Published : 02 Sep 2020 09:21 am

Updated : 02 Sep 2020 09:21 am

 

Published : 02 Sep 2020 09:21 AM
Last Updated : 02 Sep 2020 09:21 AM

மாய உலகம்!: இசையைக் கொண்டு என்ன செய்ய முடியும்?

maaya-ulagam
ஓவியம்: லலிதா

ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை எப்படி மக்களுக்கு அறிவிப்பது? நாளை முதல் இந்தியா ஒரு சுதந்திர நாடாக மாறப் போகிறது. இனி நீங்கள் அனைவரும் சுதந்திரமான மனிதர்கள் என்னும் மகிழ்ச்சியூட்டும் செய்தியை எப்படி எல்லோருடைய காதுகளுக்கும் கொண்டு சென்று சேர்ப்பது?

புதிய பிரதமராகப் பொறுப்பு ஏற்கப் போகும் நேருவிடம் சொன்னால் அவர் நேர்த்தியாக அறிவித்துவிடுவார் என்பது உண்மைதான். ஆனால், அவருடைய உரை ஆங்கிலத்தில் அல்லவா இருக்கும்? இந்தியாவில் வாழும் எல்லோருக்கும் ஆங்கிலம் தெரியுமா என்ன?

இதென்ன பிரமாதம்? முதலில் நேரு தனது உரையை ஆங்கிலத்தில் வாசிக்கட்டும். அதன்பின் என்னென்ன மொழிகள் எல்லாம் இந்தியாவில் இருக்கின்றனவோ அந்தந்த மொழிகளில் எல்லாம் மொழிபெயர்த்து எல்லோருக்கும் கொண்டு சென்றுவிடுவோம். நம்மிடம் ரேடியோ இருக்கிறது. செய்தித்தாள்கள் இருக்கின்றன. இந்த இரண்டும் இல்லாத கிராமங்களுக்கு வண்டிகளை ஓட்டிச் சென்று ஒலிபெருக்கியில் அறிவித்துவிட முடியாதா?

முடியும். ஆனால், அவ்வாறு செய்வது சரியா? இது என்ன வழக்கமான மற்றொரு செய்தியா? உனக்கு முதலில் சொல்லிவிடுகிறேன், இன்னொருவருக்குப் பிறகு, மற்றவர்களுக்கு அதற்கும் பின்னால் என்று சொல்வது நியாயமா? ஒரு புதிய நாடு உதயமாகப் போவதை கிராமம் நகரம், படித்தவர் படிக்காதவர், குழந்தை, பெரியவர் என்று பேதமில்லாமல் ஒரே நேரத்தில் அனைவருக்கும் புரியும்படித் தெரிவிப்பதுதானே முறை?

ஆமாம் இதுதான் முறை. கேட்க நன்றாகவே இருக்கிறது. ஆனால், செயல்படுத்துவது எப்படி? இந்தியா போன்ற பரந்து விரிந்த ஒரு நாட்டில் எல்லோருக்கும் புரியக்கூடிய ஒரே மொழி என்பது என்னவாக இருக்க முடியும்? அப்படி ஓர் அதிசய மொழி தெரிந்தவர் எங்கிருக்கிறார்?

அவரை நான் அறிவேன். அவர் என்னோடு வளர்ந்தவர், என்னோடு நெருக்கமாக வாழ்பவர் என்று பெருமிதத்தோடு முழங்கியது வாரணாசி.

மூன்று வயது குழந்தையாகத் தன் அம்மாவின் கையைப் பற்றிக்கொண்டு முதன் முதலாக பிஸ்மில்லா கான் என்னிடம் வந்து சேர்ந்தார். சித்தப்பாவின் வீட்டில் அமர்ந்துகொண்டு நாள் முழுக்க ஷெனாய் இசை கேட்டுக்கொண்டிருப்பார். எனக்கும் கற்றுக்கொடுப்பீர்களா சித்தப்பா என்று அவர் ஒரு நாள் ஆசையோடு கேட்டபோது என் கவனம் அவர்மீது திரும்பியது.

பிஸ்மில்லா கானின் சிறிய கரங்களில் ஷெனாய் வந்து அமர்ந்துகொண்ட தினம் இன்னமும் என் நினைவில் இருக்கிறது. அதை அவர் சிரமமின்றி உயர்த்தி தன் உதடுகளில் பொருத்திக்கொண்டார். அவர் வாசிக்கத் தொடங்கியதும் என் கண்கள் தானாகவே மூடிக்கொண்டன. ஷெனாய் என்னும் கருவி இந்த உலகுக்கு அருளப்பட்டதே இந்தக் குழந்தைக்காகத்தானா?

ஷெனாயும் அப்படித்தான் நினைத்திருக்க வேண்டும். பிஸ்மில்லா கான் தீண்டியதும் ஷெனாய் சிலிர்த்து நடுங்கியதை நான் கண்டேன். என்னைத் தயவு செய்து கீழே வைத்துவிடாதே, என்னைவிட்டு ஒரு கணமும் விலகிவிடாதே என்று பிஸ்மில்லா கானிடம் ஷெனாய் சிறு குரலில் கெஞ்சியதை நான் காதுகொடுத்துக் கேட்டேன். பிஸ்மில்லா கானின் ஓர் அங்கமாக ஷெனாய் மெல்ல மெல்ல உருமாறியது.

இசை நமக்குத் தடை செய்யப்பட்டிருக்கிறது, இதெல்லாம் இனி வேண்டாம் என்று சிலர் பிஸ்மில்லா கானை அதட்டியபோது அடக்கமான குரலில் சொன்னார் பிஸ்மில்லா கான்: “என்னிடமிருந்து ஷெனாயை என் மதம் பிரிக்கும் என்றால் அப்படி ஒரு மதம் எனக்குத் தேவையில்லை. வீணையோடு அமர்ந்திருக்கும் கலைவாணியை நான் வணங்கிக்கொள்கிறேன்.”

அவர் கங்கையை நேசித்தார். காசி விஸ்வநாதர் கோயிலில் அமர்ந்துகொண்டார். மசூதியில் தொழுதார். தலையில் எப்போதும் குல்லாய் இருந்தது. கண்களில் எப்போதும் பணிவு. கரங்களில் எப்போதும் ஷெனாய்.

அந்த ஷெனாய் ஏன் பிஸ்மில்லா கானை அவ்வளவு வாஞ்சையோடு தழுவிக்கொண்டது என்பதை அன்றுதான் புரிந்துகொண்டேன். பிஸ்மில்லா கான் புதிதாகப் பிறந்த குழந்தை. காலம் காலமாகப் பாய்ந்துகொண்டிருக்கும் நதி. மதம், சாதி, இனம், மொழி, தேசம் அனைத்தையும் கடந்து, அனைத்திடமிருந்தும் விலகி உயரே, மிக மிக உயரே நின்று மின்னும் ஒரு நட்சத்திரம்.

ஆஹா, நாங்கள் தேடிக்கொண்டிருந்தது இவரைத்தான் என்று வாரணாசியிடமிருந்து பிஸ்மில்லா கானை அள்ளி எடுத்துக்கொண்டது புது டெல்லி.

15 ஆகஸ்ட் 1947. செங்கோட்டைக்குள் நுழைந்தார் பிஸ்மில்லா கான். பார்வையாளர்களில் ஒருவராக நேருவும் அமர்ந்திருப்பதைக் கண்டார். கனிவோடு அனைவரையும் வணங்கினார். ஷெனாயை எடுத்து வைத்துக்கொண்டு வாசிக்கத் தொடங்கினார்.

இது என் இசை என்றார் ஓர் இந்து. இவர் என்னோடுதான் பேசுகிறார் என்றார் ஒரு கிறிஸ்தவர். இவர் என்னுடையவர் என்றார் ஓர் இஸ்லாமியர். என்ன கருவி, என்ன ராகம் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், என் நெஞ்சமெல்லாம் நெகிழ்ந்துகொண்டிருக்கிறது என்றார் ஒருவர். எனக்கு என்ன நடக்கிறது, நான் எப்போது ஒரு பறவை போல் பறக்க ஆரம்பித்தேன் என்று வியந்தார் ஒருவர். எனக்கு யார் மீதாவது அன்பு செலுத்த வேண்டும் போலிருக்கிறது என்றார் ஒருவர். இறைவன் நம்மோடு பேசத் தொடங்கிவிட்டாரா என்று வானத்தை ஆராய்ந்தார் ஒருவர்.

பிஸ்மில்லா கானின் ஷெனாய் என்னை அழ வைக்கிறது என்றார் ஒருவர். பிறகு அவரே, பிஸ்மில்லா கானின் விரல் என் கண்ணீரைத் துடைத்துவிட்டது என்றார்.

பிஸ்மில்லா கானின் இசைதான் நான். இந்த இசை இருக்கும்வரை நான் இருப்பேன் என்றது சுதந்திரம். அவர் இசை இருக்கும்வரை நான் பாய்வேன் என்றது கங்கை. அவர் இசை இருக்கும்போது நாங்கள் அமைதியாகிவிடுவோம் என்றன மொழிகள். அவர் இசையைச் சுமந்து செல்லும்வரை நான் இருப்பேன் என்றது காற்று.

அவர் குரல்தான் என் குரல் என்றது புதிய இந்தியா. இல்லை, அது நம் குரல் என்றது இந்தியாவோடு வந்து ஆசையாக ஒட்டிக்கொண்ட உலகம்.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

மாய உலகம்இசைஇந்தியாசுதந்திர நாடுபுதிய பிரதமர்நேருபிஸ்மில்லாMaaya Ulagamகிறிஸ்தவர்மசூதி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author