Last Updated : 14 Oct, 2015 10:42 AM

 

Published : 14 Oct 2015 10:42 AM
Last Updated : 14 Oct 2015 10:42 AM

பசுமைப் பள்ளி - 5: தேனீக்களே துணை

குளிர் (கூதிர்) காலம்.

ஐப்பசியில் அடைமழை அன்று பெய்யவில்லை. கொஞ்சம் வாய்ப்பு கிடைத்தால் போதுமே! பசுமைப்பள்ளிக் குழந்தைகள் வெளியே ஆட்டம் போட்டார்கள். இதமான வெப்பத்துடன் இளமஞ்சள் வெயில். அந்த மஞ்சள் நிறத்துக்குப் போட்டியாகப் பூத்திருக்கும் பீர்க்கம் பூக்கள். அந்தப் பூக்களில் தேன் உறிஞ்சும் தேனீக்கள்.

தட்டாமாலைச் சுற்றிக்கொண்டிருந்த பாடினி என்கிற சிறுமி தேனீக்களைப் பார்த்துவிட்டு அதனிடம் கேட்டாள். “தேனீக்களே! மழைக்காலத்தில் உங்களுக்கு சிரமம்தானே?”

ஒரு தேனீ பதில் சொன்னது. “நீ சொல்வது உண்மைதான் பாப்பா. இருந்தாலும் தினமும் ஆயிரம் பூக்களுக்கு மேல் தேனெடுத்து, எங்களுக்குப் பழகிவிட்டதே?”

“ஆயிரம் பூக்களா?!” என்று வியந்தபடியே அனைத்துக் குழந்தைகளும் குழுமினார்கள்.

தொடர்ந்து தேனீ பேசியது.

“இதற்கே பாராட்டுகிறீர்களே, தேனீக்கள் அனைத்தும் ஒரு கிலோ தேன் சேமிக்க அலையும் தொலைவு எவ்வளவு தெரியுமா? அது பூமியை மூன்று முறை சுற்றி வருவதற்கு சமம்”.

வியப்பில் பிளந்த வாயை, குழந்தைகள் மூடவில்லை.

“அப்படி அலைவதால்தான் மகரந்தச் சேர்க்கை நடைபெறுகிறது. நாங்கள் இல்லாவிட்டால் உங்களுக்குப் பல பழங்கள், பருப்புகள், காய்கறிகள், ஏன் விதைகளேகூட கிடைக்காது”.

“எப்படி?” என்றாள் பாடினி.

“நீங்கள் உண்ணும் ஒவ்வொரு மூன்று வாய் உணவிலும், ஒரு வாய் உணவை நாங்கள்தான் கொடுக்கிறோம். அதாவது, நீங்கள் பயிர் செய்யும் 100 உணவுப் பயிர்களில் 70 பயிர்களில் நாங்கள்தான் மகரந்தச் சேர்க்கையை நடத்துகிறோம்”.

“பூச்சிகளிலேயே மனிதருக்கு அதிகம் உதவும் பூச்சி நீங்கள்தானோ?”

“ஆமாம். அது மட்டுமல்ல, உலகின் முதல் இயற்கை உணவை அளித்ததும் நாங்கள்தான்”.

“தெரியும். அது தேன்தானே? அது எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று குதித்தாள் பாடினி. ஆனால், தேனீயின் முகமோ வாடியிருந்தது.

“என்ன தேனீ ரொம்ப சோகமாய் இருக்கிறாய்?” என்று கேட்டனர் குழந்தைகள்.

“ஒன்றுமில்லை, குழந்தைகளே! நீங்கள்தான் பெரியவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்கள் செய்யும் தவறால் எங்கள் இனமே அழியும் ஆபத்தில் உள்ளது”.

“எப்படி?”

“அவர்கள் பயிர்களுக்குப் பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பதால் மண்புழுக்களைப் போலவே, மனிதர்களுக்கு நன்மைச் செய்யும் பூச்சியினமான நாங்களும் பாதிக்கப்படுகிறோம். எங்கள் எண்ணிக்கை குறைந்துக்கொண்டே வருகிறது. உங்களுக்கு உணவு அளிப்பதற்காக, நீங்கள் காட்டும் நன்றி இதுதானா?”

குழந்தைகளுக்கு வெட்கமாகிவிட்டது. தேனீக்களைப் பற்றி சூழலியலாளர்கள் பலர் சுட்டிக்காட்டியதாக, அவர்களுடைய ஆசிரியர் சொன்ன ஒரு கூற்று நினைவுக்கு வந்தது.

“தேனீக்கள் உலகிலிருந்து மறைந்துவிட்டால், அதன் பின்னர் நான்கே ஆண்டுகளில் மனித இனமும் உலகிலிருந்து மறைந்துவிடும்”.

ஆக, மனிதர்களுக்கு இத்தேனீக்களே துணை. குழந்தைகள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். நம் பெற்றோர் செய்த தவறை நாம் செய்யக் கூடாது. இனி தேனீக்களைப் பெருக்கும் வகையில் அதிகமாகத் தேன் சுரக்கும் மலர்ச்செடிகளை நட்டு வளர்ப்போம்.

வானில் மழை மேகம் திரள்வதால் தேனீ விடைபெற்றது.

குழந்தைகள் சிந்தித்தனர். பிறருக்காக உழைக்கும் இந்தத் தேனீக்களுக்கு நான்கறிவு என்கிறார்கள்.

நான்கறிவு மனிதருக்கா? இல்லை தேனீக்களுக்கா?

(அடுத்த புதன்கிழமை: அன்பே ஓங்கில்)

கட்டுரையாளர், குழந்தை எழுத்தாளர் மற்றும் சூழலியலாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x