Published : 04 Nov 2020 03:13 am

Updated : 04 Nov 2020 08:02 am

 

Published : 04 Nov 2020 03:13 AM
Last Updated : 04 Nov 2020 08:02 AM

டிங்குவிடம் கேளுங்கள்: நெருப்பு மேல்நோக்கி எரிவது ஏன்?

fire

விரல்களை தண்ணீரில் அதிக நேரம் வைத்தால் ஊறிவிடுகிறது. ஆனால், நம் வாயில் இருக்கும் எச்சில் நீரில் உள்ள நாக்கு ஊறுவதில்லையே ஏன், டிங்கு?

- வி. ஷோபித், 4-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம், திருச்சி.


நல்ல கேள்வி, ஷோபித். தண்ணீரில் வசிப்பதற்கு ஏற்ப நம் தோல் வடிவமைக்கப்படவில்லை. அதனால் அதிக நேரம் கைகளைத் தண்ணீரில் வைக்கும்போது, ஊறிவிடுகிறது. ஆனால், நம் வாயில் இருக்கும் எச்சில் வெறும் தண்ணீர் அல்ல. இதில் புரதங்களும் கிருமிநாசினிகளும் இருக்கின்றன. வாயில் உள்ள உமிழ்நீர்ச் சுரப்பிகள் மூலம் ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் அளவுக்கு உமிழ்நீர் சுரக்கிறது. இந்த உமிழ்நீரால் நாக்கும் வாயின் உட்பகுதியும் பாதிக்கப்படாத அளவுக்கு இயற்கையிலேயே தகவமைக்கப்பட்டிருக்கிறது.நாக்கிலும் உமிழ்நீர் சுரக்கிறது. இதே உமிழ்நீரில் நீண்ட நேரம் விரலை வைத்தால் ஊறும். உமிழ்நீர் முக்கியமான பணிகளைச் செய்கிறது. உமிழ்நீரில் உள்ள அமிலேஸ் என்னும் நொதியம் உணவை எளிதாக உண்ணவும் செரிக்கவும் வைக்கிறது. சுவையை அறியச் செய்கிறது. நாம் பேசுவதற்கும் உமிழ்நீர் உதவுகிறது. உடலில் தண்ணீர்ச் சத்து குறைந்தால், நா வறண்டு, நீரைப் பருக வைக்கிறது. நுண்ணுயிர்களால் வாயில் நோய் உண்டாகாமல் பாதுகாக்கிறது.

செங்காந்தள் மலர்கள் தமிழ்நாட்டில் உண்டா, டிங்கு?

- ஜி. மஞ்சரி, 10-ம் வகுப்பு, ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

தமிழ்நாட்டின் மாநில மலரே செங்காந்தள்தான், மஞ்சரி. ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்கள்தாம் செங்காந்தளின் தாயகம். இந்தியா, இலங்கை, சீனா, மலேசியா, ஆப்பிரிக்காவில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. முன்பெல்லாம் செங்காந்தள் மலர்களைச் சாலைகளிலும் வேலி ஓரங்களிலும்கூடப் பார்க்க முடியும். இப்போது செங்காந்தள் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவதால், பணப்பயிராக மாறிவிட்டது. செங்காந்தள் செடியின் அனைத்துப் பகுதிகளிலும் கோல்சிசினே என்ற நச்சுப் பொருள் இருக்கிறது. இதை உட்கொண்டால் மரணம் நிச்சயம். இலைகளோ தண்டுகளோ நம் மீது பட்டால் அரிப்பு உண்டாகும். செங்காந்தள் வேர்ப்பகுதியில் உள்ள கிழங்கில் இருக்கும் கோல்சிசினே, சூப்பர்பைன் ஆகியவை இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. செங்காந்தள் கிழங்குகள் ஏற்றுமதியும் ஆகின்றன.

உன்னுடைய பதில்கள் சுவாரசியமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கின்றன. ஆனால், எங்கள் கேள்விக்குப் பதில் சொல்வதால் உனக்கு என்ன நன்மை, டிங்கு?

- ஆர். சங்கரலிங்கம், 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.

நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் எனக்கும் பதில் தெரிந்திருக்காது, இல்லையா? உங்கள் கேள்விகளுக்கான பதில்களைத் தேடித் தேடிப் படிக்கிறேன். இதன் மூலம் நானும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன். உங்களைப் போன்ற வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொன்ன திருப்தியும் கிடைக்கிறது. இதற்கு மேல் என்ன வேண்டும், சங்கரலிங்கம்?

நெருப்பு ஏன் மேல் நோக்கியே எரிகிறது, டிங்கு?

- வி. சிந்தாணிக்கா, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம்.

நெருப்பு என்பது ஒரு வேதிச் செயல்பாடு. வெப்பம், எரிபொருள், ஆக்சிஜன் மூன்றும் இருந்தால்தான் நெருப்பு உண்டாகும். நெருப்பிலிருந்து வெளிவரும் வெப்ப ஆற்றல், சுற்றியுள்ள காற்றைச் சூடேற்றுகிறது. அப்போது காற்றைவிட, வெப்பக்காற்றின் எடை குறைவாக இருக்கிறது. அதனால் பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி, எடை குறைவான வெப்பக்காற்று மேல் நோக்கிச் செல்கிறது. விளக்கு, மெழுகுவர்த்தி, அடுப்பு என எதில் உருவாகும் நெருப்பும் மேல்நோக்கியே எரிகிறது. மெழுகுவர்த்தியைத் திருப்பிப் பிடித்தால்கூட, நெருப்பு மேல்நோக்கிதான் எரியும், சிந்தாணிக்கா.

ஜெய்ப்பூரை ‘பிங்க்’ சிட்டி என்று ஏன் அழைக்கிறார்கள், டிங்கு?

- ஜி. இனியா, 4-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

முதலாம் சவை ராம் சிங் மன்னர் ஆட்சிக் காலத்தில், 1876-ம் ஆண்டு வேல்ஸ் இளவரசர் ஆல்பர்ட் எட்வர்ட் ஜெய்ப்பூருக்கு வருகை தந்தார். அவரைச் சிறப்பாக வரவேற்பதற்காக ஜெய்ப்பூரின் முக்கியமான சில பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் இளஞ்சிவப்பு வண்ணத்தால் அலங்கரிக்கப்பட்டன. அந்த வண்ணம் நகருக்கு ஒரு தனித்தன்மையைக் கொடுத்ததால், கட்டிடங்களுக்கு இளஞ்சிவப்பு வண்ணமே அடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அந்த வழக்கம் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், இன்று எல்லாக் கட்டிடங்களும் இளஞ்சிவப்பில் இல்லை. இளஞ்சிவப்பு, அடர் சிவப்பு, காவி என்று அவரவர் விருப்பப்படி வண்ணம் அடித்திருக்கிறார்கள். ஆனால், ’பிங்க் சிட்டி’ என்ற பெயர் மட்டும் மாறவில்லை. என்னைக் கேட்டால், ஜெய்ப்பூருக்கு பிங்க் சிட்டி என்பதைவிட, ‘பேலஸ் சிட்டி’ என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்பேன். ஏராளமான அரண்மனைகளும் கோட்டைகளும் அங்கே இருக்கின்றன, இனியா.

நெருப்புFireநெருப்பு மேல்நோக்கி எரிவது ஏன்Science facts

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x