

ஆர்டிக் பகுதி முழுவதும் கடலால் மூடப்பட்டிருக்கிறது. அங்கே பனிக்கரடிக்கு உணவு எப்படிக் கிடைக்கிறது, டிங்கு?
- கி. ஆர்த்தி, 6-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
ஆர்டிக் துருவப் பகுதி கடலால் ஆனது. கடலின் மேல் பகுதி 2 மீட்டர் உயரத்துக்கு பனியால் உறைந்து காணப்படும். கடலின் கீழ்ப் பகுதி நீராகத்தான் இருக்கும். ஆர்டிக்கின் வெளிப்புற குளிரை உள்ளே செல்ல விடாமல் இந்தப் பனிப் போர்வை தடுத்துவிடும். அதனால்தான் கடலுக்கு அடியில் சீல், மீன் போன்ற உயிரினங்களால் வாழ முடிகிறது. மீன்களுக்கு நீரில் உள்ள ஆக்சிஜனே போதும். ஆனால், சீல்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளிப்புறக் காற்றைச் சுவாசிக்க வேண்டும்.
அவை தண்ணீருக்கு மேலே உறைந்திருக்கும் பனிப் பகுதியில் துளை போட்டு வெளியே வரும். அப்போது அந்தத் துளைக்கு அருகில் உணவுக்காகக் காத்திருக்கும் பனிக்கரடி, சீல்களைப் பாய்ந்து பிடித்துவிடும். பனிக்கரடியின் முக்கிய உணவு சீல்கள்தாம். அதனால், பனி உருகிய பகுதியில் கடலுக்குள் சென்று மீன்கள், சீல்களை வேட்டையாடவும் செய்யும். இவை தவிர, பறவைகள், முட்டைகள், சிறு விலங்குகள் என பல்வேறு விதங்களில் பனிக்கரடிகள் உணவைப் பெறுகின்றன, ஆர்த்தி.
ஏன் சில பறவைகளால் பறக்க இயலவில்லை, டிங்கு?
- என். பிரவீன் குமார், 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, திருச்சி.
பறவைகளைக் கொன்று உண்ணக்கூடிய உயிரினங்கள் இல்லாத இடங்களில் இந்தப் பறவைகள் வாழ்ந்திருக்கின்றன. அதனால் ஆபத்து நேரத்தில் பறந்து செல்வதற்கு அவசியம் ஏற்படவில்லை. உணவு தேடி வெகு தூரத்துக்குச் செல்ல வேண்டிய தேவையும் இல்லை. இவற்றின் எடையும் அதிகம். அதனால் பெங்குவின், நெருப்புக்கோழி, கிவி போன்ற பெரிய பறவைகளால் பறக்க இயலவில்லை, பிரவீன் குமார்.