டிங்குவிடம் கேளுங்கள்: பூமியின் அதிர்வை ஏன் உணர முடியவில்லை?

டிங்குவிடம் கேளுங்கள்: பூமியின் அதிர்வை ஏன் உணர முடியவில்லை?
Updated on
2 min read

இறகுப்பந்தைத் திருப்பி அடிப்பது ஏன் டிங்கு?

- வி.கு. சுகதேவவ், 3-ம் வகுப்பு, கம்மவார் ஆரம்பப் பள்ளி, அருப்புக்கோட்டை.

எடை இல்லாத ஒரு பொருளை அடிக்கும்போது போதிய விசை உண்டாகாது. அதனால் நீண்ட தூரம் பயணிக்காமல், மிகக் குறைவான தூரத்திலேயே விழுந்துவிடும். இறகுப்பந்தின் 90% எடை கீழே உள்ள பந்து பகுதியில்தான் இருக்கிறது.

எடை அதிகமான பந்து பகுதியில் அடிக்கும்போது விசை உண்டாகி, செல்லும் திசையையும் வேகத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் புவியீர்ப்பு விசையும் பங்காற்றி, இறகுப்பந்து எதிராளியிடம் செல்ல வைக்கிறது. அதனால்தான் இறகுப்பந்தின் அடிப் பகுதியில் அடித்து விளையாடுகிறார்கள், சுகதேவ்.

மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் ரத்த வகைகள் இருக்கின்றனவா, டிங்கு?

- ஆர். ஜோஷ்னா, 9-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம், திருச்சி.

மனிதர்களில் ரத்த வகைகள் இருப்பது போலவே விலங்குகளிடமும் ரத்த வகைகள் இருக்கின்றன, ஜோஷ்னா. நாய்களுக்கு 13, குதிரைகளுக்கு 8, பூனைகளுக்கு 3 ரத்த வகைகளும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

பூமி சுற்றும்போது நம்மால் ஏன் அதிர்வை உணர முடியவில்லை, டிங்கு?

- கே. ராஜேஸ்வரி, 6-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, திருவாரூர்.

ஒரு பொருள் சீரான வேகத்தில் சென்றுகொண்டிருக்கும்போது அதன் அதிர்வை உணர முடியாது. அந்தப் பொருள் மீது விசையைச் செலுத்தும்போது அது இன்னும் வேகமாக ஓடலாம், நிற்கலாம். அப்போதுதான் அந்தப் பொருளின் அதிர்வை நம்மால் உணர முடியும். விமானம் மேலே சென்று குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே நம்மால் அதிர்வை உணர முடியும்.

விமானத்தின் வேகம் சீரான பிறகு, அதிர்வை நம்மால் உணர முடியாது. அது போலதான் பூமியும். பூமி இப்போது சீரான வேகத்தில் சென்றுகொண்டிருப்பதால் நம்மால் அதிர்வை உணர முடியாது. பூமியின் வேகத்தில் மாற்றம் ஏற்படும்போது மட்டுமே அதிர்வை உணர முடியும், ராஜேஸ்வரி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in