Published : 07 Oct 2015 12:33 PM
Last Updated : 07 Oct 2015 12:33 PM

தன்னையே தந்த மரம்

ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு மரம் இருந்துச்சு. அந்த மரம் ஊரின் ஒதுக்குப்புறமா, இயற்கை செழிப்பா இருந்த இடத்துல தனியா இருந்துச்சு. அந்த மரத்துக்கு அடியில விளையாட, ஒரு குட்டிப் பையன் வந்தான். அவனுக்கு அந்த மரம் பிடிச்சுப் போச்சு. அதனால, அந்த மரத்தைப் பார்க்க தெனமும் ஆசையா அவன் வந்தான்.

மரத்தைப் பார்க்க வர்றப்போ மரத்தோட அழகான இலைகளை, சேகரிச்சு வச்சுக்குவான். இலைகளை ஒரு கிரீடம் மாதிரி செஞ்சு, ராஜா மாதிரி தலையில மாட்டிக்கிட்டு விளையாடுவான். அகலமான அடிமரம் வழியே மரத்தின் மேலே ஏறுவான். கிளைகளைப் பிடிச்சுக்கிட்டு தொங்கி, ஊஞ்சல்போல ஆடுவான்.

அப்புறம் மரம் தரும் சுவையான பழங்களை ரசிச்சு சாப்பிடுவான். ரொம்ப நேரம் விளையாடிக் களைச்சுப் போகும்போது, மரத்தோட நிழல்ல சாய்ஞ்சு தூங்குவான். இப்படியே அந்த மரத்துக்கு அவன் ரொம்ப நண்பனாயிட்டான். அந்த மரத்தை, அவன் ரொம்ப நேசிச்சான். அந்த மரமும் குட்டிப் பையனை மகிழ்ச்சியா ஏத்துக்குச்சு.

நாளாக நாளாக, அந்தச் சிறுவன் வளர ஆரம்பிச்சான். கொஞ்சம் பெரிய பையனா வளர ஆரம்பிச்ச பிறகு, மரத்துப் பக்கம் அவன் வர்றதேயில்ல. அதனால நண்பனைப் பார்க்காம மரம் தனிமையில இருந்துச்சு.

திடீர்னு ஒருநாள் அந்தப் பையன் மரத்தைப் பார்க்க வந்தான். மரத்துக்கு ரொம்ப சந்தோஷம். “வா, நண்பா. மேலே ஏறி என்னோட கிளைகளைப் பிடிச்சு ஊஞ்சலாடு. பழம் சாப்பிடு. நிழல்ல விளையாடு''ன்னு மரம் கூப்பிட்டுச்சு.

அதுக்கு அந்தப் பையன் சொன்னான். "மரமே, இப்போ நான் மேல ஏறி விளையாடுற சின்ன பையனில்ல. நான் வளர்ந்துட்டேன்"னு சொன்னான்.

"இப்போ நான் இளைஞனாகிட்டேன். எனக்கு இப்போ பணம் தேவைப்படுது. அத உன்னால கொடுக்க முடியுமா?".

"இல்லை நண்பா. என்னை மன்னிச்சிடு. எங்கிட்ட பணமில்ல. பழம்தான் இருக்கு. அதைப் பறிச்சுகிட்டுப் போய் வித்து காசாக்கிக்கலாமே" என்றது மரம்.

உடனே அவன், அவ்வளவு நேரம் மரத்தின் மீது ஏறி விளையாட முடியாதுன்னு சொன்னவன், சட்டுனு மரத்து மேல ஏறிப் பழங்களைப் பறிச்சுகிட்டு, அவற்றைச் சந்தையில் விற்க வேகமாகப் போனான். அப்பாடா, தன்னோட நண்பனுக்குப் பழத்தைக் கொடுத்து உதவ முடிஞ்சதேன்னு மரம் நிம்மதி பெருமூச்சுவிட்டது.

ஆனா, திரும்பவும் அந்தப் பையன் மரத்தைப் பார்க்க வரவேயில்ல. மரம் ரொம்ப சோகமாயிடுச்சு. ரொம்ப நாளைக்கு அப்புறம் திடீர்னு திரும்பவும் ஒரு நாள் மரத்தைப் பார்க்க அவன் வந்தான். மரம் ரொம்ப சந்தோஷமாயிடுச்சு, "இப்பவாவது என்கூட விளையாடுவியா?"ன்னு மரம் கேட்டுச்சு.

''மரத்துல எல்லாம் ஏறி விளையாடுறதுக்கு எனக்கு நேரமில்லை. எனக்குன்னு ஒரு குடும்பம் வேணும். நான் பத்திரமா இருக்க, எனக்கு ஒரு வீடு வேணும். உன்னால வீட்டைத் தர முடியுமா?''ன்னு பெரியவனாகிட்ட அந்தப் பையன் கேட்டான்.

''எனக்குன்னு ஒரு வீடு இருந்திருந்தா, அதைப் கொடுத்திருப்பேன். ஆனா, ஒண்ணு செய்யலாம். என்னோட கிளைகளை வெட்டி எடுத்துட்டுப் போய், நீ ஒரு வீட்டைக் கட்டிக்கலாமே''.

அவன் வேகவேகமாகச் செயல்பட ஆரம்பித்தான். மரத்தோட கிளைகளை வெட்டி எடுத்துட்டுப் போனான். கிளைகளை இழந்து களையிழந்து போன மரம், இந்த முறையும் நண்பனுக்கு உதவ முடிஞ்சதால சந்தோஷமா இருந்தது.

போனவன், போனவன்தான். மரத்தை எட்டிப் பார்க்கவே இல்லை. அவன் எப்ப வருவான்னு எதிர்பார்த்துக்கிட்டு மரம் சோகமா இருந்துச்சு. இனிமே அவன் எங்க வரப்போறான்னும் நினைச்சுது.

அப்புறம் ஒருநாள் அவன் வந்தப்போ, மரத்துக்குப் பேச்சே வரல. சலசலவென்று இலைகளையும் கிளைகளையும் ஆட்டடி, “வா, வந்து விளையாடு''ன்னு சொன்னுச்சு.

'' எப்பப் பார்த்தாலும் ஒரே வேலை, வேலை, வேலை. அதனால, நான் சோகமா இருக்கேன். விளையாட எல்லாம் முடியாது. எனக்கு எங்கயாவது ஊர சுத்திப் பாக்கணும், அதுக்கு ஒரு படகு வேணும். உன்னால படகைத் தர முடியுமா?''ன்னு கேட்டான்.

மரம் யோசிச்சுச்சு. "படகு, படகு... ம். நீ அடிக்கடி ஏறி விளையாண்டியே அடிமரம், அது நல்லா பெருசாதான் இருக்கு. அதை வெட்டி நீ ஒரு படகு செஞ்சுக்கலாமே. அது உனக்கு நிம்மதியைத் தரும்''னு மரம் சொன்னுச்சு.

அவன் அடிமரத்தை வெட்டினான். அதில் ஒரு படகு செஞ்சு, கடலில் பயணம் போனான். அதைப் பார்த்து மரம் சிரிச்சிச்சு. ஆனா, அது சந்தோஷமா சிரிக்கல.

ரொம்ப நாளைக்கு அப்புறம், திரும்பவும் அவன் வந்தான். ''என்னை மன்னிச்சிடு, நண்பா. உனக்குக் கொடுக்க, இப்போ என்கிட்ட ஒண்ணுமில்ல...என் கிட்டப் பழம் இல்ல,''ன்னு மரம் சொன்னுச்சு.

“எனக்கும் பல் இல்ல. அதனால பழத்தைக் கடிச்சு சாப்பிட முடியாது''ன்னு தாத்தாவாகிட்ட அந்தப் பையன் சொன்னான்.

“என்கிட்ட கிளைகள் இல்ல. நீ ஊஞ்சலாட முடியாது...''

“நிமிர்ந்து நிக்கிறதே எனக்குக் கஷ்டம். இதுல எங்க ஊஞ்சல் ஆடுறது?'' என்றான் அவன்.

“என்கிட்ட அடிமரமும் இல்லை. அதுனால நீ மரத்துல ஏற முடியாது...''

“மரத்தில் ஏறுற அளவுக்கு என் உடம்புல தெம்பில்லை. எனக்கு வயசாயிடுச்சு'' என்றான் அவன்.

“என்னை மன்னிச்சிடு நண்பா. உனக்கு ஏதாவது கொடுக்கணும்னு நினைக்கிறேன். ஆனால், என்ன செய்றது? என்கிட்ட இப்போ ஒண்ணும் இல்லையே. நான் ஒரு வயசான அடிக்கட்டைதானே'' பெருமூச்சுவிட்டது மரம்.

“எனக்கு இப்போ எதுவும் தேவையில்லை'' முதன்முறையாக அவன் இப்படிச் சொன்னான். “நான் ரொம்ப களைப்பா இருக்கேன். காலாற உட்கார்ந்து ஓய்வெடுக்க, அமைதியான ஒரு இடம் வேணும்''.

“நல்லது. உட்காரவும் ஓய்வெடுக்கவும் ஏற்ற வயது முதிர்ந்த அடிக்கட்டை நான். வா நண்பா, வந்து உட்கார்ந்து ஓய்வெடுத்துக்கொள்'' என்று மரம் கூப்பிட்டுச்சு.

முதுமையடைந்து வயதாகிவிட்ட அந்தப் பையன், அதன் மேல் உட்கார்ந்தான். சின்ன பையனா இருந்தப்ப, அவன் பழம் பறிச்சு சாப்பிட்டப்ப எல்லாம், எப்படி மகிழ்ச்சியா இருந்துச்சோ, இப்பவும் அதே மாதிரி அந்த மரம் மகிழ்ச்சியாவே இருந்துச்சு.

51 ஆண்டு புகழ்

படங்கள் நிறைந்த இந்தக் கதையை ஓவியங்களை வரைந்து எழுதியவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஷெல் சில்வர்ஸ்டீன். 1964-ல் வெளியான ‘The Giving Tree’ என்ற இந்தப் புத்தகம் வெளியாகி 51 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதும் இப்புத்தகம் புகழ்பெற்ற ஒன்றாக இருக்கிறது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதுவரை 50 லட்சம் பிரதிகள் விற்றுள்ளன. உலகில் மிக அதிகம் விற்பனையான குழந்தைகள் புத்தகப் பட்டியலில், இப்புத்தகம் முதன்மை இடங்களில் இருந்துவருகிறது.

தமிழ் வடிவம்: ஆதி

நன்றி: The Giving Tree, Shel Silverstien

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x