

மணியும் கனியும் ஐயனார் கோயில் அருவியில் குளித்துக் கொண்டிருந்தனர். திடீரென்று இருவரும் வழுக்குப் பாறையில் ஏறி உட்கார்ந்து, தண்ணீரில் வழுக்கிக்கொண்டு தொப்பென்று விழுந்தனர். அந்த மகிழ்ச்சியில் இருவரும் கூக்குரலிட்டனர்.
அப்போது நீலன் வந்து சேர்ந்தான். மூவரும் பேசிக்கொண்டே சிற்றுண்டியைச் சாப்பிட்டனர். அருவி நீரைப் பருகிவிட்டு, வனத்துக்குள் சென்றனர். அடர்ந்த பெரிய மரங்கள் காற்றில் வானைச் சுத்தம் செய்து கொண்டிருந்தன. ஒற்றையடிப் பாதையில் மூவரும் அமைதியாக நடந்தனர்.
மரக்கிளைகளில் அமர்ந்திருந்த பறவைகள் இசைக்கச்சேரியை நிகழ்த்திக்கொண்டிருந்தன. தூரத்தில் விலங்குகளின் சத்தம் அச்சத்தை உண்டாக்கியது. தொடர்ந்து மழை பெய்ததால், சருகுகளின் மீது நடக்கும் போது ’சதக் புதக்’ என்று சத்தம் வந்துகொண்டிருந்தது. தண்ணீர் கசிந்து கால்களை நனைத்தது.
எதிரே வந்துகொண்டிருந்த நரிக்கூட்டம் இவர்களைக் கண்டதும் ஓட்டம் எடுத்தது. பெரிய சாம்பல் வண்ண மலை அணில்கள், நீண்ட வால்களைக் கொண்டு மரக்கிளைகளில் தாளம் போட்டுக்கொண்டிருந்தன.
வேகமாகக் காற்று வீசியது. மரங்களில் அமர்ந்திருந்த மழைத்துளிகள் இவர்கள் மீது விழுந்தன. செங்காந்தல் மலர்கள் கண்களைப் பறித்தன. ஈச்ச மரத்தைக் கண்டதும் நீலன் வேகமாக ஏறினான். பழங்களைத் தட்டிவிட்டான். மணியும் கனியும் பழங்களை எடுத்துச் சுவைத்தனர்.
அப்போது மரத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஒரு பாம்பு, பொத்தென்று கீழே விழுந்தது. மணியும் கனியும் அலறியடித்துக் ண்டு ஓடினார்கள்.
“அட, ஓடாதீங்கப்பா. இந்தப் பாம்பு கடிக்காது. உங்களுக்குப் பயந்து ஓடுது பாருங்க” என்றான் நீலன்.
அவர்கள் பயம் நீங்கி, நீலனிடம் திரும்பி வந்தனர். மீண்டும் வனத்துக்குள் நடக்க ஆரம்பித்தனர். அப்போது ஏதோ சத்தம் கேட்டது. உற்றுக் கவனித்தான் நீலன். பிறகு சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்றான். மணியும் கனியும் நீலன் பின்னாலேயே சென்றனர்.
அங்கே மரத்தில் ஒரு குரங்கு அமர்ந்திருந்தது. மரத்திலிருந்த ஒரு துவாரத்துக்குள் அதன் ஒரு கை நுழைந்திருந்தது. கையை எடுக்க முடியாமல் வலியில் தவித்துக்கொண்டிருந்தது. நீலன் பாறையில் ஏறி, அந்தத் துவாரத்தை எட்டிப் பார்த்தான். துவாரம் வெளிச்சமாக இருந்தது. குரங்கின் கைக்குள் ஒரு பழம் வேறு தென்படது. எதிர்ப் பக்கத்தில் துவாரம் பெரியதாக இருந்தது.
“என்ன ஆச்சுப்பா?” என்று கேட்டான் கனி.
“அந்த மரத்துல ஒரு ஓட்டை இருக்கு கனி. ஒரு பக்கம் பெரிய ஓட்டையா இருக்கு. மறுபக்கம் சின்ன ஓட்டையா இருக்கு. குரங்கு பழத்தை முதல்ல அந்தப் பக்கம் பெரிய ஓட்டை வழியா வச்சிருக்கு. ஆனா, இப்போ சின்ன ஓட்டை வழியா எடுக்கறதுக்குக் கையை விட்டிருக்கு. அதான் கை உள்ளே மாட்டிக்கிருச்சு. பழத்தை விட்டுட்டா கையை எடுத்துடலாம். அது இந்தக் குரங்குக்குத் தெரியாது. பழத்தையும் விடாது. கையையும் எடுக்காது.”
“குரங்கு புத்திசாலிதானே நீலன்?”
“புத்திசாலிதான். ஆனா, இந்த விஷயத்துல மட்டும் முட்டாள்தனமா நடந்துக்கும். அதனால்தான் குரங்காட்டிகள் ஒரு சின்னப் பானையில் கல்லைப் போட்டு, ஒரு பழத்தையும் வைப்பாங்க. குரங்கு ஆசையோட பழத்தை எடுக்கக் கையை விடும். ஆனா, கையை எடுக்க முடியாது. சுலபமா குரங்குகளை இப்படிப் பிடிச்சிட்டுப் போயிடுவாங்க.”
“ஐயையோ... பாவமே...” என்றான் மணி.
இவர்கள் இருவரையும் அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டுக் கிளம்பினான் நீலன். ஐந்து நிமிடங்களில் மாம்பழங்களுடன் திரும்பிவந்தான். ஒரு பழத்தை எடுத்து, குரங்கிடம் கொடுத்தான். இன்னொரு கையால் வாங்கிக்கொண்டது. பெரிய துவாரம் வழியே குரங்கு கையில் இருந்த பழத்தைப் பறித்தான். பழம் நீலன் கைக்கு வந்தவுடன் குரங்கு வேகமாகக் கையை வெளியில் எடுத்தது. நிம்மதியுடன் ஓடிப் போனது.
“பிரமாதம் நீலன்! ஒருவேளை நீ இப்படிச் செய்யலைன்னா என்ன ஆயிருக்கும்?” என்று கேட்டான் மணி.
“அது அவ்வளவுதான். பழத்தையும் விடாது, கையையும் எடுக்க முடியாது.”
“நல்லவேளை நீலன், குரங்கின் உயிரைக் காப்பாத்திட்டே!”
“சரி, மழை வர்ற மாதிரி இருக்கு, நாம திரும்பிப் போயிடலாம்” என்று நீலன் சொன்னதும் மணியும் கனியும் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.