சாதித்துக் காட்டிய குட்டி எழுத்தாளர்கள்

சாதித்துக் காட்டிய குட்டி எழுத்தாளர்கள்
Updated on
2 min read

'யாருமில்லாத தீவில் புத்தகங்களை மட்டும் தந்துவிட்டால் நான் சந்தோஷமாக வாழ்வேன்' என்று சொன்னார் ஒரு புத்தகக் காதலர். ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு உலகத்துக்கு நம்மை கூட்டிப் போகின்றன. இதுபோன்ற பல புத்தகங்களை தங்களுடைய சின்ன வயதிலேயே எழுதி, சாதனை படைத்த குழந்தைகள் உலகெங்கும் இருந்திருக்கிறார்கள். பாடப் புத்தகங்களைத் தாண்டி வாசிப்பதாலும், புதிது புதிதான கற்பனையையும் கருத்தையும் எழுதிப் பார்ப்பதாலும் என்ன பயன் என்று கேட்பவர்களுக்கு, தங்கள் சாதனைகளால் பதில் சொல்கிறார்கள் இந்த குழந்தை எழுத்தாளர்கள். இதோ அவர்களுடைய சாதனைகள்:

உலகின் ரொம்பக் குட்டியான எழுத்தாளர், பெண் எழுத்தாளர் யார் தெரியுமா? அமெரிக்காவைச் சேர்ந்த டோரதி ஸ்டிரெய்ட்தான். 1964-ல் நான்கு வயதே ஆனபோது, தன் பாட்டிக்காக 'How the World Began' என்ற ஆங்கிலப் புத்தகத்தை எழுதினார். இன்றுவரை அதற்குக் குறைவான வயதில் வேறு யாரும் புத்தகம் எழுதவில்லை.

டோரதியைப் போலவே உலகின் குட்டி ஆண் எழுத்தாளர் அமெரிக்காவைச் சேர்ந்த டென்னிஸ் வால்மர். தன்னுடைய ஆறு வயதில் 1987-ல் அவர் 'ஜோஷுவா டிஸ்ஓபேஸ்' என்ற புத்தகத்துக்கு கதை எழுதி, ஓவியமும் வரைந்தார். 'எங்கேயாவது போய் எசகு பிசகாக மாட்டிக்கொள்ளாதே' என்று கூறிய அப்பா, அம்மாவின் எச்சரிக்கையை மீறிச் செல்லும் ஒரு குட்டித் திமிங்கிலம் சிக்கலில் மாட்டிக் கொள்வதுதான் கதை. இந்தப் புத்தகத்துக்காக டேவிட் மெல்டன் நினைவு விருதையும் டென்னிஸ் வால்மர் பெற்றார்.

சிறு வயதிலேயே எழுதியவர்களில் ஆரம்ப காலத்தில் அச்சிட்ட புத்தகத்தை வெளியிட்டவர் பிரிட்டனைச் சேர்ந்த ஃபிரான்சிஸ் ஹாக்கின்ஸ். 1641-ல் 'Youth Behavior' என்ற குழந்தைகளுக்கான ஒழுக்க நெறிகளை வலியுறுத்திய புத்தகத்தை எழுதியபோது, அவருடைய வயது 13 மட்டும்தான்.

பிற்காலத்தில் பிரபலமான கவிஞராக மாறிய பிரிட்டனைச் சேர்ந்த ஆப்ரஹாம் காவ்லி தன்னுடைய 15-வது வயதிலேயே Poetical Blossoms (1633) என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.

'பர்கிட்ஸ் லிம்போமா' என்ற அரிய புற்றுநோயால் ஏழு வயதில் பாதிக்கப்பட்ட சிறுவன் ஜாசன் கேஸ் புற்றுநோய் தொடர்பான தன்னுடைய

அனுபவங்களை 'My Book for Kids with Cansur' என்ற புத்தகமாக எழுதியிருக்கிறார். அவருடைய அண்ணகள் டிம், ஆடம் ஓவியம் வரைந்த அந்தப் புத்தகம் 1987-ல் வெளியானது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெரியவர்களுக்கு உத்வேகம் தந்த புத்தகம் அது.

ஜாமீ தி விட், தன் 12 வயதில் 'Jamie's Turn' என்ற சாகசக் கதை புத்தகத்தை எழுதினான். 1984-ல் ரெயின்ட்ரீ பதிப்பக பரிசைப் பெற்ற அந்தப் புத்தகம், அவர்ளுடைய குடும்பப் பண்ணையில் ஏற்பட்ட ஒரு விபத்தைப் பற்றிச் சொல்கிறது. இதில் விஷயம் என்னவென்றால், ஜாமீக்கு கற்றல் குறைபாடு உண்டு. தான் நினைப்பதை நினைத்த வேகத்தில் எழுத முடியாத பிரச்சினை கொண்ட ஜாமீ, ஒரு புத்தகத்தை எழுதியது நிஜமாகவே ஒரு சாதனைதான்.

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜிப் படையால் பெருமளவு யூதர்கள் கொல்லப்பட்டனர். நாஜி படையின் கைகளில் இருந்து ஜெர்மனியில் தப்பித்து, ஹாலந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் ஒரு கிடங்கில் ஆன் ஃபிராங்க் குடும்பத்தினர் வாழ்ந்தார்கள். அப்படி தங்கியிருந்த இரண்டரை ஆண்டு காலத்தில், ஆன் ஃபிராங்க் மனதை உலுக்கும் நிஜ அனுபவங்களை டைரியில் எழுதினாள்.

புத்தகமாக மாறியபோது, அதன் பெயர் The Diary of a Young Girl. 13 வயதில் எழுத ஆரம்பித்த ஆன் ஃபிராங்க், 15 வயதில் இறந்தாள். உயிர் பிழைத்த ஆன் ஃபிராங்கின் அப்பா மூலம் 1947-ல் ஜெர்மன் பதிப்பும், 1952-ல் ஆங்கிலப் பதிப்பும் வெளியாகின. உலகெங்கும 2.5 கோடி விற்றுள்ள இந்தப் புத்தகம், தமிழ் உட்பட 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in