

அமெரிக்கா
ஒரு மரம். அதன் கிளையில் அமர்ந்திருந்தது ஒரு சிள்வண்டு. காலைச் சூரியனின் கதகதப்பை அனுபவித்தவாறு, காதைத் துளைக்கும் ஓசையில் ஒரு பாட்டை முனகிக்கொண்டிருந்தது அது. அதற்கு நன்றாகப் பசிக்கிறதுதான், ஆயினும் அதனால் பாட்டுப் பாடாமல் இருக்க முடியாது!
அப்போது எதிர்பாராமல் ஓர் ஓசை கேட்டது!
“ப்ளக்!”
பக்கத்தில் இருந்த ஒரு தவளை, தன் நீளமான நாக்கை நீட்டி, சிள்வண்டைப் பிடித்துவிட்டது! தவளையிடமிருந்து தப்பிக்க மிகவும் முயற்சி செய்தது சிள்வண்டு. பாவம், அதற்கு முடியவில்லை.
தவளை சொன்னது: “நீ சட்டவிரோதமாக என் இடத்துக்கு வந்துவிட்டாய். அதனால்தான் உனக்கு இந்தத் தண்டனை.”
“இது உங்கள் இடம் என்று உண்மையிலேயே எனக்குத் தெரியாது. இந்த ஒரு தடவை என்னை மன்னித்து விட்டுவிடுங்கள். பிறகு ஒருபோதும் இந்தப் பக்கமே வரமாட்டேன்!”
“அது முடியாது. நீ எனக்கும் என் மனைவிக்கும் என் பிள்ளைகளுக்கும் உணவாகப் போகிறாய். என் பிள்ளைகள் சாப்பிட கொசுவும் பூச்சிகளும்தான் கிடைந்துவந்தன. சிள்வண்டைப் போன்ற சுவையான உணவைச் சாப்பிட வேண்டும் என்று அவர்களுக்கும் ஆசை இருக்காதா?”
தவளை சொல்லி முடிக்கவில்லை, அதற்குள் திடீரென்று ஒரு சத்தம் கேட்டது!
“சிக்!”
ஒரு பல்லி, தன் பசை உள்ள நாக்கால் அந்தத் தவளையைச் சுற்றிப் பிடித்துவிட்டது.
“நீ முறை மீறி என் இடத்துக்கு வந்துவிட்டாய். அதனால்தான் உனக்கு இந்தத் தண்டனை” என்றது பல்லி.
தவளை மன்றாடியது: “இது உங்கள் இடம் என்று சத்தியமாக எனக்குத் தெரியாது. இந்த ஒருமுறை விட்டுவிடுங்கள். இனி எப்போதுமே இங்கே வரமாட்டேன்,”
“அது முடியாது. எனக்கு மனைவியும் நிறையப் பிள்ளைகளும் இருக்கிறார்கள். இதுவரை அவர்களுக்குச் சாப்பிட சிறிய புழுக்கள் மட்டும்தான் கிடைத்திருக்கின்றன. அவர்கள் பலசாலிகளாக வளர வேண்டியவர்கள் அல்லவா. உன் மாமிசம் அவர்களுக்குச் சக்தியளிக்கும்.”
பல்லி பேசி முடிக்கவில்லை, அப்போது பட்டென்று இன்னோர் ஓசை கேட்டது.
“ஸ்ஸ்ஸப்!”
பல்லியின் வாலை ஒரு பாம்பு பிடித்துவிட்டது. தன் விஷப் பற்களால் பல்லியின் வாலை நெரித்தது. பல்லி வலி தாங்காமல் உரக்க அழுதது. அப்போது பாம்பு சொன்னது:
“நீ அராஜகமாக என் இடத்துக்கு வந்துவிட்டாய். அதனால்தான் உனக்கு இந்தத் தண்டனை.”
“ஐயோ... இது உங்கள் இடம் என்று நிஜமாகவே எனக்குத் தெரியாது. இப்போது மட்டும் என்னைப் போகவிடுங்கள். இனிமேல் நான் இந்தப் பக்கம் தலைவைத்துகூடப் படுக்க மாட்டேன்.”
“அது முடியாது. என் பிள்ளைகளுக்கு எப்போதும் பசிதான். எப்போதும் நாக்கை நீட்டி வாயைத் திறந்துகொண்டுதான் இருப்பார்கள். அவர்களுக்கு ஏதாவது தின்னக் கொடுக்க வேண்டாமா? நீதான் அவர்களுக்கு உணவு.”
பாம்பு சொல்லி முடிக்கவில்லை, சட்டென்று ஒரு சத்தம் கேட்டது.
“க்ரீச்!”
ஒரு பெரிய பறவை சீறி வந்து பாம்பின் தலையைக் கவ்விக்கொண்டு உயரே பறந்தது. பாம்பு முடிந்தவரை திமிறியது. ஆயினும் பறவையிடமிருந்து விடுபட முடியவில்லை. பறவை சொன்னது:
“நீ அத்துமீறி என் இடத்துக்கு வந்துவிட்டாய். அதனால்தான் உனக்கு இந்தத் தண்டனை.”
“நான் ஒரு முட்டாள். இது உங்கள் இடம் என்று அறியாமல் இருந்துவிட்டேனே! பெரிய மனது வைத்து இந்தத் தவறைப் பொருட்படுத்தாதீர்கள். இனி இதுபோன்று செய்ய மாட்டேன்!”
“அது முடியாது. என் குடும்பத்தினரின் பசியை நான் கண்டும் காணாமல் இருக்க முடியுமா? அவர்கள் உணவுக்காகக் கூட்டில் காத்திருக்கிறார்கள். உன்னைக் கொண்டு சென்றால் மிகவும் சந்தோஷப்படுவார்கள்!”
பறவை சொல்லி முடிக்கவில்லை, உடனே ஒரு பேரோசை கேட்டது.
“டுமீல்!”
பூமியில் நிற்கும் ஒரு வேட்டைக்காரரின் துப்பாக்கியிலிருந்து வந்த ஓசை அது. பறவையின் இறக்கையில் குண்டு பட்டுவிட்டது. பறவை துடித்துக் கீழே விழுந்தது. வேட்டைக்காரர் பறவையின் அருகே ஓடி வந்தார்.
அப்போது கண்ட காட்சி வேட்டைக்காரருக்கு மிகவும் வியப்பளித்தது. பறவையிடமிருந்து விடுபட முட்டிமோதும் பாம்பு. பாம்பின் வாயிலிருந்து தப்பிக்கப் பிரயாசைப்படும் பல்லி. பல்லியின் வாயிலிருந்து மீள முயற்சிக்கும் தவளை. தவளையின் வாயிலிருந்து சுதந்திரமடையப் பாடுபடும் சிள்வண்டு.
கடைசியில், தவளை வாயிலிருந்து வெளியேறி மரத்தில் தாவி ஏறியது சிள்வண்டு. அப்போது அதற்கு ஒரு சந்தேகம். ‘இந்தக் கதையின் ஆரம்பத்தில் நான் என்ன நினைத்துக்கொண்டு அந்த மரக்கிளையில் அமர்ந்திருந்தேன்?’
அந்தப் பரிதாபமான சிள்வண்டு அதைப் பற்றி மறந்துவிட்டது. அப்போது, தரையில் கிடந்த பறவையைத் தூக்கினார் வேட்டைக்காரர். அவர் சொல்வதை சிள்வண்டு கேட்டது.
“மன்னிக்கவும் பறவையே. என் மனைவியும் பிள்ளைகளும் வீட்டில் பசியுடன் இருப்பார்கள். உன் சுவையான இறைச்சி அவர்களுக்கு நல்ல உணவாக இருக்கும்.”