

பறவைகள் உடலை அலகினால் அடிக்கடி கோதுவது ஏன், டிங்கு?
- பி. பெர்னிஸ், 4-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம்.
நம் உடலில் சேரும் அழுக்கை, குளிப்பதன் மூலம் சுத்தம் செய்துகொள்கிறோம். அதுபோல் பறவைகள் தங்கள் உடல் மீது ஒட்டியிருக்கும் தூசி, அழுக்கு, ஒட்டுண்ணி போன்றவற்றை அகற்றுவதற்காக, அலகின் மூலம் அடிக்கடி கோதிக்கொள்கின்றன. இதன் மூலம் பறவைகளின் உடல் சுத்தமாகிறது, பெர்னிஸ்.
அஞ்சல்தலைகளில் நம் படத்தையும் இடம்பெறச் செய்யலாமாமே, அதற்கு என்ன செய்ய வேண்டும், டிங்கு?
- ஜி. இனியா, 4-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் சீனியர் செகன்டரி பள்ளி, கிருஷ்ணகிரி.
ஆமாம், அஞ்சல்தலைகளில் நம் படத்தையும் நாம் விரும்பும் படங்களையும் நிறுவனங்களின் லோகோவையும் இடம்பெறச் செய்ய முடியும். அதாவது இனியாவின் படத்தையும் அஞ்சல்தலையில் கொண்டு வர முடியும். இனியாவுக்குப் பிடித்த நாய்க்குட்டியின் படத்தையும் கூட அஞ்சல்தலையில் கொண்டு வர முடியும். 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகத் தபால் தலை கண்காட்சியில் இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்தனர்.
இந்த வசதி குறிப்பிட்ட அஞ்சல் அலுவலகங்கள், சுற்றுலாத்தலங்களில் இருக்கும் அஞ்சலகங்கள் போன்றவற்றில் இருக்கிறது. இந்திய அஞ்சல்துறையின் இணையதளத்திலும் இந்தச் சேவை இருக்கிறது. ‘மை ஸ்டாம்ப்’ என்ற பகுதியில், என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், செலுத்த வேண்டிய கட்டணம், விண்ணப்பம் போன்றவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் கட்டைவிரல் அளவுள்ள உங்களுடைய அஞ்சல்தலையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
வாகனங்களில் செல்லும் போது நாய் துரத்துகிறதே ஏன், டிங்கு?
- டி. சாமுவேல், 10-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, தருமபுரி.
இன்று வீட்டுப் பிராணிகளாக இருக்கும் நாய்கள், ஒரு காலத்தில் காட்டு விலங்குகளாக இருந்தவை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்களுடன் வளர்ந்து வந்தாலும் அவற்றின் சில இயல்புகள் இன்னும் மாறவில்லை. அக்கம் பக்கம் பார்த்து வேகமாகச் சாப்பிடுவது, மரத்தடியில் சிறுநீர் கழிப்பது, தன்னைவிட வேகமாகச் செல்லும் ஒரு விலங்கைத் துரத்துவது போன்றவற்றை இன்றும் நாய்கள் கடைபிடித்து வருகின்றன. நாய்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் புதிய நபர்கள் வாகனங்களில் வந்தால், எச்சரிக்கையுடன் இருப்பதற்காகத் துரத்துகின்றன.
சில நேரத்தில் பொழுதுபோக்குக்காக துரத்துவதும் உண்டு. மனம் அமைதி இல்லாமல் பதற்றமான சூழ்நிலையிலும் வாகனங்களைத் துரத்திச் செல்வதும் உண்டு. காட்டில் இரையைத் துரத்திச் செல்வது போல் நாட்டுக்குள் துரத்திச் செல்லும் அவசியம் நாய்களுக்கு இல்லை. ஆனால், துரத்துதல் என்ற அந்தப் பண்பை இப்படிப் பயன்படுத்திக்கொள்கின்றன. பெரும்பாலும் நாய்கள் நம்மைப் பயமுறுத்துவதற்காகத் துரத்துவதில்லை. விளையாட்டுக்காகத்தான் சற்று தூரத்துக்குத் துரத்தி வருகின்றன, சாமுவேல்.