

ஒரு குட்டி கார் எடையைவிட, ஒரு காயின் எடை அதிகமாக இருந்தால் எப்படி இருக்கும்? மலைப்பாக இருக்கிறதா? உண்மையிலேயே ஒரு காரின் எடையைவிட ஒரு விவசாயி பரங்கிக்காயை விளைவித்தார். அந்தப் பரங்கிக்காயின் எடை 950 கிலோ. உலகிலேயே மிக அதிக எடை கொண்ட (பரங்கிக்)காய் இதுதான்.
சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பென்னி மீயர் என்ற விவசாயிதான் இந்தப் பெரிய பரங்கிக்காயின் சொந்தக்காரர். கடந்த ஆண்டுதான் இந்த உலகச் சாதனையைப் படைத்தார். இந்தப் பிரம்மாண்ட பரங்கிக்காயை பென்னி, தன் பண்ணையில் விளைவித்தார். சுமார் 20 அடி சுற்றளவும், 950 கிலோ எடையும் கொண்ட இந்தப் பரங்கிக்காய், இதற்கு முந்தைய எல்லாச் சாதனைகளையும் முறியடித்துவிட்டது. இது கலப்பின முறையில் விளைவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜெர்மனியில் கிளைஸ்டைவ் என்ற இடத்தில் இந்தப் பரங்கிக்காயைக் காட்சிக்கு வைத்தார் விவசாயி பென்னி. அதைப் பார்த்த அனைவருமே வாயைப் பிளந்துவிட்டார்கள். இதுவரை விளைந்த பரங்கிக்காய்களிலேயே இதுதான் உலகின் மிகப்பெரிய பரங்கிக்காய்.
ஐரோப்பிய யூனியனில் பியட் 500 என்ற குட்டி கார் விற்பனையாகி வருகிறது. அந்த காரைவிட, இந்தப் பரங்கிக்காயின் எடை மிக அதிகம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!
தகவல் திரட்டியவர்: வி. ஜீவிகா, 6-ம் வகுப்பு, வித்ய விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காரமடை, கோவை.