Published : 18 Nov 2020 03:13 AM
Last Updated : 18 Nov 2020 03:13 AM

டிங்குவிடம் கேளுங்கள்: கண்ணாடி உருவத்தைக் காட்டுவது எப்படி?

சிறியவர்கள் பெரியவர்கள் என அனைவருக்கும் சந்தேகம் வரும். அப்படியிருக்கும்போது டிங்குவிடம் ஏன் மாணவர்கள் மட்டும் கேள்வி கேட்க வேண்டும்?

- வி. சிந்தாணிக்கா, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, திருச்சி.

சந்தேகம் அனைவருக்கும் வரும் என்பது உண்மைதான். ஆனால், ’மாயாபஜார்’ மாணவர்களுக்காகப் பிரத்யேகமாக வரும் இணைப்பிதழ். பெரியவர்கள் தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள பல வழிகள் இருக்கின்றன. அவர்கள் என்னிடம் கேள்வி கேட்டுதான், சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், தங்கள் சந்தேகங்களைக் கேட்க முடியாமலும் அதைத் தீர்த்துக்கொள்ள வழியில்லாமலும் இருக்கும் எவ்வளவோ மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் மாயாபஜாரில்தானே இடம் அளிக்க முடியும்? இந்த வாய்ப்பையும் பெரியவர்களுக்குக் கொடுத்துவிட்டால், மாணவர்களுக்கு உரிய வாய்ப்பு குறைந்துவிடும் அல்லவா? அதனால்தான் பள்ளி மாணவர்கள் மட்டும் கேள்வி கேட்க வேண்டும் என்று சொல்கிறோம், சிந்தாணிக்கா.

திண்மப் பொருட்களை வெப்பப்படுத்தினால் திரவமாக மாறும் என்று படித்தேன். ஆனால் விறகு, துணி போன்ற திண்மப் பொருட்களை எரித்தால், வாயுவாக மாறிவிடுகிறதே ஏன், டிங்கு?

- வி.கே. ஷுகதர், 3-ம் வகுப்பு, கம்மவார் ஆரம்பப் பள்ளி, அருப்புக்கோட்டை.

பொருட்கள் திண்மம், திரவம், வாயு, பிளாஸ்மா என நான்கு நிலைகளைக் கொண்டுள்ளன. திண்மப் பொருட்கள் உருகி திரவமாக மாறும். திரவப் பொருட்கள் உறைந்து மீண்டும் திண்மமாக மாறும். திண்மப் பொருட்களின் மூலக்கூறுகள் ஒன்றாகப் பிணைந்திருக்கும். இந்தப் பொருட்களைக் கடுமையான அழுத்தத்துககு உட்படுத்தினாலும் தன் நிலையிலிருந்து மாறாது. பாறைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அதே போல திண்மப் பொருட்களிலிருந்து திரவமாக மாறாமல் வாயுவாக மாறக்கூடிய பொருட்களும் இருக்கின்றன. கற்பூரம், விறகு, துணி போன்றவை அப்படிப்பட்ட திண்மப் பொருட்கள்தாம், ஷுகதர்.

முகம் பார்க்கும் கண்ணாடி மட்டும் நம் உருவத்தை எப்படிப் பிரதிபலிக்கிறது, டிங்கு?

- ஜி. இனியா, 4-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

எல்லாப் பொருட்களிலும் மூலக்கூறுகள் இருக்கின்றன. ஒரு பொருளின் மீது ஒளி விழும்போது, அதன் அலைநீளத்தைப் பொருத்து வினைகள் உருவாகின்றன. ஒரு பொருளில் உள்ள நுண்ணிய துகள்களில் அதிகமான அலைவு வீச்சு இருந்தால், அந்தப் பொருள் ஒளியை உள்வாங்கிக்கொள்ளும். இதை ஒளி ஊடுருவா பொருள் என்கிறார்கள். ஒரு பொருளின் நுண்ணிய துகள்களில் குறைவான அலைவு வீச்சு ஏற்பட்டால், அப்போது மூலக்கூறுகள் அடுத்தடுத்த துகள்களுக்கு அதிர்வைக் கடத்தி ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் சென்றுவிடும். இதை ஒளிபுகும் பொருள் என்கிறார்கள். ஒரு பொருளின் மேற்புறத் துகள்கள் மட்டும் ஒளியின் தூண்டுதலால், பொருளின் உள்நோக்கிச் செல்லாமல், வந்த திசையிலேயே வெளிப்படும். இதைத்தான் பிரதிபலிப்பு என்கிறார்கள். கண்ணாடி ஒளியைக் கடத்தும். கண்ணாடியின் ஒரு பக்கத்தில் அலுமினியம், வெள்ளிப் பூச்சு போன்றவற்றைப் பூசும்போது கண்ணாடியின் உள்ளே ஊடுருவும் ஒளி, இந்தப் பூச்சில் பட்டு பிரதிபலிக்கும். இப்படித்தான் நம் உருவம் கண்ணாடியில் தெரிகிறது, இனியா.

இரவு பகல் தெரியாமல் ஒரு சேவலை இருட்டறையில் இரண்டு நாட்கள் வைத்திருந்தால், அது கூவாதுதானே டிங்கு?

- லெ. மாணிக்கம், 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, கரூர்.

சுவாரசியமான கேள்வி. சேவல் அதிகாலை விடிவதைப் பார்த்து, ‘கொக்கரகோ’ என்று கூவுவதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், சேவல் விடியலைப் பார்த்துக் கூவுவதில்லை. சேவலின் உடலில் இருக்கும் ‘உயிர்க் கடிகாரம்’ (Biological Clock) தான் புறச் சூழல் எப்படி இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் கூவச் செய்துவிடுகிறது. அதாவது பகல் என்பதே தெரியாத மாதிரி இரண்டு நாட்கள் இருட்டறையில் வைத்திருந்தாலும் அதிகாலை நேரம் சேவல் கூவவே செய்யும். சேவல் மட்டுமில்லை, நம்மையும் இரண்டு நாட்கள் செயற்கை வெளிச்சத்தில் இரவே தெரியாமல் வைத்திருந்தாலும் இரவு நேரம் வரும்போது தூங்கிவிடுவோம். விடியல் வரும்போது விழித்துவிடுவோம். புறச் சூழல் எப்படி இருந்தாலும் உயிர்க்கடிகாரம் நம்மை வழக்கமான செயல்களைச் செய்ய வைத்துவிடும், மாணிக்கம்.

சிலருக்குக் கைகளில் கூடுதலாக ஒரு விரல் இருக்கிறது. இதனால் நன்மையா, தீமையா, டிங்கு?

- எஸ். ரேஷ்மா, 7-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, மன்னார்குடி.

பொதுவாக கூடுதலான விரல்களால் தொந்தரவு எதுவும் இருக்காது. பார்ப்பதற்கு வேண்டுமானால் வித்தியாசமாகத் தெரியலாம். ஒருவேளை தொந்தரவாக இருந்தாலோ ஆறாவது விரல் வேண்டாம் என்று நினைத்தாலோ விரலை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிக் கொள்ளலாம், ரேஷ்மா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x