Published : 30 Sep 2020 14:17 pm

Updated : 30 Sep 2020 14:17 pm

 

Published : 30 Sep 2020 02:17 PM
Last Updated : 30 Sep 2020 02:17 PM

மாய உலகம்! - என் நிலம் என் மக்கள் என் போர்

maaya-ulagam

பாதி உறக்கத்தில் விழித்து சிணுங்குவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த குழந்தையை அள்ளியெடுத்து தன்னுடைய முதுகுப் பையில் பொத்தி வைத்துக்கொண்டார் லஷ்மி பாய்.

குதிரை பாயத் தொடங்கும்போதே குழந்தை கண்களைச் சுகமாக மூடிக்கொண்டுவிட்டது. “உறங்காதே, தாமோதரா” என்றார் குதிரையைச் செலுத்திக்கொண்டிருந்த லஷ்மி பாய். கங்காரு குட்டி தலையை வெளியில் நீட்டியது. “அம்மா உங்களோடு பேச வேண்டும். இந்த நிமிடத்தைத் தவறவிட்டால் அதன்பின் உங்களோடு பேச முடியாமலேயே போய்விடலாம்.”

“இதுவரை எந்த அம்மாவும் செய்யாத, ஒருபோதும் செய்யவே விரும்பாத ஒன்றை நான் செய்துகொண்டிருக்கிறேன். இதுவரை எந்தக் குழந்தையும் காணாத ஓரிடத்துக்கு உன்னை அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறேன்.”

ராணி, பிரிட்டிஷார் அபாயமானவர்கள். நீங்கள் ஏன் போர்க்களத்துக்குப் போக வேண்டும் என்று என்னைத் தடுக்கப் பார்த்தார்கள். நான் மறுத்ததும், குழந்தையை மட்டுமாவது நாங்கள் பாதுகாக்கிறோமே என்று மன்றாடினார்கள். இந்த உலகில் பாதுகாப்பான இடம் என்று குழந்தைகளுக்குத் தனியே ஏதாவது இருக்கிறதா என்ன?

நான் முதன் முதலில் புத்தகத்தைத் தொட்டபோது, அது உனக்குப் பாதுகாப்பானதல்ல என்றார்கள். பேனாவை எடுத்து எழுத ஆரம்பித்தபோது, அது முறையல்ல என்றார்கள். குதிரையின் மீது ஒரு நாள் ஏற முயன்றபோது, உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்றார்கள். மற்றொரு நாள், வாளைக் கையில் ஏந்தியபோது, ஒரு பெண்ணுக்கு எதற்கு வாள் என்றார்கள்.

வீதியில் நடந்து சென்றபோது, ஏன் முகத்தை மறைக்காமல் வருகிறாய் என்று வருந்தினார்கள். சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்தபோது, ஒரு பெண்ணால் இத்தனை பெரிய நிலத்தை ஆள முடியுமா என்று கிசுகிசுத்தார்கள். அவர்கள் அஞ்சியது போல் பூமி தலைகீழாகப் புரண்டுவிடவில்லை என்பது தெரிந்ததும், யாரோ பின்னாலிருந்து ராணியைச் சரியாக வழிநடத்துகிறார்கள் போலிருக்கிறது என்று நிம்மதி அடைந்தார்கள்.

இது நம் நிலம். பிரிட்டிஷாருக்கு இங்கே என்ன வேலை என்று நான் சீறியபோது, ‘ஐயோ ராணி, அவர்கள் போர் தொடுத்தால் நம் நிலை என்ன ஆகும்? அரசர் இருந்திருந்தாலாவது பரவாயில்லை’ என்று தயக்கத்தோடு இழுத்தார்கள்.

என்னதான் இருந்தாலும் நீங்கள் பெண் அல்லவா? என்னதான் இருந்தாலும் அது குழந்தை அல்லவா? என்னதான் நெருக்கடி என்றாலும் நீங்கள் போர்க்களத்துக்குப் போகலாமா? என்னதான் பாசம் என்றாலும் குழந்தையைப் போய் யாராவது போருக்கு அழைத்துச் செல்வார்களா?

என்னதான் செய்ய வேண்டும் நான்? மயிலோடும் வாத்தோடும் விளையாடிக்கொண்டு, சொப்புச் சாமான்களோடு பேசிக்கொண்டு, கொஞ்சம் வளர்ந்த பிறகு முகத்தையும் முடிந்தால் என்னையும் வீட்டுக்குள் மறைத்துக்கொண்டு, குடும்பம் விரும்பும் அமைதிப் பெண்ணாக, மக்கள் விரும்பும் அழகு ராணியாக, சாவி கொடுத்தால் மட்டுமே நகரும் பொம்மையாக இருந்திருக்க வேண்டும் போலிருக்கிறது.

குழந்தைகளையும் பெண்களையும் இவ்வளவு அக்கறையோடு பொத்திப் பொத்திப் பாதுகாக்கத் துடிக்கிறார்களே, பேசாமல் அவர்களிடமே நாட்டை ஒப்படைத்துவிட்டால் என்ன என்று நீ கேட்கலாம். ஒப்படைக்கலாம்தான். ஆனால், அவர்கள் நம் நாட்டை என்ன செய்து வைத்திருக்கிறார்கள் என்று பார்த்தாய் அல்லவா?

நம் நிலத்தைப் பிரிட்டிஷார் பிடித்துவிட்டனர். நம் மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுவிட்டது. நம் செல்வம் கொள்ளை போய்விட்டது. நம் நாடு அடிமை நாடாக மாறிவிட்டது. நாம் அனைவரும் அடிமைகளாக மாறிவிட்டோம்.

எனவே, உன் அம்மா மீண்டும் வாளை ஏந்திக்கொண்டிருக்கிறாள். போர்க்களத்துக்கு விரைந்துகொண்டிருக்கிறாள். உன் கண்களைத் திறந்து உன் அம்மாவைப் பார், தாமோதரா. அபாயம் என்று தெரிந்தும் உன் அம்மாவின் முகத்தில் ஏன் ஒரு துளி பயமும் இல்லை என்று உனக்குத் தெரியுமா?

ஏனென்றால் பிறந்தது முதல் உன் அம்மா போர்க்களத்தில்தான் ஒவ்வொரு நொடியும் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். அம்மா மட்டுமல்ல, ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு கணமும் ஒரு போரை நடத்திக்கொண்டுதான் இருக்கிறாள். அந்தப் போரில் வென்றால்தான் அவள் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும். எடுத்து வைத்த பிறகு இன்னொரு போருக்கு அவள் தயாராக வேண்டும்.

இந்த முறை உன் அம்மா சந்திக்கப் போவது அவளுக்கான போரை அல்ல. அவள் குழந்தையான உனக்கான போரல்ல. அவள் நிலத்துக்கான, அவளுடைய மக்களுக்கான, மக்களின் விடுதலைக்கான போர். இந்தப் போரை ஒரு பெண் எப்படித் தலைமை தாங்கி நடத்துகிறாள் என்பதை நீ அச்சமின்றி பார்க்க வேண்டும்.

ஒரு பெண்ணால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை நீ தெரிந்துகொள்ள வேண்டும். இது ஆண்களுக்கான நாடு மட்டுமல்ல, பெண்களுக்கான நாடும்தான் என்பதை ஓர் ஆணாக நீ உணர வேண்டும். அதற்காகத்தான் உன்னை அழைத்து வந்தேன்.

என் குழந்தையை, என் ஜான்சியை, என் இந்தியாவை, என் மக்களை ஏந்தியபடி போர்க்களத்துக்குள் நான் நுழைகிறேன். உறங்கிவிடாதே, தாமோதரா. என் கனவு உன் கனவாக மாறும்வரை, என் போர் உன் போராக மாறும் வரை, நம் அனைவருக்கும் சுதந்திரம் கிடைக்கும்வரை உறங்கிவிடாதே.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com


மாய உலகம்நிலம்மக்கள்போர்Maaya Ulagamலஷ்மி பாய்மக்களின் சுதந்திரம்ஜான்சிஇந்தியா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author