Published : 06 Jan 2021 03:13 am

Updated : 06 Jan 2021 09:58 am

 

Published : 06 Jan 2021 03:13 AM
Last Updated : 06 Jan 2021 09:58 AM

மாய உலகம்: பாரதிதாசன் பேசுகிறார்

maaya-ulagam
ஓவியம்: லலிதா

கனக சுப்புரத்தினம் என்பதுதான் என் பெயர். அந்தப் பெயரில்தான் பள்ளியில் இணைந்தேன், அந்தப் பெயரில்தான் படித்தேன். படித்து முடித்து தமிழாசிரியர் பணியில் இணைந்தபோதும் என் பெயர் அதுதான். வகுப்புக்குப் போனோமா, பாடம் எடுத்தோமா, மணி அடித்ததும் வீட்டுக்குக் கிளம்பினோமா என்று காலத்தை ஓட்டியிருந்தால் கனக சுப்புரத்தினமாகவே எப்போதும் நீடித்திருப்பேன். என்ன செய்ய? நான் கற்ற தமிழ் சும்மா இருக்க விட்டதா என்னை? அமைதி, அமைதி என்று ஆயிரம் முறை அதட்டினாலும் சும்மா கிடக்கின்றனவா இந்தக் கைகள்?

எழுத ஆரம்பித்தேன். எழுத, எழுத வளர்ந்துகொண்டே போனது என் கவிதை. எடுக்க, எடுக்க ஊறிக்கொண்டே இருந்தது என் தமிழ். அண்ணாந்து நிற்கும் மலையைப் பாடினேன். என்னைத் தொட்டுச் சென்ற தென்றலைப் பாடினேன். முல்லை மலர்களைப் பாடினேன். மரங்களைப் பாடினேன். சுட்டெரிக்கும் சூரியனைப் பாடினேன். குளம், குட்டை, ஏரிகளை நிரப்பும் மழையைப் பாடினேன். வயல், தோட்டம், பனித்துளி, விண்மீன், வெண்ணிலா, நிலம், பிறை, முகில், கொய்யாப்பூ அனைத்தையும் பாடித் தீர்த்தேன்.


மனம் நிறையவில்லை. ஏதோ ஒரு வெறுமை. கண் முன்னால் அப்பட்டமாக நிற்கும் ஏதோ ஒன்றைத் தவறவிட்டுவிட்டது போல் ஒரு படபடப்பு. என் சொற்களில் அழகு இருந்தது, உணர்வு இல்லை. இசை இருந்தது, உயிரோடட்டம் இல்லை. எங்கே தவறு?

என்னை அறியாமல் பாரதியாரின் பாடல்களை முணுமுணுக்கத் தொடங்கினேன். பாரதியார் பாடிய அதே நிலவை, அதே விண்மீனை, அதே மலையை, அதே கடலைத்தானே நானும் பாடுகிறேன். இருந்தும் என் தமிழ் ஏன் பாரதி தமிழ்போல் இல்லை? அலமாரிக்குச் சென்று என்னிடமிருந்த பாரதி பாடல்களை எல்லாம் திரட்டி எடுத்து வந்து என் முன்னால் பரப்பிக்கொண்டேன். கவனமாக ஒவ்வொன்றையும் எடுத்துப் பார்த்தேன். இதில் எது பாரதியை ஒரு மகாகவியாக உயர்த்துகிறது? சட்டென்று மின்னல் ஒன்று வெட்டியது.

காவியம் பாடினாலும் சரி, கடவுளைப் பாடினாலும் சரி. பூவைப் பாடினாலும் சரி, பூனையைப் பாடினாலும் சரி. பாரதி என்ன பாடினாலும் அது மனிதனின் பாடலாகவே ஒலிக்கிறது. மனிதனை நீக்கிவிட்டால் வேறு எதுவும் பாரதிக்கு அழகாகத் தெரிவதில்லை. மனிதனைவிட எந்த ஒரு கடவுளும் அவருக்கு மேலானவராக இல்லை. கனவு காணும்போதுகூட அந்த மனிதனையே அவர் நினைத்துக்கொள்கிறார். தன் வலியை அல்ல, சக மனிதனின் வலியே அவரை வாட்டுகிறது. தன் விடுதலைக்காக அல்ல, சக மனிதனின் விடுதலைக்காகவே அவர் பாடுகிறார். அந்த மனிதனுக்காக அவர் எவ்வளவு வதைகளையும் தாங்கிக்கொள்ளத் தயாராக இருக்கிறார். அவர் உண்மையைப் பாடுவதால்தான் அவர் பாடல் அழகாக இருக்கிறது.

பாரதி போல் நான் எப்போது மனிதனைப் பாடுகிறேனோ, எப்போது உண்மையைப் பாடுகிறேனோ அப்போதுதான் என் பாடலில் உயிர் வளர ஆரம்பிக்கும். இந்தப் புரிதலோடு பசுமை கொஞ்சும் வயல் பரப்பைக் கண்டபோது சேறு பூசிய கால்களோடு வெளிப்பட்ட உழவனையே நான் கண்டேன். ஓங்கி உயர்ந்து நிற்கும் மலையல்ல, அதன் அடிவாரத்தில் ஒடுங்கிக்கிடந்த மனிதர்களின் மீதே என் கவனம் குவிந்தது. பசுமையும் குளிர்ச்சியும் மயக்கமும் விலகிக்கொள்ள, துயரமும் அடிமைத்தனமும் வலியும் என்னைச் சூழ்ந்துகொள்ள ஆரம்பித்தது. பாரதியின் மனிதன் என்னை ஆக்கிரமிக்க ஆரம்பித்தான். அந்தக் கணமே என் எழுத்து மாற ஆரம்பித்தது. அதே காகிதம். அதே பேனா. ஆனால், என் தமிழ் இப்போது உயிர்பெற்று எழுந்து நின்றது.

எழுதியதை இதழ்களுக்கு அனுப்பியபோது நண்பர்கள் படபடத்தனர். சுப்புரத்தினம், என்ன ஆயிற்று உங்களுக்கு? தேன் போல் எழுதிக்கொண்டிருந்த நீங்கள் ஏன் இப்படி மாறினீர்கள்? அரசுப் பணியில் இருந்துகொண்டு விடுதலை, சமத்துவம், கலகம், பெண் விடுதலை என்றெல்லாம் முழக்கமிடுவது ஆபத்தல்லவா? ஒன்று உங்கள் கவிதைகளை மாற்றுங்கள். அல்லது உங்கள் பெயரை. என்ன சொல்கிறீர்கள்? சட்டென்று சொன்னேன். என் கவிதையிலிருந்து ஒரே ஒரு சொல்லைக்கூட மாற்ற அனுமதிக்கமாட்டேன். வேண்டுமானால் என் பெயரை மாற்றிக்கொள்கிறேன். சொன்ன கையோடு ஒரு புதுப் பெயரையும் அப்போதே சூடிக்கொண்டேன்.

தேன் போல் குழைந்துகொண்டிருந்த நான் குளவியாக மாறியது பாரதியால். தமிழ் என்றால் இனிமை மட்டுமல்ல, வீரமும்தான் என்று நான் அறிந்தது பாரதியால். என் உணர்வாகவும் உயிராகவும் சொல்லாகவும் செயலாகவும் நிறைந்திருப்பவர் பாரதி. என் கவிதைகள் உங்களைச் சுடுகின்றன என்றால் அதற்குக் காரணம் பாரதியிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட கனல்.

என்னை மாற்றிய பாரதிக்காக என் பெயரை மாற்றிக்கொள்வது பொருத்தமானதுதான்.

எனக்குள்ளும் என் பாடல்களுக்குள்ளும் நிறைந்திருப்பது பாரதியின் தமிழ். பாரதி என் உயிர். என் ஆற்றலின் உரம். பாரதி என் வளையாத வாள். அவரிடமிருந்தே என் கவிதைகள் பாய்கின்றன. மூடநம்பிக்கைகள் களைந்து, சாதி மத பாகுபாடுகள் கடந்து, தன்மானத்தோடு தமிழினம் உயர்ந்து நிற்க வேண்டும் என்னும் பாரதியின் கனவுதான் என்னை ஒரு கவிஞனாக மாற்றியிருக்கிறது. என் தமிழில் உணர்வையும் என் உணர்வில் தமிழையும் கலந்தவர் பாரதி. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று நான் முழங்குவதற்குக் காரணம் பாரதி.

என்னை ஒளித்துக்கொள்வதற்காக அல்ல. மேலும் தீவிரமாக வெளிப்படுத்திக்கொள்வதற்காக என் பெயரை மாற்றிக்கொள்கிறேன். நான் யார், நான் எந்த மரபின் தொடர்ச்சி என்பதை என் புதிய பெயர் உலகுக்கு அறிவிக்கும். இனி நான் பாரதிதாசன்.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.comமாய உலகம்பாரதிதாசன் பேசுகிறார்பாரதிதாசன்பாரதியார்Maaya Ulagam

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x