

கரோனா நோய்த்தொற்றால் புத்தகம் பதிப்பித்தலில் பெரும் இடைவெளி ஏற்பட்டிருந்த நிலையில், சென்னை புத்தகக் காட்சி சற்றுத் தாமதமாகத் தற்போது நடைபெற்றுவருகிறது. பொதுவாக சென்னைப் புத்தகக் காட்சியை ஒட்டி புதிய நூல்கள் அதிகம் வெளியாகும். இந்த முறை அதிகமில்லாவிட்டாலும், குறிப்பிடத்தக்க சிறார் நூல்கள் வெளியாகியுள்ளன.
புக்ஸ் ஃபார் சில்ரன் பதிப்பகத்தின் சார்பில் பல்வேறு சிறார் நூல்கள் வெளியாகியுள்ளன. ஒரு மலைக்கிராமத்தைச் சேர்ந்த சிறுமி மேற்கொள்ளும் ஆய்வு தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்குத் தேர்வு செய்யப்படுவதன் பின்னணியில் விழியன் எழுதிய ‘மலைப்பூ’, அவரே எழுதிய ‘பென்சில்களின் அட்டகாசம் 2.0’, எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய ‘அலாவுதீனின் சாகசங்கள்’, கதைசொல்லி சரிதா ஜோ எழுதிய ‘நீல மரமும் தங்க இறக்கைகளும்’ ஆகிய கதை நூல்கள் வெளியாகியுள்ளன.
ஆசிரியை மோ. மோகனப்பிரியா மொழிபெயர்ப்பில் ‘வேதியியலின் கதை‘ என்கிற தலைப்பில் காமிக்ஸ் வடிவத்தில் அறிவியலின் வரலாற்றை சுவாரசியமாகக் கூறும் நூல், ம. சுரேந்திரனின் ‘சங்க இலக்கியக் கதைகள்’, ச. சுப்பாராவ் மொழிபெயர்ப்பில் ‘டால்ஸ்டாயின் ராஜாவும் சட்டையும்’ ஆகிய நூல்களும் வெளியாகி யுள்ளன. (புக்ஸ் ஃபார் சில்ரன் தொடர்புக்கு: 044-24332924)
சுட்டி எழுத்தாளர்கள்
சிறார் இலக்கியத்தில் புதுமையாகச் சிறார் எழுத்தாளர்களே எழுதிய பல நூல்களை வானம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஆறு வயதுச் சிறுவன் ரமணா எழுதிய ‘சிம்பாவின் சுற்றுலா’, 5-ம் வகுப்பு படிக்கும் மீனா எழுதிய ‘வெள்ளைப்பூக்கள்’, பள்ளி மாணவி எஸ். அபிநயா எழுதிய ‘புலிப்பல்லும் நரிக்கொம்பும்’, மாணவனாக இருந்த காலத்தில் மலையாளத்தில் அபிமன்யு எழுதிப் புகழ்பெற்ற ‘வாயும் மனிதர்களும்’ ஆகிய நூல்கள் இந்தப் புத்தகக் காட்சியில் வெளியாகியுள்ளன.
தமிழக வரலாறு, தொல்லியல் ஆராய்ச்சிகளின் பின்புலத்தில் உதயசங்கர் எழுதியுள்ள ‘ஆதனின் பொம்மை’, யெஸ். பாலபாரதி எழுதிய ‘பூமிக்கடியில் ஒரு ரகசியம்’, சுகுமாரன் மொழிபெயர்ப்பில் ‘குட்டி இளவரசி, ‘நூலகத்தில் எலி’ ஆகிய சிறார் நூல்களும் வானம் பதிப்பகத்தின் சார்பில் வெளியாகியுள்ளன. (வானம் தொடர்புக்கு: 91765 49991)
மாறுபட்ட நூல்கள்
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து’, ‘அபாய வீரன்’ ஆகிய சிறார் கதைத் தொகுப்புகள், ‘அண்டசராசரம்’ என்கிற நாவல் ஆகியவை வெளியாகியுள்ளன. (தேசாந்திரி வெளியீடு, தொடர்புக்கு: 9600034659).
பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியை நடத்திவரும் வெற்றிச்செழியன் எழுதியுள்ள ‘உள்ளத்தனையது உயர்வு’ நூல் குழந்தைகள் பாடும் பாடல்களாக,திருக்குறளை எளிமையாக்கித் தந்துள்ளது. இதேபோல் ‘உருவு கண்டு’ என்கிற தலைப்பில் திருக்குறளை அடிப்படையாகக் கொண்ட நாடகங்கள், ‘தெய்வத்தால் ஆகாதெனினும்’ என்கிற தலைப்பில் திருக்குறள் கதைகள் ஆகியவற்றையும் வெற்றிச்செழியன் எழுதியுள்ளார். (தொடர்புக்கு: 98409 77343)
தா.வே. பத்மா எழுதி ஜே. ஷாஜஹான் மொழிபெயர்த்த ‘கனவினைப் பின்தொடர்ந்து’ - வரலாற்றுக் கதைகள் (எதிர் வெளியீடு, தொடர்புக்கு: 99425 11302) நூலின் மறுபதிப்பும் வெளியாகியுள்ளது.