

எல்.மீனாம்பிகா
உலகின் பல பகுதிகளிலும் கரோனா தொற்றுக்காக ஊரடங்குப் பிறப்பிக்கப்பட்டது. வெளியில் செல்லாமல் வீட்டிலேயே அடைந்து கிடப்பது எல்லோருக்குமே கஷ்டமான விஷயம்தான். நெதர்லாந்தில் இங்போர்க் என்ற பள்ளி ஆசிரியரும் இரண்டு மாதங்களாக மாணவர்களைப் பார்க்க முடியாமல் தவித்தார்.
கம்பளி நூலால் செய்யப்பட்ட பொம்மைகளைப் பார்த்தார். உடனே தன் வகுப்பு மாணவர்களைப் போல் பொம்மைகள் செய்தால் என்ன என்று தோன்றியது. ஆனால், அவருக்குப் பொம்மை செய்யத் தெரியாது. இணையத்தில் பொம்மைகள் செய்வது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டார். ஒரு மாணவருக்கு ஒரு பொம்மை வீதம் 23 மாணவர்களுக்கு 23 பொம்மைகளைச் செய்ய முடிவெடுத்தார்.
10 செ.மீ. உயரம் உள்ள ஒரு பொம்மையைச் செய்வதற்கு 4 மணி நேரம் ஆனது. மாணவர்களின் படங்களைப் பார்த்து, அது அவர்கள் பொம்மைதான் என்று கண்டுபிடிக்கும் விதத்தில் அடையாளத்தோடு பொம்மைகளைச் செய்து முடித்தார். ஒவ்வொரு பொம்மைக்கும் முடி, உடை, கண்ணாடி போன்றவற்றில் வித்தியாசம் காட்டப்பட்டிருந்தது. அந்தப் பொம்மைகளை மொபைலில் படம் எடுத்து மாணவர்களுக்கு அனுப்பி வைத்தார். தங்களையும் தங்கள் நண்பர்களையும் அடையாளம் கண்டு, மாணவர்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
ஆசிரியரின் பொம்மையும் வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் விருப்பப்படியே தன்னைப் போல் ஒரு பொம்மை செய்து, படம் எடுத்து அனுப்பி வைத்தார், இங்போர்க். தங்களின் அன்புக்குரிய ஆசிரியரையும் அவர் உருவாக்கிய தங்கள் பொம்மைகளையும் நேரில் காண்பதற்காகப் பள்ளி திறக்கும் நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் அந்த மாணவர்கள்.