Published : 22 Jul 2020 09:45 am

Updated : 22 Jul 2020 09:45 am

 

Published : 22 Jul 2020 09:45 AM
Last Updated : 22 Jul 2020 09:45 AM

மாய உலகம்: நான் தேவதையின் குழந்தை

maaya-ulagam

மருதன்

‘‘என் அப்பா இந்தப் பக்கம் போனாரா, பிப்பி?’’


‘‘நீலக் கண்களோடு இருப்பாரே, அவரா?’’

‘’ஆமா.’’

’‘உயரம் என்றும் சொல், அவர்தானே?’’

‘‘ஆமா, ஆமா.’’

‘‘கறுப்புத் தொப்பி, கறுப்புக் காலணி?’’

‘‘அவரேதான்.’’

‘‘ஓ... ஆனால், நான் அவரைப் பார்க்கவில்லை'’ என்றாள் பிப்பி.

இன்னொரு நாள் பிப்பி நடந்து செல்லும்போது ஓர் அறிவிப்புப் பலகையைக் கண்டாள்.

‘உங்கள் தோலில் கரும்புள்ளிகள் இருக்கின்றனவா? வருந்தாதீர்கள்! எங்கள் தயாரிப்பு உங்களைப் பளபளப்பாக்கும்!’ என்று அதில் எழுதியிருந்தது. விறுவிறுவென்று உள்ளே நுழைந்தாள் பிப்பி. வாம்மா என்று வரவேற்ற பெண்மணியிடம் கணீர் குரலில் சொன்னாள்.

‘‘இல்லை.’’

‘‘என்ன, இல்லை?’’

‘‘புள்ளி.’'

‘‘ஹாஹா, உன் முகத்திலேயே குட்டிக் குட்டியாகப் புள்ளிகள் இருப்பதை நீ பார்க்கவில்லையா?’’

‘‘அது எனக்குத் தெரியும். ஆனால், புள்ளிகளைக் கண்டு எனக்கு வருத்தமில்லை என்று சொன்னேன்.’’

இன்னொரு நாள் பிப்பியை நெருங்கிய அவள் தோழி, ‘‘எல்லோரையும் போல் நீயும் ஏன் பள்ளிக்கூடத்துக்குப் போகக் கூடாது? அங்கே என்னவெல்லாம் கற்றுக்கொடுப்பார்கள் தெரியுமா?’’ என்றாள்.

‘‘ஓ, தெரியுமே. இப்படி யாரோ சொன்னதை நம்பி தெரியாத்தனமாக ஒரு நாள் போனேன். ஒரு முழு நாள், ஆமாம் முழு நாள் அங்கேயே இருந்தேன். அப்பப்பா, இப்போது நினைத்தால்கூட என் தலை கிடுகிடுவென்று சுற்றுகிறது.’’

இன்னொரு நாள்... இன்னொரு நாள்... என்று ஆரம்பித்து இன்று முழுக்கச் சொல்லிக்கொண்டே இருந்தாலும் பிப்பி லாங்ஸ்டாக்கிங் கதைகளை முழுக்கச் சொல்லி முடிக்க முடியாது. ‘‘என்ன அவசரம்? இன்னொரு நாள் எடுத்துக்கொள்ளேன்'’ என்பாள் பிப்பி.

ஐயோ, அபாயம் என்று ஊரே போக்கிரிகளைக் கண்டு ஓடும்போது ஒன்பது வயது பிப்பி குடுகுடுவென்று எதிர்திசையில் ஓடிச்சென்று, ‘‘என்னையா தேடுகிறாய்?’’ என்று இடுப்பில் கை வைத்துக்கொண்டு முறைப்பாள். ‘‘கடுகு மாதிரி இருந்துகொண்டு எவ்வளவு திமிர்?’’ என்று பிப்பியை யாராவது கோபத்தோடு நெருங்கினால், அவ்வளவுதான். அலேக்காகத் தூக்கி, தலைக்கு மேலே ஒரு சுழற்று சுழற்றி, மரக்கிளையில் தொங்கவிட்டு விடுவாள்.

‘‘நிஜமாவா?’’ என்று நீங்கள் கண்களை விரித்தால், ‘‘பிறகு, பொய்யா சொல்கிறேன்? இதோ இந்த நாக்கு... இந்த நீண்ட நாக்கு... பொய் பேசுமா?’’என்று உங்கள் முகத்துக்கு அருகில் பாம்பு போல் நாக்கை நீட்டுவாள். ‘‘சரி, சரி நம்பறேன்'‘ என்று சொல்லும்வரை நாக்கு வாய்க்குள் போகாது.

”என்ன பிப்பி கொஞ்ச நாளா ஆளையே காணோம்” என்றால், ‘‘இப்பதான் எகிப்திலிருந்து வந்தேன்'’ என்று அலுத்துக்கொள்வாள். ”என்ன பிப்பி எங்கே ஓடுகிறாய்” என்றால், ‘‘வந்து சொல்றேன். கிரேக்கக் கப்பல் இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பிடும்’’ என்பாள்.

‘‘என் அம்மா ஒரு தேவதை. அதோ அந்த மேகத்தில் ஒரு விரிசல் தெரிகிறது அல்லவா? அதற்குப் பின்னால்தான் அம்மா மிதந்துகொண்டிருக்கிறார். ஆ, என்னைப் பார்த்து அவர் கைகாட்டுகிறார், உனக்குத் தெரிகிறதா?’‘ என்பாள். என்னதான் கசக்கிக் கசக்கிப் பார்த்தாலும் உங்கள் கண்களுக்கு மேகத்தைத் தாண்டி எதுவும் தெரியாது. ஆனால், பிப்பி உற்சாகமாகக் குதித்தபடி வானை நோக்கிக் கத்துவாள். ‘‘கவலைப்படாதே அம்மா, என்னை எப்படிப் பார்த்துக்கொள்வது என்று எனக்குத் தெரியும்.’‘

அப்பா எங்கே என்றால் கடலுக்குள் காணாமல் போய்விட்டார். ஒரு நாள் நிச்சயம் அவரைக் கண்டுபிடித்துவிடுவேன் என்பாள். யாரும் இல்லாமல் தனியாக ஒரு வீட்டில் வசிப்பதற்குக் கடினமாக இல்லையா பிப்பி என்று கேட்டால், கேரட் நிறத் தலைமுடி காற்றில் பறக்குமாறு அப்படியும் இப்படியுமாகத் தலையசைத்து சிரிப்பாள். ‘‘இப்படி இருப்பதும் மகிழ்ச்சிதான். பிப்பி, நேரமாச்சு போய் படு என்று அதட்டுவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள் அல்லவா?’’

பிப்பியைத் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தலாம் என்று எண்ணி, ”ஏய் குட்டி, உனக்குக் குதிரை என்றால் பிடிக்குமாமே! இதில் வரைந்து காட்டு பார்க்கலாம்” என்று ஒரு காகிதத்தை நீட்டினால் அதை எட்டிப் பார்த்துவிட்டு, ‘‘குதிரை வரையும் அளவுக்குப் பெரிய காகிதம் கொண்டா’’ என்பாள்.

பிப்பியை நீங்கள் எதற்குள்ளும் அடக்க முடியாது. அவளை இன்னொன்றாக மாற்ற முடியாது. எதையும் அவளுக்குள் திணிக்க முடியாது. எதையும் அவளிடமிருந்து அகற்ற முடியாது. அவளுக்கு உலகம் தெரியும். ‘‘உருண்டையாக இருந்தது, நேற்று சாயந்திரம்கூடப் பார்த்தேன்'’ என்பாள். தடிமனான புத்தகங்களைக்கூட நொடியில் கரைத்துக் குடித்திருக்கிறாள். ‘‘ஆரம்பத்தில் கொஞ்சம் கொழக்கொழப்பாக இருக்கும். பிறகு பழகிவிடும்.’’

நீ வளர்ந்து பெரிய பெண் ஆனதும் என்னவாக மாற விரும்புகிறாய் பிப்பி என்று ஒருமுறை யாரோ கேட்டபோது, பிப்பி புன்னகை மாறாமல் சொன்னாள்: ‘‘வளர்ந்தால் வேறு ஒன்றாக மாறிவிடுவோம் என்றால் நான் வளரவே விரும்பவில்லை. என்றென்றும் பிப்பியாக இருக்கவே விரும்புகிறேன்.’’

(ஸ்வீடிஷ் எழுத்தாளரான அஸ்ட்ரிட் லிண்ட்கிரென் குழந்தைகளுக்காக உருவாக்கிய உலகப் புகழ்பெற்ற கதாபாத்திரம், பிப்பி லாங்ஸ்டாக்கிங்).

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.comமாய உலகம்தேவதைதேவதையின் குழந்தைMaaya Ulagamபுள்ளிகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

15-days-15-posts

15 நாள்கள் 15 பதிவுகள்!

இணைப்பிதழ்கள்

More From this Author

x