

ஓசோன் ஓட்டை, புவி வெப்பமடைதல் காரணமாக கடந்த 75 ஆண்டுகளில் பூக்களின் நிறம் மாறிவிட்டது. அமெரிக்க ஆய்வாளர் மேத்யூ கோஸ்கி நடத்திய ஆய்வில், பூக்களின் இயல்பு புற ஊதாக் கதிர் நிறமியின் அளவு மாறியிருப்பது தெரியவந்துள்ளது.மனிதக் கண்களுக்கு இது புலப்படாது என்றாலும், புற ஊதா நிறத்தைக் காணும் பூச்சிகள் தடுமாறக்கூடும்.
பூவின் நிறமும் வெப்பமும்
அயல்மகரந்தச் சேர்க்கைக்கும் பூச்சிகளைக் கவரவும் உதவும் பூக்களின் நிறம், அதன் உட்பாகங்களின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. பூக்களில் உள்ள நிறமிகள் சூரிய ஒளியின் பல்வேறு நிற அலைகளை உறிஞ்சிக்கொண்டு, பூவின் வெப்பநிலையைக் கூட்டவோ குறைக்கவோ செய்கின்றன.
பயிர்பதனத் திரட்டு
அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பயிர்பதனத் திரட்டு (herbarium) அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கே தாவரங்களை உலர்த்தி, பாதுகாத்து வருகின்றனர். 1941-ம் ஆண்டு முதல் 2017வரை தொகுக்கப்பட்ட உலர் தாவரத்திரட்டுகளைத் திரட்டினர். மலர்கள் பறிக்கப்பட்ட இடங்களில் இன்றுள்ள மலர்களைப் பறித்து ஒப்பீடு செய்தனர். 42 வகையைச் சேர்ந்த 1238 மலர்களை ஆய்வுக்கு உட்படுத்தினர்.
சில பூக்களில் முன்பு இருந்ததை விடக் கூடுதல் புற ஊதாக் கதிர் நிறமி இருந்தது. சில பூக்களில் குறிப்பிடும் அளவில் மாற்றம் இல்லை. சில பூக்களில் நிறமி குறைந்துள்ளது. தட்டுப் போன்ற வடிவில் விரியும் மலர்களில் புற ஊதா நிறமி கூடியுள்ளது. கூம்பு போன்ற வடிவில் உள்ள பூக்களில் நிறமியின் அளவு குறைந்துள்ளது என்று தெரியவந்தது.
ஏன் இந்த வேறுபாடு?
தட்டுப் போன்ற வடிவம் உள்ள பூவிதழ்களில் சூரிய ஒளியும் புற ஊதாக் கதிர்களும் பட்டு, பூவின் மையம் நோக்கிச் சிதறும். இதன் காரணமாகப் பூவின் மையப் பகுதி கூடுதல் வெப்பநிலையில் இருக்கும். இதனால் மையப் பகுதியில் உள்ள சூல்முடி, மகரந்தப் பை வெப்பத்தால் செயலிழந்துவிடும். மலர்கள் கூடுதல் புற ஊதா நிறமிகளை அமைத்துக்கொண்டால், குறைவான அளவே சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும். புவி வெப்பம் உயர்ந்த நிலையிலும் பூ தாக்குப் பிடிக்கும்.
கூம்பு வடிவ மலரில் பூவிதழ்கள் மையம் நோக்கிப் புற ஊதாக் கதிர்களைக் குவிக்காது. எனவே ஓசோன் படல ஒட்டையினால் ஏற்படும் கூடுதல் புற ஊதாக் கதிர் அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், இதழ்களில் உள்ள புற ஊதா நிறமி புற ஊதாக் கதிரை உறிஞ்சும்போது இதழ் வெப்பமடையும். புவி வெப்பம் அடையும் போது வெளிப்புற வெப்பம் கூடும். ஏற்கெனவே இருந்த அளவைவிடக் குறைவான நிறமி இருந்தால் தான் முந்தைய வெப்பநிலையைக் கூம்பு வடிவ மலர்களின் உள்ளே நிலை நிறுத்த முடியும். எனவே கூம்பு போன்ற வடிவம் கொண்ட மலர்களில் புற ஊதா நிறமி குறைந்துள்ளது.
திக்குமுக்காடும் பூச்சி
பூச்சிகளுக்குப் புற ஊதாக் கதிர்களும் தெரியும். பூக்களில் புற ஊதா நிற வடிவங்களை வைத்துதான் பூச்சி, பூக்களைத் தன் நினைவில் நிறுத்துகிறது. ஓசோன் படல ஓட்டை, காலநிலை மாற்றம் காரணமாகப் பூக்களின் புற ஊதா நிறமியின் அளவு மாறும்போது, மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகள் தடுமாறி, அந்தப் பூக்களை உதாசீனம் செய்துவிடக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
கட்டுரையாளர், விஞ்ஞானி
தொடர்புக்கு: tvv123@gmail.com