

ஐம்பது, அறுபது வருஷங்களுக்கு முன்னால் மிகப் பெரிய சாதனை படைத்துவிட்டால், அதை 'உலகச் சாதனை' என்றே பாராட்டி இருப்பார்கள். ஆனால், இப்போதெல்லாம் 'உலகச் சாதனை'க்குப் பதிலாகப் பலரும், 'நான் கின்னஸ் சாதனை படைக்க ஆசைப்படுகிறேன்' என்றே சொல்கிறார்கள். அந்த அளவுக்கு உலகச் சாதனை என்றவுடன், நம் நினைவுக்குவருவது 'கின்னஸ் சாதனை'தான்.
இந்த உலகச் சாதனைப் புத்தகம் வெளியான கதை கொஞ்சம் வித்தியாசமானது. அயர்லாந்தில் இருக்கும் கின்னஸ் மதுத் தயாரிப்பு ஆலையின் நிர்வாக இயக்குநராக இருந்தவர் சர் ஹஹ் பீவர். 1951-ல் ஒரு நாள், ஸ்லானி நதிப் பகுதியில் பறவைகளை வேட்டையாட அவர் சென்றிருந்தார். ஐரோப்பாவில் வேகமான பறவை உப்புக்கொத்தியா, கவுதாரியா என்ற சந்தேகம், அப்போது அவருக்கு வந்தது. அவருக்கும் அவருடைய நண்பருக்கும் இது தொடர்பாகப் பெரிய விவாதமே நடந்தது.
புதிய யோசனை
பிரிட்டனிலும் அயர்லாந்திலும் இதுபோன்று பல்வேறு விஷயங்கள் தொடர்பாகக் கேள்விகளும், விவாதங்களும் அடிக்கடி நடப்பதைப் பீவர் அறிந்திருந்தார். இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க எந்தப் புத்தகமும் அன்றைக்கு இல்லை. அப்படி ஒரு புத்தகம் வந்தால், நிச்சயம் அது பிரபலமடையும் என்று அவர் நம்பினார்.
இது போன்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் ஆதாரப்பூர்வமான தகவல்களைக்கொண்ட ஒரு புத்தகத்தை ஏன் தொகுக்கக்கூடாது என்று அவருக்குத் தோன்றியது. அதன் அடிப்படையில் நாரிஸ், ராஸ் மெக்விர்டர் ஆகிய இருவரையும் ஆசிரியர்களாகப் பீவர் நியமித்தார். அதிகம் வெளியே தெரியாத தகவல்களைக் கொண்ட தொகுப்பாக, கின்னஸ் முதல் சாதனைப் புத்தகம் 1954-ம் ஆண்டில் வெளியானது. அது கின்னஸ் மது ஆலையைப் பிரபலப்படுத்தும் இலவச வெளியீடாக வழங்கப்பட்டது.
உடனடி பிரபலம்
அது மிகப் பெரிய வரவேற்பைப் பெற, 1955-ம் ஆண்டு முதல் அது தனிப் புத்தகமாக வெளியிடப்பட ஆரம்பித்தது. விரைவிலேயே அதற்காகத் தனி நிறுவனமும் உருவாக்கப்பட்டது. 1998-க்குப் பிறகு புத்தகத்தின் தலைப்பில் 'உலகச் சாதனை' என்ற வார்த்தை நீக்கப்பட்டு, 'கின்னஸ் சாதனைப் புத்தகம்' என்ற பெயரில் வெளியாகி வருகிறது.
இது ஆண்டுதோறும் வெளியாகும் தொகுப்பு நூல். உலகில் நிகழ்த்தப்படும் இயற்கை சாதனைகள், மனிதச் சாதனைகள் இரண்டும் இதில் தொகுக்கப்படுகின்றன. இயற்கைச் சாதனைகளை எல்லோரும் அறிந்துகொள்ள விரும்பினாலும், அது அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பதற்கான வாய்ப்பு குறைவு.
அதேநேரம் மனிதச் சாதனைகள் என்ற பெயரில், வேடிக்கையான, விநோதமான, ஒரு செயலைச் செய்வதால் குறிப்பிட்ட எந்தப் பயனும் கிடைக்காவிட்டாலும்கூடப் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. கின்னஸ் புத்தகத்தில் எப்படியாவது இடம்பிடித்துவிட வேண்டும் என்ற பலருடைய ஆசைதான், இதற்கு அடிப்படைக் காரணம்.
பணயம் வைக்கலாமா?
இன்றைக்கு உலகச் சாதனைகளைப் பட்டியலிடும் மிகப் பெரிய சர்வதேச அமைப்பாக, கின்னஸ் சாதனை அமைப்பு வளர்ந்திருக்கிறது. புத்தகமாக மட்டுமல்லாமல் டி.வி. தொடராகவும், அருங்காட்சியகமாகவும் பல்வேறு வடிவங்களுக்கு அது பரவலாகியுள்ளது.
இந்தப் புத்தகத்தில் சாதனைகளைச் சேர்ப்பதற்கு எனத் தனி விதிமுறைகள் இருக்கின்றன. அதிகாரப்பூர்வக் கின்னஸ் நடுவர்கள் முன்னிலையில்தான் புதிய சாதனையை நிகழ்த்தவோ, ஏற்கெனவே உள்ள சாதனையை முறியடிக்கவோ முடியும்.
இன்றைக்குச் சிலர் 'புதிய கின்னஸ் சாதனை செய்யப் போகிறேன் பேர்வழி' என்று தங்கள் உடல்நலனையும், ஏன் உயிரையும்கூடப் பணயம் வைக்கத் தயாராக இருக்கிறார்கள்.
அதேநேரம் கின்னஸ் புத்தகத்தில் சேர்க்கப்பட்டு, சமூக நெறிமுறைகளுக்கு மாறானதாக இருப்பதால் சில சாதனைகள் அகற்றப்பட்டும் உள்ளன. அதனால் கின்னஸ் சாதனை புரிய வேண்டுமென நினைப்பவர்கள், இதையும் சேர்த்து யோசிக்க வேண்டும்.
கின்னஸ் புத்தகம் நிகழ்த்திய சாதனைகள்
கின்னஸ் புத்தகமே பல உலகச் சாதனைகளைப் படைத்துள்ளது. உலகில் விற்கப்படும் (காப்புரிமை பெற்ற) புத்தகங்களில், எல்லாக் காலத்திலும் அதிகம் விற்கும் புத்தகமாக இருந்துவருகிறது.
இந்தச் சாதனை, கின்னஸ் புத்தகத்திலேயே இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க நூலகங்களில் அதிகம் திருடப்படும் புத்தகங்களில் இதுவும் ஒன்று.
ஆங்கிலம் தவிர, 30 உலக மொழிகளில் கின்னஸ் புத்தகம் வெளியாகிறது.
இந்தப் புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு அம்சத்துக்கும் ஒரு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
2016-ம் ஆண்டுக்கான பதிப்பின் மூலம், கின்னஸ் புத்தகம் 62-வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.
ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்ட தகவல்களுடன் இது வெளியாகிறது.
உலகின் அனைத்துப் பகுதிகளில் இருப்பவர்களும் இந்தப் புத்தகத்தில் இடம்பெறுகிறார்கள்.