Published : 14 May 2014 02:44 PM
Last Updated : 14 May 2014 02:44 PM

சித்திரக் கதை: பூனைகளைச் சிறைப்படுத்திய எலிகள்!

பூனைகள் இல்லா உலகில் யாருக்குக் கொண்டாட்டம்? சொல்லவும் வேண்டுமா? நிச்சயம் எலிகளுக்குத்தான். பூனைகள் இல்லாத ஊர் இந்த உலகில் இருக்குமா? இருக்கிறதே. நளினப்பட்டி என்ற ஊரில் பூனைகளே இல்லை.

இந்தத் தகவலைப் பல நாடுகளில் உள்ள எலிகளுக்கும் கடிதம் மூலம் தெரிவித்தன நளினப்பட்டியில் உள்ள தலைமை எலிகள். “அப்படியா?” என ஆச்சரியப்பட்டு அந்த ஊரைக் காண ஆப்பிரிக்காவில் இருந்து குலி, மாலி என்ற இரண்டு எலிகள் விமானம் மூலம் நளினப்பட்டிக்கு வந்தன. விருந்தாளி எலிகளுக்குத் தடபுடலாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அனைவருக்கும் சிறப்பு விருந்து பரிமாறப்பட்டது.

ஒரு பாழடைந்த கோட்டைதான் எலிகளின் கோட்டை. விருந்தாளி எலிகளும் அங்கு தங்க வைக்கப்பட்டன.

“இந்த ஊரில் பூனைகள் இல்லை என்பதை நாங்கள் எப்படி நம்புவது?” என குலி எலி கேட்டது.

“சந்தேகம் இருந்தால், நீங்கள் ஊரைச் சுற்றிப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்” என்று நளினப்பட்டி எலி தலைவர் பதில் கூறியது.

“அப்படியென்றால் இன்று இரவே நாங்கள் சோதனைக்குத் தயார்” என இரு எலிகளும் உற்சாகமாயின.

இரவில் இரு ஆப்பிரிக்க எலிகளும் சோதனைக்குப் புறப்பட்டன. தெருத் தெருவாகச் சுற்றின. சந்து பொந்துகளில் எல்லாம் எலிகள் ஏறி இறங்கிப் பார்த்தன. அட! எங்குமே பூனைகள் தென்படவில்லை. அவைகளுக்கு வெகு ஆச்சரியம்.

“இந்த ஊரில் பூனைகள் இல்லைதான்” என்று இரு எலிகளும் பேசிக் கொண்டன.

ஊர்க்கோடியில் ஒரு பாழடைந்த மலைக்கோயில் ஒன்று உள்ளது. அங்கு மட்டும் ஆப்பிரிக்க எலிகள் போவதற்கு, நளினப்பட்டி எலிகள் தடை விதித்திருந்தன. அப்போதுதான் குலி எலிக்கு ஞாபகம் வந்தது.

“அந்த மலைக்கோயிலுக்குச் செல்லக் கூடாது என ஏன் உள்ளூர் எலிகள் தடை விதித்தன? எனக் குலி எலி, மாலி எலியைப் பார்த்துக் கேட்டது.

“ஆமாம், ஏன் அப்படிக் கூறின? நாம் அங்கு பரிசோதிக்காமல் ஒரு முடிவுக்கு வர முடியாதே?” என மாலி எலியும் கேள்வி எழுப்பியது.

அப்போதே இரு ஆப்பிரிக்க எலிகளும் மலைக் கோயிலுக்குச் செல்வது என முடிவு செய்தன. பொழுது விடிந்தது. நகர் வேட்டைக்குச் சென்றுவந்த எல்லா எலிகளும் பகலில் ஓய்வெடுக்கச் சென்றன. அனைத்து எலிகளும் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தன.

“இதுதான் சரியான சமயம். நாம் மலைக்கோயிலுக்குச் சென்று வந்துவிடலாம்” எனக் கூறியபடி ஆப்பிரிக்க எலிகள் கிளம்பின. மலைக்கோயிலுக்குள் நுழைந்ததும் கோயிலின் வாசலைத் தேடின எலிகள். கொஞ்ச தூரத்தில் வாசல் தென்பட்டது. ஆனால், அது உள்ளே பூட்டப்பட்டிருந்தது. வெளியே கதவைத் திறக்க முடியாதபடி கற்கள் கொட்டப்பட்டிருந்தன.

உள்ளே இருந்து ‘மியாவ்...மியாவ்....’ எனச் சத்தம் கேட்டது. ஆப்பிரிக்க எலிகளுக்குத் திடுக் என்றது. கற்குவியலின் மீது ஏறிச் சிறிய ஓட்டைக்குள் இருந்து இரு எலிகளும் எட்டிப் பார்த்தன. அங்கே ஒரே பூனைக் கூட்டம்.

அங்குப் பூனைகளின் தலைவர், எலிகளை எப்படிப் பிடிப்பது எனக் குட்டிப் பூனைகளுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தது. ஆப்பிரிக்க எலிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவை சத்தம் போடாமல் வந்து மற்ற எலிகளுடன் படுத்துக் கொண்டன.

“இதை யாரிடம் கேட்பது?” என இரு எலிகளும் யோசித்தன. அருகில் தூங்காமல் விளையாடிக் கொண்டிருந்த குட்டி எலியிடம் விசாரணையைத் தொடங்கின.

‘‘தனக்கு எதுவுமே தெரியாது’’ எனக் குட்டி எலி சத்தியம் செய்தது. மீண்டும் மீண்டும் கேட்கவே, உண்மையைக் கூறியது குட்டி எலி.

“நாங்கள் அனைவரும் ஒருநாள் விளையாடிக்கொண்டிருந்தோம். அப்போது பூனைகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடி வந்து எங்களைப் பயமுறுத்தின. அவைகளைத் திசை திருப்புவதற்காகப் பூனைகளுடன் நண்பராகப் பழகி, நாடகம் ஒன்றை நடத்தினோம். அதனை உண்மை என்று பூனைகள் நம்பிவிட்டன” என்றது.

“நாடகமா? அது என்ன?” என்று கேட்டன ஆப்பிரிக்க எலிகள்.

“பூனைகள் எலிகளைப் பிடிப்பதற்குத் துரத்த வேண்டி இருக்கிறது. அதோ தெரிகிற அந்த மலைக்கோயிலில் ஒரு மாத காலம் ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். அப்படிச் செய்தால் அவைகளால் பறவைகளைப் போலப் பறக்க முடியும். வானில் பறக்கும் பறவைகளைக்கூட எளிதாகப் பிடித்து உண்ணலாம் என்றோம். அதை உண்மை என்று பூனைகள் நம்பிவிட்டன. அதனால் ஊரில் உள்ள எல்லாப் பூனைகளும் இப்போது விரதத்தில் இருக்கின்றன. யாருடைய தொல்லையும் இருக்கக் கூடாது என்பதற்காகப் பூனைகள் கதவை உள் பக்கம் பூட்டிக் கொண்டன. இதுதான் சமயம் என நாங்கள் பூனைகள் வெளியே வராதபடி கற்களை அடுக்கிவிட்டோம்” என்றது குட்டி எலி.

“இது தப்பு இல்லையா? பூனைகளிடம் இருந்து தப்பிக்க நேர்மையான வழியை நாம் பின்பற்ற வேண்டும். நம்மைப் போன்ற ஒரு ஜீவனை ஏமாற்றக் கூடாது. ஆகையால், நாங்கள் கதவைத் திறக்கப் போகிறோம்” எனக்கூறி மலைக்கோயிலை நோக்கி ஆப்பிரிக்க எலிகள் சென்றன. கற்களை அப்புறப்படுத்தின.

ஒரு மாதக் காலம் அமைதி காத்த பூனைகள், எலிகளின் வாசனை தெரிந்தவுடன் அவற்றின் மீது பாய்ந்தன. தப்பித்தோம் பிழைத்தோம் என ஆப்பிரிக்க எலிகள் ஓடி மறைந்தன. பூனைகள் ஊருக்குள் புகுந்து எலிகளைப் பிடித்துச் சாப்பிட்டுப் பசியைத் தீர்த்துக் கொண்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x