களையும் பொரி பொட்டலம் போல் காலி செய்துவிட்டு, இன்னும் வேண்டும் என்பார். ஒருவேளை போகப்போகச் சரியாகிவிடுமோ என்று பார்த்தார்கள். 13 வயதாகும்போது புத்தர் மீதான ஆர்வம் 13 மடங்கு அதிகரித்திருந்தது. இதற்கு மேல் ஆகாது என்று அள்ளிக்கொண்டு போய் சீனாவிலிருந்த ஒரு பவுத்த மடாலயத்தில் சேர்த்துவிட்டார்கள்.

கரும்புத் தோட்டத்தில் கொண்டுவந்து போட்டது போல் இருந்தது யுவான் சுவாங்குக்கு. புத்தர் பற்றிய அத்தனை சின்ன, பெரிய நூல்களையும் ஆசையோடு சுவைத்தார். அவ்வளவுதான், மேற்கொண்டு எதுவும் இங்கே கிடைக்காது என்று தெரிந்ததும் கவலையோடு கன்னத்தில் கை வைத்துக்கொண்டார். புத்தர் மீதான என் ஆர்வம் ஏன் ஒவ்வொரு நாளும் விரிந்து வளர்ந்துகொண்டே போகிறது? ஏன் என் பசி அடங்க மாட்டேன் என்கிறது? ஏன் புத்தர் உறங்க விடாமல் செய்கிறார்? ஏன் என் நினைவுகளையும் கனவுகளையும் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறார்? முழுமையான புத்தரை, நிறைவான புத்தரைக் கண்டடைய என்ன வழி?

ஒரு வழிதான் தெரிந்தது. ஆனால், அதைப் பகிர்ந்துகொண்டபோது உடன் இருந்தவர்கள் தடுத்தார்கள். “வேண்டாம் யுவான் சுவாங்! சீன மன்னரைப் பற்றி உனக்குத் தெரியும். இந்தியா போன்ற தொலைதூர தேசத்துக்குச் செல்வதற்கு அவர் நிச்சயம் அனுமதிக்க மாட்டார். அதுவும் புத்தரின் பெயரைச் சொன்னால் ஒழித்தேவிடுவார். சும்மா விளையாட்டுக்குதானே சொல்கிறாய்?”இல்லை என்று மூட்டை, முடிச்சுகளோடு சீனாவைவிட்டு வெளியேறினார் யுவான் சுவாங்.

நள்ளிரவில் சில நண்பர்களின் உதவியோடு ரகசியமாகச் சீன எல்லையைக் கடந்தார்.அதன்பின் எடுத்து வைத்த ஒவ்வோர் அடியிலும் ஏதேனும் ஒரு வடிவில் ஆபத்து தோன்றியது. கடும் குளிரிலிருந்து மீண்டால் கடும் வறட்சி தாக்கும். திருடர்களிடமிருந்து தப்பினால் வாள் ஏந்திய கொள்ளையர்கள் சூழ்வார்கள்.

அடை மழையிலிருந்து விடுபட்டு அப்பாடா என்பதற்குள் பெரும் சூறாவளி சூழும். தயக்கமோ குழப்பமோ அச்சமோ யுவான் சுவாங்கிடம் தோன்றியிருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? ஏதோ பட்டு விரிக்கப்பட்ட பாதையில் நடப்பதைப் போல் யுவான் சுவாங் நடந்து போய்க்கொண்டே இருந்தார்.

என் வலியைவிட, என் அச்சத்தைவிட, என் களைப்பைவிட என் கனவு பெரியது. இந்திய மண்ணில் கால் பதித்ததும் தன் ஆசான் புத்தரையே கண்டுவிட்டதுபோல் சிலிர்த்துக்கொண்டார் யுவான் சுவாங். என்ன செய்வது என்று தெரியாமல் பரவசத்தோடு அங்கும் இங்கும் அலைந்தார். புத்தர் பிறந்த இடம், புத்தர் அமர்ந்த இடம், புத்தர் தன்னைக் கண்டடைந்த இடம், புத்தர் உபதேசம் செய்த இடம், புத்தரின் நினைவிடம் என்று தேடித் தேடிக் கண்டு தொழுதார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அத்தனை புத்த விகாரைகளையும் தரிசித்தார்.

நான் இப்போது சுவாசிப்பது புத்தரின் காற்றை. பருகுவது புத்தர் கண்ட ஆற்றின் நீரை. அமர்ந்திருப்பது புத்தர் அமர்ந்த மரத்தடியில். என் கால்கள் புத்தரின் நிலத்தில் ஊன்றியிருக்கின்றன. புத்தர் கண்ட காட்சிகளை என் கண்களும் காண்கின்றன.

ஆசியா முழுக்க வலம் வந்தார் யுவான் சுவாங். அவருடைய பயணம் 10,000 மைல்களைக் கடந்து நீண்டுகொண்டே இருந்தது. உற்சாகமோ அதைக் காட்டிலும் அதிகமாக வளர்ந்துகொண்டிருந்தது. பவுத்த அறிஞர்களையும் துறவிகளையும் பெரியார்களையும் தேடித் தேடி சந்தித்து பாடம் படித்துக்கொண்டார். நாலந்தா பல்கலைக்கழகம் சென்று தன்னைக் கரைத்துக்கொண்டார். இது என்ன, அது என்ன, இந்தச் சொல்லின் பொருள் என்ன, அதன் தத்துவம் என்ன என்று தோண்டித் துருவிக்கொண்டே இருந்தார். ஒருவேளை சமஸ்கிருதம் கற்றுக்கொண்டால் இன்னும் நன்றாக புத்தரைப் புரிந்துகொள்ள முடியுமோ என்று தோன்ற, அதையும் கற்றுக்கொண்டார். ஐந்து, பத்து, பதினைந்து என்று ஆண்டுகள் கூடிக்கொண்டே போயின. கிளம்பும் நேரமும் வந்துவிட்டது. நான் தேடி வந்த புத்தர் கிடைத்துவிட்டாரா?

புத்த கயாவுக்கு வந்து கைகளைக் கூப்பிக்கொண்டார் யுவான் சுவாங். அவர் கண்களிலிருந்து நீர் வழிந்துகொண்டிருந்தது. “புத்தர் பெருமானே, நான் கனவு கண்டதுபோல் உங்கள் நிலத்தை வந்தடைந்துவிட்டேன். ஆனால், உங்களை அடைவதற்கான பயணத்தை இனிதான் தொடங்க வேண்டும். உங்களை எந்தப் புனித நூலுக்குள்ளும் அடக்க முடியாது என்பதை ஏராளமான புனித நூல்களைப் பார்வையிட்ட பிறகே நான் உணர்ந்துகொண்டேன். உங்களை நினைவுபடுத்த ஏராளமான சிலைகளும் விகாரைகளும் நினைவிடங்களும் உள்ளன. சக மனிதர்களை நெருங்காமல், சக உயிர்களோடு ஒன்று கலக்காமல் உங்களை நெருங்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டேன்.

பவுத்தம் என்பது சென்று சேர வேண்டிய இடம் அல்ல, அது ஒரு பாதை என்பதைப் புரிய வைத்ததற்கு நன்றி. என் மனம் விரிய, விரிய என் பாதையும் வளரும். என் பாதை வளர வளர நான் கற்றுக்கொண்டே இருப்பேன். என் தேடல் முடிவற்றது. நான் ஒரு பயணி. நான் ஒரு பவுத்தன். எனவே நான் ஒரு மாணவன்.”

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.comஒரு மாணவரின் பயணம்மாய உலகம்A journey of a studentயுவான் சுவாங்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

pregnant-father

கர்ப்பிணித் தந்தை!

இணைப்பிதழ்கள்

More From this Author

x