

மீன் தொட்டி வாங்கி மீன்களை வளர்ப்பது என்றால் குழந்தைகளுக்கு ஒரே குஷிதான். அதுவும் ‘கோல்ட் ஃபிஷ்’ என்றழைக்கப்படும் தங்க மீன்களை எல்லோருக்குமே பிடிக்கும். இந்தத் தங்க மீன்களின் பிறப்பிடம் எது?
தங்கம் போலப் பளபள என்று இருப்பதாலேதான், ‘கோல்டு ஃபிஷ்’ என்ற பெயர் இந்த மீன்களுக்கு வந்தது. உலகில் முதன்முதலாகச் சீனாவில்தான் தங்க மீன்கள் கண்டறியப்பட்டதாம். அதுவும் உலகப் புகழ்பெற்ற பயணியான மார்கோ போலோதான் தங்க மீன்களை முதன்முதலில் பார்த்து, அவற்றின் அழகில் மயங்கி உலகின் மற்ற பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தியவர் என்கிறார்கள். சீனாவில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே தங்க மீன்கள் இருந்து வருகின்றன.
சீனாவுக்கு வந்த ஐரோப்பிய வியாபாரிகள், அவற்றைப் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் சென்றார்கள். அதன் மூலமாகவே உலகெங்கும் தங்க மீன்கள் பரவத் தொடங்கின. இன்று உலகில் தங்க மீன்கள் இல்லாத நாடுகளே இல்லை. தங்க மீன்களை வீட்டில் வளர்ப்பது பலருக்கும் பிடித்த ஒன்றாக மாறிவிட்டது. அழகு மட்டுமில்லாமல், அது அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்ற நம்பி்க்கையும் சில பகுதிகளில் நிலவுகிறது.
தகவல் திரட்டியவர்: டி. லூர்து ராஜ், 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, வேதாரண்யம்.