Published : 30 Dec 2020 03:17 am

Updated : 30 Dec 2020 09:54 am

 

Published : 30 Dec 2020 03:17 AM
Last Updated : 30 Dec 2020 09:54 AM

கதை: இரவு எனக்குப் பிடிக்கும்!

taml-story
ஓவியம்: தமிழ்

இரவு வந்துவிட்டாலே அவ்வளவுதான். அதிரனுக்கு என்னவோ ஆகிவிடும். அம்மாவின் சேலையைப் பிடித்துக் கொண்டே திரிவான். அம்மா உட்கார்ந்தால் அவனும் உட்கார்வான். அம்மா சமையல் செய்யும்போது அவனும் நிற்பான். அம்மா தையல் மிஷனில் தைக்கும்போது அவனும் மடியில் உட்கார வேண்டும் என்று அடம்பிடிப்பான். அம்மா புத்தகம் வாசிக்கும்போது படிக்க விடாமல் புத்தகத்துக்குள் தலையை நீட்டுவான். அம்மாவை அங்கும் இங்கும் நகர விடமாட்டான்.

அம்மாவை அடிக்கடி தூக்கி வைத்துக்கொள்ளச் சொல்லிக்கொண்டிருப்பான். காரணம், பயம்! இருட்டைக் கண்டு பயம். இரவு வந்தால் இருட்டிவிடுகிறது. இருட்டி விட்டால் விளக்கு வெளிச்சம் வேண்டும். இல்லை என்றால் எதுவும் கண்களுக்குப் புலப்படாது. இருட்டில் ஏதேதோ சத்தம் வேறு கேட்கிறது. அதுவும் ரொம்பப் பெரிதாகக் கேட்கிறது.


டம்...

டமார்..

கீச்கீச்கீச்...

கீ கீ கீ கீ...

கூகூகூகூவ்...

குர்ர்ர்ர்ர்...

இன்னும் என்னென்னவோ சத்தங்கள்! அதிரனுக்கு இரவு நெருங்க நெருங்க பயம் வந்து விடும். தூங்கும்போதும் விளக்கு எரிய வேண்டும் என்று அழுவான்.

“அம்மா ராத்திரி வேண்டாம்... போகச் சொல்லுங்க…” என்று சிணுங்கிக்கொண்டே இருப்பான். அதிரன் சொல்வதைக் கேட்டு அம்மாவுக்குச் சிரிப்பு வரும்.

“அதிரன் குட்டி, இரவும் பகலும் மாறி மாறி வர்றது இயற்கை. பூமி தன்னைத்தானே சுத்திக்கிட்டு சூரியனையும் சுத்துது. அப்ப சூரிய வெளிச்சம் பூமி மேலே படும்போது பகலாக இருக்கும். சூரிய வெளிச்சம் படாதபோது இரவா இருக்கும். என்ன தெரிஞ்சுதா? பகலில் சூரியன் வர்ற மாதிரி,ராத்திரியில் நிலா வரும். பயப்படக் கூடாது. எதுக்கும் என்ன புரியுதா?”

அம்மா சொல்வதைக் கவனமாகக் கேட்பான் அதிரன். ஆனால், எதுவும் புரியாது.

“பயமாருக்கும்மா... ராத்திரி வேண்டாம்மா...” மீண்டும் சொல்ல ஆரம்பித்துவிடுவான் அதிரன்.

“நான் ராத்திரி கிட்டே இனிமே நீ வராதே. எங்க வீட்டு அதிரனுக்குப் பிடிக்கலைன்னு சொல்லிடறேன். என்ன சரியா?“

சரி என்று தலையை ஆட்டிவிட்டு, கண்களை இறுக மூடிக்கொண்டு தூங்கினான் அதிரன். அப்போது அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்த இரவு தேவதை அதைக் கேட்டார். உடனே அவர் அதிரன் வீட்டுக்குள் நுழைந்தார். அவனைப் பூப்போலத் தூக்கிக்கொண்டு பறந்தார். அதிரன் அப்படியே தேவதையின் கழுத்தைக் கட்டிக்கொண்டான்.

“அதிரன்,ஏன் பயப்படுகிறாய்?“

“ என் கண்ணுக்கு எதுவும் தெரியலை...”

“அப்படியா? இருள் என்பது குறைந்த ஒளி! அவ்வளவுதான். இப்போது பார்.”

அதிரன் லேசாகக் கண்களைத் திறந்து பார்த்தான். முதலில் எதுவும் தெரியவில்லை. ஆனால், கொஞ்ச நேரத்திலேயே எல்லாம் தெரிந்தன. அவனுடைய வீடு, வீட்டுக்கு முன்னால் இருந்த தோட்டம், நண்பன் பாரியின் வீடு, தெரு, அவன் மாலையில் விளையாடப் போகும் பூங்கா எல்லாம் தெரிந்தன. உயரத்தில் இருந்து பார்க்கும்போது ஊரே அழகாகத் தெரிந்தது. கரு நீல வானத்தில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டின. அவனுக்கு இப்போது பயம் குறைந்துவிட்டது. அதிரன் கண்களை நன்றாகத் திறந்தான்.

ஆஹா! என்ன அழகு!

அப்போது தான் அந்தச் சத்தம் கேட்டது.

மறுபடியும் அதிரன் கண்களை மூடி, தேவதையின் கழுத்தைக் கட்டிக்கொண்டான். பயம் வந்துவிட்டது. தேவதையிடமிருந்து வந்த அம்மாவின் வாசனை அவனை அமைதிப்படுத்தியது.

தேவதை புன்னகையுடன் அதிரனை அவன் வீட்டுக்கூரை மேல் பறக்க வைத்தார். என்ன ஆச்சரியம்! அவனுக்குச் சிறகுகள் முளைத்திருந்தன. அவன் கண்களைத் திறந்தான். அப்போது, அவன் வீட்டின் அருகில் இருந்த மாமரத்திலிருந்து ஒரு பழுத்த இலை கிளையை விட்டுப் பிரிந்து மெல்ல காற்றில் இறங்கி, தகரக்கூரையில் விழுந்தது. டம்மென்று சத்தம் கேட்டது.

வேப்ப மரத்திலிருந்து ஒரு காய்ந்த குச்சி டமார் என்று விழுந்தது. தரையில் காய்ந்து கிடந்த சருகுகளின் மீது ஓடிக்கொண்டிருந்த எலி கீச்சிட்டுக் கொண்டிருந்தது. பூச்சிகள் ரீங்காரமிட்டன. கூகூகூகூவ் என்று புளியமரப் பொந்திலிருந்த ஆந்தை கண்களை உருட்டி அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டே கத்தியது.

அதிரனின் வீட்டுக்கு அருகில் ஓடிய சாக்கடையில் தவளைகள் குர்குர்குர் என்று பாடிக்கொண்டிருந்தன.வீட்டுக்கு முன்னால் இருந்த கோழிக்கூட்டிலிருந்து செவலைச்சேவல் அவ்வப்போது கெக்கெக்கெக் என்று கத்திக்கொண்டிருந்தது.

இப்போது அதிரனுக்குப் புரிந்துவிட்டது. இதற்காகவா இத்தனை ஆர்ப்பாட்டம் செய்தோம்!

தேவதை அவனை அப்படியே பூப்போல அம்மாவுக்கு அருகில் படுக்கவைத்து விட்டுப் பறந்து போனார். அதிரன் எழுந்தான். அம்மாவை எழுப்பாமல் கழிவறைக்குச் சென்றான்.

காலையில், “என்ன அதிரன், ராத்திரி என்னை எழுப்பலை?” என்று கேட்டார் அம்மா.

அதிரன் சிரித்துக் கொண்டே, “இனிமே ராத்திரின்னா எனக்குப் பயமில்லம்மா”என்றான்.

“என்ன நடந்தது!” என்று ஆச்சரியப்பட்டார் அம்மா.

“தெரியலம்மா. ஆனா, இப்போ இருட்டை நினைத்துப் பயமில்ல. பகல்ல இருக்கிறதுதான் ராத்திரியும் இருக்கு” என்ற அதிரனுக்கு தேவதையுடன் சென்றது நினைவில் இல்லாமல் போயிருந்தது.


கதைஇரவுஅம்மாபயம்இருள்தமிழ் கதைகள்சிறுவர்கள் கதைகள்Taml Story

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

sand-politics

மணல் அரசியல்!

இலக்கியம்
x