Last Updated : 20 Jan, 2021 03:13 AM

 

Published : 20 Jan 2021 03:13 AM
Last Updated : 20 Jan 2021 03:13 AM

எட்டுத்திக்கும் சிறகடிக்கும் கதைகள் - அரேபியா: நஜ்மாவும் பாம்புகளும்

பணக்காரர் சுலைமானின் மகள்தான் நஜ்மா. அவருக்கு எல்லாப் பிராணிகளின் மொழியும் புரியும்! ஒரு நாள் அப்பாவுக்கும் மகளுக்கும் சண்டை வந்துவிட்டது.

அப்போது சுலைமான் கோபத்துடன், “நாளைக் காலையில் இந்த மாளிகையின் வாசலுக்கு யார் வருகிறாரோ, அவருக்குத் தான் உன்னைத் திருமணம் செய்து கொடுப்பேன்” என்றார்.

மறுநாள் காலை, சலீம் எனும் இளம் யாசகர் அங்கே வந்தார். தீராத பசி கொண்டவர் அவர்!

சுலைமான் தன் மகளை அவருக்குத் திருமணம் செய்து அனுப்பினார்.

நஜ்மா அழுதார். பிறகு தன்னைத் தேற்றிக்கொண்டார். ‘இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவேன்!’ என்று உறுதிகொண்டார்.

குடிசையில் கணவனும் மனைவியும் வசித்தார்கள். கொஞ்சம் காலத்துக்குப் பிறகு நஜ்மா, ‘இங்கே எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும், என் கணவனுக்கு வயிறு நிறையச் சாப்பாடு போட முடியவில்லை. வேறு நாட்டுக்குப் போகலாம்’ என்று முடிவு செய்தார்.

அவர்கள் புறப்பட்டார்கள். வழியில் ஒரு காட்டில் ஓய்வெடுத்தார்கள். சலீம் தூங்கிவிட்டார். நஜ்மா, தண்ணீர் எடுத்து வருவதற்காகப் போனார்.

நஜ்மா திரும்பி வந்தபோது, ஓர் அதிசயமான காட்சி! தூங்கிக்கொண்டிருக்கும் சலீமின் வாயிலிருந்து ஒரு பாம்பு எழுந்து நின்றது! பக்கத்தில் இருக்கும் புற்றிலிருந்து மற்றொரு பாம்பு தலை தூக்கிப் பார்த்தது!

புற்றுப் பாம்பு, மற்றொரு பாம்பிடம் சொன்னது: “நீ அந்த இளைஞனின் வயிற்றிலிருந்து போகக் கூடாதா? அவன் சாப்பிடுவதை எல்லாம் நீ எவ்வளவு காலம்தான் தின்றுகொண்டிருப்பாய்?”

சலீமின் வாயிலிருந்த பாம்பு சொன்னது: “நீ மட்டும் என்ன நல்லவனா? நீ பெரும் செல்வத்தை அல்லவா உன் புற்றுக்குள் பதுக்கி வைத்திருக்கிறாய்!”

“அந்த இளைஞன் கொஞ்சம் கடுகும் சீரகமும் அரைத்துத் தின்றால் உன் கதை முடிந்துவிடுமே!” என்று கோபத்துடன் சொன்னது புற்றுப்பாம்பு.

“உன் புற்றில் படர்ந்திருக்கும் கொடியை நசுக்கிப் பிழிந்து உன் மேல் சொட்டினால் உன் கதையும் முடிந்துவிடுமே!”

இப்படிச் சொல்லிவிட்டு அந்தப் பாம்பு மீண்டும் சலீமின் வயிற்றுக்குள் போய்விட்டது. இன்னொரு பாம்பு புற்றுக்குள் சென்று ஒளிந்துவிட்டது!

நஜ்மா விரைவாக பையிலிருந்து கடுகும் சீரகமும் எடுத்து அரைத்து சலீமிடம் கொடுத்தார். அதைத் தின்ற அடுத்த நொடியே அவர் வயிற்றிலிருந்த பாம்பு வெளியே வந்து செத்து விழுந்தது!

அதன் பிறகு சலீமின் உருவமே மாறிவிட்டது! ஆரோக்கியமும் அழகும் கொண்ட இளைஞராக ஆனார்!

நஜ்மா, புற்றின் மேல் படர்ந்திருந்த கொடியைச் சாறு பிழிந்து புற்றிலேயே ஊற்றினார். உடனே அதற்குள் இருந்த பாம்பும் செத்துவிட்டது!

சலீம், ஒரு பணக்கார வியாபாரியின் மகன். வெகு காலத்துக்கு முன்பு பயணத்தின்போது காட்டில் படுத்துத் தூங்கிவிட்டார். அவர் விழித்தபோது தீராத பசி ஆரம்பித்திருந்தது! தூங்கும்போது பாம்பு அவர் வயிற்றுக்குள் போய்விட்டது! எப்போதும் பசி, பசி என்று அலையும் மகனை அந்த வியாபாரி வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார்.

சலீம், நஜ்மாவிடம், “நீ என்னைக் காப்பாற்றிவிட்டாய்! உன்னைத் திருமணம் செய்தது என் பாக்கியம்!” என்றார்.

அந்த மண் புற்றை இடித்தபோது, அதற்குள் ஒரு குடம் நிறையத் தங்க நாணயங்கள் இருந்தன! பிறகு அவர்கள் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x