Published : 16 Dec 2020 10:17 AM
Last Updated : 16 Dec 2020 10:17 AM

டிங்குவிடம் கேளுங்கள்: மழையும் மயிலும்

அரசு மருத்துவமனைகளில் கொடுக்கப்படும் மாத்திரைகளின் நெடி அதிகமாகவும் தனியார் மருத்துவமனைகளில் கொடுக்கப்படும் மாத்திரைகளின் நெடி குறைவாகவும் இருப்பது ஏன், டிங்கு?

- கி. மோனிஷா, 9-ம் வகுப்பு, விவேகம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, வீர்பாண்டி பிரிவு, கோவை.

அரசு மருத்துவமனைகளில் ஏராளமாக மாத்திரைகளை வாங்கி வைத்திருப் பார்கள். பெரிய பெட்டிகளிலோ பாட்டில்களிலோ வரும் மாத்திரைகளை, நோயாளிகளுக்கு வழங்குவார்கள். அட்டையால் மூடப்படாத இந்த மாத்திரைகளில் இருந்து நெடி அதிகமாக வரும். தற்போது அரசு மருத்துவமனைகளிலும் அட்டையால் மூடப்பட்ட மாத்திரைகளைத்தாம் அதிக அளவில் தருகிறார்கள். பாரசிட்டமால், பி காம்ப்ளக்ஸ் போன்ற அட்டைகளுக்குள் அடைக்கப்படாத மாத்திரைகளில் இருந்து இந்த நெடி வரலாம். பி காம்ப்ளக்ஸ் மாத்திரைகளில் சேர்க்கப்படும் வேதிப் பொருட்கள் காரணமாக எங்கு வாங்கினாலும் நெடி வரவே செய்யும், மோனிஷா.

பேய் பயம் உனக்கு இருக்கிறதா, டிங்கு?

- ஆர். ராஜேஷ், 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, அருப்புக்கோட்டை.

சின்ன வயதில் எனக்கும் ’பேய்’ பயம் இருந்திருக்கிறது. அது பேயைப் பார்த்ததால் வந்த பயம் அல்ல. இல்லாத பேயைப் பற்றி மற்றவர்கள் கூறிய கற்பனைக் கதைகளால் வந்த பயம். பேய் என்ற ஒன்று இல்லாததால்தான் அது இப்படித்தான் இருக்கும் என்று யாராலும் சொல்ல முடியவில்லை என்ற விஷயம் வளர்ந்த பிறகு புரிந்தது. அதற்குப் பிறகு பேய் பயம் போய்விட்டது, ராஜேஷ்.

கொசு கடிக்கும் போது அதை அடிக்கிறோம். அப்போது அதன் கொடுக்கு நம் உடலுக்குள் சென்று விடாதா, டிங்கு?

- வி. ஸோபித், 4-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, திருச்சி.

தேனீ, குளவி போல் கொசு கொடுக்கால் கொட்டுவதில்லை. உறிஞ்சுகுழல்கள் மூலமே கொசு நம் உடலில் இருந்து ரத்தத்தை உறிஞ்சுகிறது. அதனால் கொசுவை அடிக்கும்போது, அதன் உறிஞ்சுகுழல்களும் வெளியே விழுந்துவிடும், ஸோபித்.

மழை வரும்போது மட்டும் தான் மயில் தோகையை விரிக்குமா, டிங்கு?

- ஜி. மஞ்சரி, 10-ம் வகுப்பு, ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

மழை வருவது மயிலுக்குத் தெரியும், மழை வரும்போது மட்டும்தான் மயில் தோகையை விரித்து ஆடும் என்றெல்லாம் பல நூற்றாண்டுகளாக மக்கள் நம்பி வருகிறார்கள். ஆனால், இது உண்மை அல்ல. ஆண் மயில் குடும்பம் நடத்துவதற்காகத் தன் அழகிய தோகையை விரித்து, பெண் மயிலை அழைக்கிறது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை இனப் பெருக்கக் காலம் என்பதால், அந்தக் காலகட்டத்தில் அடிக்கடி ஆண் மயில்கள் தோகையை விரிப்பதைப் பார்க்கலாம். அப்போது தற்செயலாக மழையும் பெய்திருக்கலாம், மஞ்சரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x