மண்ணில் புரண்டெழுந்த குழந்தைகள்

மண்ணில் புரண்டெழுந்த குழந்தைகள்
Updated on
1 min read

"என் குழந்தை சென்னையில் பிறந்தவள். மண்ணிலும், தண்ணீரிலும் விளையாடலாம் என்பதே அவளுக்குத் தெரியாது. நான் சொல்லித்தரவும் இல்லை. இங்கே வந்ததும், அவளே இறங்கி விளையாட ஆரம்பித்துவிட்டாள். இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே ஒரு இணைப்பு இருக்கிறது என்பதையும், அதை யாரும் சொல்லித் தரத் தேவையில்லை என்பதை இப்போதுதான் புரிந்துகொண்டேன்" – ஒரு குழந்தையின் தாயான ஜெயராணியின் குரல் இது. மதுரை கீழக்குயில்குடி கிராமத்தில் சமீபத்தில் நடைபெற்ற பசுமைநடை 50-வது நிகழ்ச்சியைப் பற்றித்தான் அவர் சொல்கிறார்.

இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகக் குழந்தை களுக்குத் தனி அரங்கு அமைக்கப் பட்டிருந்தது. இயற்கையும், பாரம்பரியமும் கலந்த சிறுசிறு பயிற்சிகளை ரத்தினவிஜயனும் சிவகாமசுந்தரியும் குழந்தைகளுக்குச் செய்து காட்டினார்கள். பங்கேற்ற குழந்தைகளின் எண்ணிக்கை 350!

பள்ளியில் கிடைக்காதது

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகக் குழந்தைகளே நடத்திய ஆய்வு, எந்தப் பள்ளியிலும் கிடைக்காத ஓர் அனுபவம். 120 குழந்தைகள் 12 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, மலையடிவாரத்தில் உள்ள குளத்தைப் பற்றி ஆய்வு செய்தனர். கிடைத்த தகவல்களைத் திரட்டினர். குளத்தின் பரப்பு எவ்வளவு, எங்கிருந்து அதற்குத் தண்ணீர் வருகிறது என்பது போன்ற தகவல்களுடன் ஒரு குழு வந்தால், இன்னொரு குழுவோ இந்தக் குளத்தில் என்னென்ன உயிரினங்கள் வாழ்கின்றன, அவற்றின் உணவுமுறை என்ன? அதை எங்கிருந்து பெறுகின்றன என்று அறிந்து வந்தார்கள்.

மற்றொரு குழுவோ இன்னும் ஒருபடி மேலே போய் இந்தக் குளத்துக்கும் ஊர் மக்களுக்கும் உள்ள உறவு என்ன? குளத்தை எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்று விசாரித்துவந்ததார்கள். கடைசியில், அவர்கள் திரட்டிவந்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டபோது, குளத்தைப் பற்றி ஒரு விரிவான புத்தகத்தைப் படித்த உணர்வு கிடைத்தது.

நாமும், இயற்கையும் வேறுவேறு அல்ல. ஒரு குளத்தை நம்பி எத்தனை உயிரினங்கள் இருக்கின்றன? அவற்றை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்ற விஷயத்தைக் குழந்தைகளின் ஆழ்மனதில் இயல்பாகப் பதியச் செய்வதுதான், இந்த நிகழ்வின் நோக்கம் என்றனர் பயிற்சியாளர்கள்.

புதிய விளையாட்டுகள்

அது மட்டுமல்லாமல், தீப்பெட்டி, சூரியன், மலை, குளம், தவளை போன்ற 60 பொருட்களின் படங்களைக் குழந்தைகளிடம் காட்டினார்கள். அதிலிருந்து இரண்டு- மூன்று கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து ஒரு கதையைச் சொல்லுமாறு குழந்தைகள் ஊக்கப்படுத்தப்பட்டனர்.

இயற்கையில் கிடைக்கிற பொருட்களைக் கொண்டு ஓவியம் வரைந்து, செம்மண் போன்ற இயற்கைப் பொருட்களைக் கொண்டே வண்ணம் தீட்டுவதில் ஆரம்பித்து, அட்டை, தென்னங்கீற்றைக் கொண்டு அசையும் பொம்மைகளைச் செய்வதுவரை வகுப்பறையில் கிடைக்காத பல புதிய அனுபவங்கள் குழந்தைகளுக்கு இங்கே கிடைத்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in