Last Updated : 07 May, 2014 01:03 PM

 

Published : 07 May 2014 01:03 PM
Last Updated : 07 May 2014 01:03 PM

பள்ளிக்கூடம் பிடிக்காத நோபல் கவி

பல குழந்தைகளைப் போல ரவீந்திரநாத் தாகூரும் பள்ளி செல்லும் வயதை அடைவதற்கு முன்பே, பள்ளிக்குச் செல்ல ஆர்வமாக இருந்த குழந்தைகளில் ஒருவர்தான். அவரது உறவுக்காரப் பையன்கள் சத்யாவையும் சோமனையும் பள்ளிக்கு அழைத்துச் செல்ல தினமும் வண்டி வரும். அதில் தானும் போக வேண்டுமென்று குழந்தையாக இருந்த தாகூர் அழுது அடம்பிடித்திருக்கிறார்.

அப்போது தாகூருக்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்த ஆசிரியரோ, "கொஞ்ச காலத்தில் பள்ளிக்குப் போக மாட்டேன் என்று நீ அடம்பிடிக்கப் போகிறாய், பார்" என்று சொல்லி அடித்தார்.

தாகூர் பள்ளி செல்ல ஆரம்பித்த பிறகு, நிஜமாகவே அப்படித்தான் நடந்தது. முதல் நாளில் இருந்தே தாகூருக்குப் பள்ளிக்கூடம் பிடிக்கவேயில்லை. ஒரு அறைக்குள் குழந்தைகளைப் போட்டு அடைப்பது, நோட்டு, புத்தகங்களை வைத்துக்கொண்டு ஏற்கெனவே சொல்லப்பட்ட விஷயங்களையே திரும்பத் திரும்பப் படிப்பது தாகூருக்கு வெறுப்பை ஏற்படுத்தின.

இயற்கையையும் பரந்த வானத்தையும் பார்த்து அனுபவிக்க, அந்தப் பள்ளிக்கூடத்தில் வாய்ப்பில்லாமல் இருந்தது. எந்த விதமான சுதந்திரமும் இல்லை. விளையாடும்போதுகூட, ஆசிரியர்கள் கண்காணித்தார்கள். இவையெல்லாம்தான் தாகூரின் வெறுப்புக்குக் காரணம்.

இதனால் பள்ளிக்கூடத்துக்குப் போகாமல் இருக்க என்னென்ன வழிகள் உண்டு என்று தாகூர் ஆராயத் தொடங்கினார். ஆனால், பள்ளிக்கூடத்தில் அறிவியல், ஓவிய வகுப்புகள் மட்டும் அவருக்குப் பிடித்திருந்தன.

சொற்களைப் பாட்டில் பயன்படுத்தியபோது, அதில் பிறந்த இசை தாகூருக்குப் பரவசத்தை ஏற்படுத்தியது. எழுத வேண்டுமென்ற ஆசை அவருக்குள் தீவிரமடைந்தது. ஒரு குட்டி நீல நிற நோட்டில் சில கவிதைகளை எழுதி வைத்தார். போகும் இடமெல்லாம் அந்த நோட்டையும் தன்னுடனே எடுத்துச்சென்றார். சத்யாவும் சோமனும் அந்தக் கவிதைகளைக் கண்டு பிரமித்து, எல்லோருக்கும் அதைக் காட்டினார்கள்.ஆசிரியர்களும் பாராட்டி னார்கள். தாகூரின் தந்தை தேவேந்திரநாத்தும் அதைப் படித்துவிட்டுப் புன்முறுவல் பூத்தார்.

இப்படிப் பள்ளி செல்ல ஆரம்பித்த சிறு வயதிலேயே தாகூர் கவிதைகளை எழுத ஆரம்பித்துவிட்டார். எழுத்து, ஓவியம், இசை என பல்வேறு கலைகளிலும் ஆர்வம் கொண்டிருந்த அவர், அனைத்திலும் புதிய எல்லைகளைக் கண்டடைந்தார்.

சின்ன வயதில் எப்படிப்பட்ட பள்ளிக்கூடம் வேண்டும், கற்பித்தல்கூடம் எப்படி இருக்க வேண்டுமென்று அவர் ஆசைப்பட்டாரோ, பிற்காலத்தில் அவரே அதை உருவாக்கினார். ‘பாத பவனா' என்ற பள்ளியை சாந்தி நிகேதனில் அவர் விரும்பிய வகையில் கட்டினார். வாழ்க்கையின் பெரும்பகுதியை அங்கேதான் அவர் கழித்தார்.

குழந்தைகள் இயற்கையின் மடியில் எளிமையாக வளர்க்கப்பட வேண்டும். தங்கள் வேலையைத் தாங்களே கவனித்துக்கொண்டு, மற்றவர்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும். நமது மண்ணின் அறிவையும் பண்பாட்டையும் புதுப்பிக்க வேண்டும். உடல் பலத்தையும் புதிய அறிவையும் இணைத்து நாட்டின் மேம்பாட்டுக்குப் பங்காற்ற வேண்டும் என்று தாகூர் நினைத்தார். புகழ்பெற்ற விஸ்வபாரதி பல்கலைக்கழகமாக சாந்தி நிகேதன் வளர்ந்திருக்கிறது.

விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தில் படித்த புகழ்பெற்றவர்களின் பெயரைச் சொன்னால், அதன் பெருமையை உணரலாம். அங்கே படித்தவர்களில் சிலர்: திரைப்பட மேதை சத்யஜித் ராய், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்திய சென்.

நன்றி: சிறுவன் தாகூர், லீலா மஜூம்தார், தமிழில்: ரா.கி. ரங்கராஜன், வெளியீடு: நேஷனல் புக் டிரஸ்ட், (என்.பி.டி.), பள்ளி கல்வித் துறை வளாகம் (டி.பி.ஐ.), நுங்கம்பாக்கம், சென்னை - 600 006

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x